‘ஆன்மீக உளவியல்’ எனும் கற்பனை எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (6)

‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.

புதிர் 10: உப்டோன் பியல் சின்கிலைர் என்ற அமெரிக்க எழுத்தாளர், தன்னுடைய துணைவி மேரி கிரெய்க்குக்கு, Telepathy (நுண்ணுணர்வு) இருப்பதை அறிந்து கொண்டு, நுண்ணுணர்வில் ஆய்வு செய்தார். தன்னுடைய துணைவிக்கு நுண்ணுணர்வு திறனால் கிடைத்த அனுபவங்களை, “Mental Radio” என்ற பெயரில் நூலாக வெளி யிட்டார். தன் வீட்டுக்கு வரும் பல முக்கிய பிரமுகர் களுக்கு, தன் துணைவியின் நுண்ணுணர்வுத் திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். இதனால், அறிவியலை மிஞ்சிய ஆன்மீக உளவியல் உண்டு என்பது உறுதியாகிறது.

விடை: எவ்வளவோ சோதனைகளை நடத்திய போதும், நுண்ணுணர்வை நிரூபிக்க ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்ற உண்மையை டால்க்விஸ்ட் (1994), ஹோக்கார்ட் (1995), ராபர்ட் கோகன் (1998), டெரென்ஸ் ஹைன்ஸ் (2003) ஆகிய பேராசிரியர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அமேரிக்க தேசிய ஆராய்ச்சிக் குழு, “130 ஆண்டுகால ஆராய்ச்சியில் நுண்ணுணர்வை நிரூபிக்கு ம் சான்று ஒன்றும் இல்லை என்று அறிவித்துள்ளது. ஆன்மீக உளவியலையே (Para Psychology) போலி அறிவியல் என்று மருத்துவ உலகம் பிரகடனப்படுத்து கிறது.

இவ்வாறாக ஆன்மீக உளவியல் என்ற கற்பனையை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் மத்தியில், தாங்கள் செய்வது மந்திரமல்ல, தந்திரமே! என்று முரசறைபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகை யோருள் ஒருவர் ஹேரி ஹவ்டினி. உலோகத்தால் செய்யப்பட்ட பூட்டு களையும், கை விலங்குகளையும் சர்வ சாதாரணமாக உடைப்பதில் வல்லவர். 1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி சான் ஃப்ரான்சிஸ்கோ நகர போலீஸ் தலைமையகத்தில், அவருடைய சவாலை ஏற்று, காவல்துறையினர் அவரை நிர்வாணமாக்கி, அவர் உடலில் ஏதாவது மறைக்கப்பட்டிருக்கிறதா என்று பரி சோதித்த பின், அவருடைய கைகளை பின்னால் இணைத்து, 10 விலங்குகளால் அவரைப் பூட்டினர்.

கைகள் மற்றும் முழங் கால்கள் பல சங்கிலி களால் கோர்க்கப்பட்டு, அவற்றின் மீது பூட்டுகள் போடப் பட்டன. அவரை ஒரு சிறை அறையில் அடைத்து வைத்து விட்டு, வெளியே பூட்டு போட்டனர். யாரும் எதிர் பார்க்காத வண்ணம், 10 நிமிடங்களில், அனைத்து பூட்டுகளிலிருந்தும், விலங்கு களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, கம்பீரமாக வெளியே வந்தார் ஹேரி ஹவ்டினி. அவர் நினைத்திருந்தால், தன்னிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று கூறி, மக்களை ஏமாற்றி பிழைத்திருக்க முடியும். ஆனால், சீரிய பகுத்தறி வாளரான அவர், அதைச் செய்யவில்லை.

மாறாக, தனக்கு தெரிந்த மந்திர (தந்திர) வித்தைகளை பயன்படுத்தி, யாரெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டினார். “Scientific American” (அறிவியல் அமெரிக்கன்) என்ற அமைப்பில் இணைந்து போலி மதகுருக்களின், போலி அறிவியலாளர் களின் மந்திர தந்திரங்களை அம்பலப் படுத்தி பகுத்தறிவுத் தொண்டாற்றி மறைந்தார்.

(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)

(தொடரும்)

பெரியார் முழக்கம் 05052022 இதழ்

You may also like...