4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே!
உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றிருக்கிறது என்று தேர்தலுக்குப் பிறகு வந்த ஆய்வுகள் தெளிவு படுத்தி இருக்கின்றன. இது குறித்து 12.03.2022 ஆங்கில இந்து நாளேடு விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மத அடிப்படையில் மிக எளிதாக மக்களை அணிதிரட்டக் கூடிய வாய்ப்புகள் இருந்ததே அடிப்படையான காரணம். இந்த மத அணி திரட்டலுக்கு ஜாதி ஜாதியாக தனித்தனி பிரிவாக அணிதிரட்ட முடிந்ததும் ஒரு அடிப்படையான காரணம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமின்றி மோடி ஆட்சிக்கு இந்த மாநிலங்களில் செல்வாக்கு இருக்கின்றது, மாநிலங்களில் உள்ள தலைவர்களை விட மோடி ஆட்சி மேல் அதிக நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அந்தத் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு வழங்காமல் அதற்கான பணத்தை நேரடியாக அனுப்பி வைத்ததும் ஒரு முக்கிய காரணம் என்றும் ஆய்வு கூறுகிறது. ஆனாலும், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுவிட்டதனால் நாடே பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக சில ஏடுகள் கற்பனையில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.
நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மட்டுமே பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது. பாஜக முற்றிலுமாக துடைத்து எரியப்பட்ட மாநிலங்களும் இருக்கின்றன. சிக்கிம், மிசோராம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடையாது, வெறும் பூஜ்ஜியம் தான். ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளில் வெறும் 4 தான் பாஜக. கேரளாவில் 140 இல் 1 தான் பாஜக. பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தான் பாஜக. உத்தரகாண்டில் 294 சட்டமன்ற தொகுதிகளில் 3 தான் பாஜக. தெலுங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகளில் 5 தான் பாஜக. டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளில் 8 தான் பாஜக. ஒரிஸ்சாவில் 147 சட்டமன்ற தொகுதிகளில் 10 தான் பாஜக. நாகாலாந்தில் 60 சட்டமன்ற தொகுதிகளில் 12 தான் பாஜக.
பாஜகவின் கூட்டணியில் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் பாஜகவின் நிலை என்ன ? மேகாலாயாவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு 60 சட்டமன்ற தொகுதிகளில் 2 தான் பாஜக. பீகாரில் 243 தொகுதிகளில் 53 தான் பாஜக. ஜம்மு காஷ்மீரில் 87 சட்டமன்ற தொகுதிகளில் 25 தான் பாஜக. மொத்தமுள்ள 4139 சட்டமன்ற உறுப்பினர்களில் இந்தியா முழுவதும் பாஜகவின் எண்ணிக்கை 1516 தான். இந்த 1516 ம் கூட உ.பி, இராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும்தானே தவிர மற்ற மாநிலங்களில் இல்லை. 66ரூ இடங்களில் இந்தியாவில் பாஜக தோல்வி முகத்தில் தான் உள்ளது. இந்த உண்மைகளை ஊடகங்கள் முற்றிலுமாக மறைத்துவிட்டு பாஜக வெற்றி கொடி கட்டி பறக்கிறது. அடுத்த ஆண்டும் அது தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று பொய்யான கற்பனை செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன. உத்திரப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வலிமையாக காலூன்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மத அடிப்படையிலான அணிதிரட்டல்களுக்கு எதிராக சமூக நீதிக் கோட்பாடுகளை, மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னெடுத்து மக்களை அணிதிரட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது. தமிழ்நாட்டு மாடல், திராவிடன் மாடலை பின்பற்றினால் அங்கு நிச்சயம் பாஜவை வெல்ல முடியும் என்பது தான் முடிந்த தேர்தல்கள் உணர்த்தியிருக்கிற செய்தி.
பெரியார் முழக்கம் 17032022 இதழ்