கழகம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி: பெரியார் நூல்களை அரசே வெளியிடுகிறது

பெரியாருடைய சிந்தனைகளை 21 மாநில, உலக மொழிகளில் வெளியிடு வதற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளிவந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்கிறது.

பெரியாருடைய நூல்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும், இந்தியா முழுவதும் பரவ வேண்டும். மக்களுக்கு அவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார் திராவிடர் கழகம் நீண்ட போராட்டத்தை நடத்தியது.

28 தொகுப்பாக பெரியார் எழுத்து சிந்தனைகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வந்தன. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அந்த வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கை பெரியார் திராவிடர் கழகம் எதிர்கொண்டது. அப்படி பெரியாருடைய நூல்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மேல் அமர்வு தெரிவித்துவட்டன.

அந்த வழக்கு இப்போதும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வெளிடக்கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கிய காரணத்தினால் பெரியாருடைய சிந்தனைகள் இன்று பல்வேறு பதிப்பகங்களால் பல இலட்சக்கணக்கில் வெளியிடப்பட்டு பல மக்களிடையே சென்று சேர்ந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசும் அந்த முயற்சிகளை மேற்கொண்டு வட இந்தியாவிற்கும் பெரியார் தேவைப்படுகிற காலத்தில் இந்தி உட்பட

21 மொழிகளில் மொழிபெயர்க்க முன் வந்திருப்பது உண்மையிலேயே பெரியாரியலுக்கு செய்கின்ற மகத்தான தொண்டு. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

அதேபோல, கடந்த 10 ஆண்டுகளாக கேட்பாரற்று முடங்கிக் கிடந்த பெரியார் சமத்துவபுரங்களை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தக சந்தைகள், இலக்கிய விழாக்கள் நடத்துவதற்கு அரசு முன்வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நிலை பற்றாக்குறை குறைந்துள்ளது என்ற அறிவிப்பும் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி வரவேற்போம்.

 

பெரியார் முழக்கம் 24032022 இதழ்

You may also like...