தலையங்கம் அண்ணா தொடங்கிய ‘திராவிடன் மாடல்’

1967 மார்ச் 6, அண்ணா தலைமையில் பார்ப்பனரல்லாத அமைச்சரவை கடவுள் பெயரால் உறுதி ஏற்காமல், ‘உளமாற’ என்ற உச்சரிப்போடு தமிழ்நாட்டில் பதவி யேற்று திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்டது. 55 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றன.

இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே தேர்தலுக்கான கூட்டணி என்ற நடைமுறையை உருவாக்கிக் காட்டியவர் அண்ணா. காமராசரை வீழ்த்த அண்ணாவைப் பயன்படுத்திக் கொள்ள இராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி, தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தது. பெரியார் உறுதியாக காமராசரை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, “பெரியாரின் கொள்கையிலிருந்து அண்ணா விலகி வந்து விட்டார்; ‘பெருங்காய டப்பா’வாகத்தான் இருக்கிறார். பெரியார் கொள்கையான ‘பெருங்காயம்’ இப்போது அண்ணாவிடம் இல்லை” என்று தனது பார்ப்பன சமூகத்துக்கு உறுதியளித்தார்.

தேர்தலில் 137 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்தது. ஆச்சாரியாரை கைவிட்டு அண்ணா பெரியாரை சந்திக்க திருச்சிக்கு தனது முக்கிய அமைச்சர்களுடன் வந்து விட்டார். தி.மு.க., சுதந்திரா கட்சியின் ‘தேனிலவு’ முடிந்து விட்டது என்று ஆச்சாரியார் கூறினார். ‘ஆமாம்; உண்மையான வாழ்க்கை பெரியாருடன் தொடங்குகிறது’ என்று பதிலளித்தார் அண்ணா. வரலாற்றிலே திராவிடத்திடம் ஆரியம் ஏமாந்து நின்ற சாதனையை நிகழ்த்தினார் அண்ணா. பெரியார் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம்; தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை; தமிழ்நாட்டுக்கு – தமிழ்நாடு என்று பெயர் சூட்டல் என்று முப்பெரும்  சாதனைகளை செய்து காட்டிய அண்ணா, இனி எதிர்காலத்தில் இந்த மூன்று திட்டங்களையும் ஒழித்துவிட்டு எவரும் ஆட்சி செய்ய முடியாது; இத்திட்டங்கள் நீடிக்கும் வரை அது அண்ணாத்துரை ஆட்சி தான் என்று பூரிப்போடு அறிவித்தார். அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் அகற்றப்பட்டன. மத்திய அமைச்சர் காஞ்சிபுரம் கோயில் தரிசனத்துக்கு வந்தபோது அண்ணாவை உடன்வர அழைத்தபோது அண்ணா மறுத்துவிட்டார். அறநிலையத் துறை அமைச்சரான சீரிய பகுத்தறிவுவாதி நாவலர் நெடுஞ்செழியன், சிதம்பரம் நடராசன் கோயிலை சோதனையிடச் சென்றபோது தீட்சதர்கள் வழங்கிய விபூதியை ஏற்க மறுத்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பெரியாருக்கு, ‘தியாகிகள் மான்யம்’ வழங்கப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சட்டசபையில் கேட்டபோது, ‘இந்த அமைச்சரவையையே பெரியாருக்கு காணிக்கையாக்கியிருக்கிறோம்’ என்றார் அண்ணா.

1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன்முதல் கைப்பற்றியது. அப்போது அண்ணா தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்.  மாநகராட்சிக் கட்டிடத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பு அங்கே சிலையாக நிற்கும் சர். பிட்டி தியாகராயருக்கு ஆளுயர மாலை அணிவித்து “மகானே! நீங்கள் தான் எங்கள் தமிழர் சமுதாயத்துக்கு அறிவூட்டினீர்கள்; உங்களின் வழி வந்தவர்கள் நாங்கள்; நாங்கள் உங்களை மறக்கவில்லை என்று வீரவணக்கம் செலுத்திவிட்டு கடமையாற்றிடப் புறப்படுங்கள்” என்று எழுதினார்.

வடநாட்டு ஆதிக்கத்திலிருந்து தென்னாட்டை விடுவித்துக் கொள்ள திராவிட சமதர்ம கூட்டரசு எனும் இன வழி கூடி, மொழி வழி பிரிந்து அமையும் பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய திராவிட சமதர்ம கூட்டரசை முன்மொழிந்த அண்ணா, காலத்தின் சூழல் கருதி மாநில சுயாட்சியை முன் வைத்தார்.

