‘கடவுளே’ கோயில் கட்டினாலும் நீதிமன்றம் அகற்றும்!

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.  நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோயில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி பாப்பாயி என்பவர் நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் கோயிலுக்கு எதிராக உத்தரவு வந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பொது பாதையில் கோயில் நிர்வாகம் கட்டுமானங்களை கட்டியுள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டுமானங்களை கட்டக்கூடாது என்று பல வழக்குகளில் உத்தரவிடப்பட் டுள்ளது. பொதுசாலையை யார் ஆக்கிரமித்தாலும், அது கோயிலாக இருந்தாலும், அதை தடுக்க வேண்டும். கோயில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது.

பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுங்கள் என்று எந்த கடவுளும் கேட்பதில்லை. கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால் அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும். கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது. ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோயில்கள் உள்ள நிலையில் பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டுவதை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

 

பெரியார் முழக்கம் 31032022 இதழ்

You may also like...