தலையங்கம் இது ‘சுதந்திர’ நாடா?

75ஆவது சுதந்திர தினத்தை திருவிழாவாக்கி, அந்த விழாவையும் தங்கள் ஆட்சிக்கு பெருமை சேர்க்கத் துடிக்கும் ஆட்சி, உண்மையான ஒரு சுதந்திர நாட்டுக்கான ஆட்சியைத்தான் நடத்துகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. முதல் கேள்வி இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலையில் மாநில உரிமைகளை ஒன்றிய ஆட்சி அங்கீகரிக்கிறதா?

காஷ்மீர் என்ற மாநிலத்தையே அழித்து யூனியன் பிரதேசமாக்கிவிட்டது. மாநிலப் பட்டியலில் வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களான கல்வி, வரிவிதிப்பு, விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல், மின்சாரம் போன்ற துறைகளை ஒன்றிய ஆட்சி பறித்துக் கொண்டு மாநிலங்கள் மீது தனது ‘ஒற்றை பாரதம்’ கொள்கையைத் திணிக்கிறது.

மொழி வழியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களை ‘பாரதிய தேசியமாக்க’ சமஸ்கிருதப் பண்பாடுகள் கீதை, வேதம், ராமன் கோயில்களை குறியீடுகளாக்கி மாநில மொழி இன அடையாளங்களை ‘சனாதன தர்ம’ வட்டத்துக்குள் மூழ்கச் செய்கிறது.

மாநிலங்களைக் கலந்து ஆலோசித்து திட்டங்களையும் நிதியையும் ஒதுக்குவதற்கு உருவாக்கப்பட்டது தான் திட்டக் குழு. அதைக் கலைத்து விட்டு ‘நிதி அயோக்’ என்ற அமைப்பை உருவாக்கி விட்டனர். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரங்களைப் பெற்ற தேர்தல் ஆணையம், சி.பி.அய்., அமலாக்கத் துறை-வருமான வரித் துறைகள் ஆளும் கட்சியின் அரசியலுக்கு ஒரு சார்பாகப் பயன் படுத்தப்படுகிறது.

சுதந்திர நாட்டின் மற்றொரு அடையாளம் ஜனநாய கத்தைப் பாதுகாப்பது ஆகும். அது சமூக ஜனநாய கத்தையும் உள்ளடக்கியது. ஆனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சமச்சீராக வளர்ச்சிப் பெற விடாமல் ஒன்றிய அதிகாரம் கட்சி நலனுக்கேற்ப பாகுபாடு காட்டுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை ‘குதிரை பேரம்’ மற்றும் ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி கவிழ்த்து, தங்களது ஆட்சிகளாக மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

‘மனித வள மேம்பாடு’ என்பதே உண்மையான சுதந்திரத்தின் அளவுகோல்; எல்லைகளில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு முரண்பாடுகளை வளர்ப்பதும் அதற்காக இராணுவத்துக்கு பெருமளவில் நிதியை ஒதுக்குவதும் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி வருகிறோம் என்ற ‘தேசபக்தி’ உணர்வைத் தூண்டி விடுவதும் சுதந்திரத்தின் அடையாளமாகி விட முடியாது. தேர்தலில் வாக்குகளைக் குவிக்கவும், மக்களை  அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பவும் ‘தேச பக்தியை’ அதுவும் ‘இந்துராஷ்டிர தேசபக்தியை’ ஒரு கருவியாகப் பயன்படுத்துவது, மனித வள மேம்பாட்டுக்கு உதவாது. சொல்லப்போனால் தேச பக்தியும் விற்பனை சரக்காக மாற்றப்பட்டுவிட்டது

அரசுத் துறை நிறுவனங்களை முறைகேடாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது, ஒரு நாட்டின் தொழில் கட்டமைப்பை சிதைப்பதாகும். நாட்டின் பொருளா தாரத்தை பெரும் தொழிலதிபர்கள் நிர்ணயித்துக் கொள்வதற்கு அதிகாரமளிப்பது எப்படி ஒரு சுதந்திர நாட்டுக்கான அடையாளமாக இருக்க முடியும்?

இவ்வளவு தடைகளையும் எதிர்கொண்டு மனித வள மேம்பாட்டில் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் ஓப்பீட்டளவில் வளர்ச்சியைப் பதிவு செய் திருப்பதை ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஆகஸ்ட் 8) வெளி வந்த ஒரு கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் கேரளா விலும் நடந்த சமூக மாற்றங்களே இதை சாத்தியப்படுத்தி யிருக்கின்றன என்று அக்கட்டுரை கூறுகிறது (கூhந ளரயீநசiடிச hரஅயn னநஎநடடியீஅநவே iனேiஉயவடிசள டிக கூயஅடையேனர யனே முநசயடய hயஎந கடிடடடிறநன வாளை ளுடிஉயைட கூசயளேகடிசஅயவiடிn) என்று அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குறிப்பிடுகிறார். ஆனாலும் ஜாதிப் பிரச்சினை, பெண்கள் மீதான கொடுமைகள் இந்த மாநிலங்களில் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

கல்வி உரிமை மற்றும் பெண்களை  அதிகாரப் படுத்துதலில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருவது மறுக்க முடியாத உண்மை. விளிம்பு நிலை மக்களை அதிகாரமயமாக்கி அவர்களை சுயமரியாதை வாழ்க்கையோடு பிணைத்து வைக்கும் அரசின் திட்டங்களை ‘இலவசங்கள்’ என்றும் அது வழங்கப்படக் கூடாது என்றும் பிரதமர் மோடி பேசி வருவதோடு உச்சநீதிமன்றமும் அடித்தட்டு மக்களின் வாழ்நிலை பற்றிய புரிதல் இன்றி தன்னிச்சையாக இலவச ஒழிப்பதற்கான ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது சுதந்திரத்தை மேலும் பின்னோக்கி இழுத்துச் செல்லவே பயன்படும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசின் நிதி பல்லாயிரம் கோடியில் ‘தள்ளுபடி’, ‘வரிச் சலுகை’, ‘உற்பத்தி ஊக்குவிப்பு’ என்று வாரி வழங்குவது ‘மோடி இராஜ்யத்தில்’ இலவசங்கள் என்ற பட்டியலில் இடம் பெறாதா? இலவசங்கள் தான் இவர்கள் கண்களை உறுத்துமா? என்ற கேள்வியோடுதான் 75ஆவது சுதந்திர தினத்தின் கொடி இந்தியாவில் பறக்கப் போகிறது!

பெரியார் முழக்கம் 11082022 இதழ்

 

 

You may also like...