ஒரு தேசம் என்பது எல்லைகளால் தீர்மானிக்கப்படுவது அல்ல; அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் உரிமைகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்திய தேசத்துக்கு மாற்றாக மதவாத தேசியத்தை ‘அகண்ட பாரதம்’ பேசி வந்தது ஆர்.எஸ்.எஸ்.

மொழி வழி மாகாணங்கள் பிரிவினை நடந்த பிறகும் மதவாதத்தில் ஊறிப் போன வடமாநிலங்கள் அது குறித்த விழிப்புணர்வைப்பெறவில்லை. பார்ப்பனிய சனாதன பிற்போக்கு சிந்தனையிலேயே மூழ்கிக் கிடந்த ன. உ.பி. அரசிடம் பெயர் சூட்டுவது குறித்து மொழி வழிப் பிரிவினைக்கான ஆணையம் கருத்து கேட்டது. இந்துஸ்தான் என்ற பெயரை முதலில் கூறினார்கள்; நேரு ஏற்க மறுத்தார். பிறகு ‘ஆரிய விரத்’ என்ற பெயரை பரிந்துரைத்தார்கள்; அதுவும் ஏற்கப்படவில்லை. பிறகு ‘இராமராஜ்யம்’ என்ற பெயரை பரிந்துரைத்தார்கள்; அதுவும் ஏற்கப்படாத நிலையில் நேருவே ‘உத்திர பிரதேசம்’ என்ற பெயரைப் பரிந்துரைத்தார். (ஆதாரம்: அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆய்வறிஞர் பிரேரிணாசிங் கட்டுரை – ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்)

இந்தியாவே உ.பி. தான் அதுவும் இந்து தேசமே இந்தியா என்ற மனநிலையில் உ.பி. மட்டுமல்ல; இந்தி பேசும் ‘பசு மாட்டுப் பிரதேசங்களின்’ மனநிலையாகவே இருந்தது; இப்போதும் இருக்கிறது. மாறாக அண்ணா இறுதி வரை மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தார். இறுதி காலத்தில் ‘காஞ்சி’ பொங்கல் மலருக்கு (1969) எழுதிய கட்டுரையிலும் மாநில சுயாட்சியையே வலியுறுத்தினார்.

ஒற்றை ஆட்சியை நோக்கிய இலக்குடன் ஒன்றிய ஆட்சி அவசர அவசரமாக மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் சூழலில் முன்னெப்போதையும் விட அண்ணா முன்மொழிந்த மாநில சுயாட்சி கோரிக்கையை இப்போது வலியுறுத்த வேண்டியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்ணா ஆட்சி அமைத்த நாள் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘இனப் பகைவரும் மற்றும்  அவர் தம் கூலிகளும் எத்தனை அரிதாரம் பூசி வந்தாலும், பெரியார்-அண்ணா-கலைஞர் காட்டிய வழியில் தமிழ்நிலத்தை வாளும் கேடயமுhய் நின்று தி.மு.க. காக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கூறிய அந்த இனப் பகைவர்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தமிழகக் கல்வி உரிமையைப் பறிக்கிறார்கள். நீட், ஜிஎஸ்.டி., சமஸ்கிருத-இந்தித் திணிப்புகள் தொடருகின்றன. தமிழக முதல்வர் மக்கள் பேராதரவோடு அண்ணாவின் கொள்கைப் பாதையில் தமிழ்நாட்டின் தொழில் – கல்வி – பொருளாதாரம் – சமூக நலத்துக்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இது கேடயம்; ஒன்றிய ஆட்சியோடு உரிமைக்குப் போராடுகிறார்; இது வாள்; பா.ஜ.க. அல்லாத மாநில முதல்வர்களை தலைவர்களை ஒரே குடையின் கீழ் அணி திரட்டும் முதல்வரின் முயற்சிகள் ஒன்றிய ஆட்சிக்கு நடுக்கத்தை உருவாக்குகின்றன. பெரியார் பேசிய சுயமரியாதை அடையாளம்; சமூக நீதிக் கோட் பாடு; தன்னாட்சி இலக்குகள்; இப்போது காலத்தின் தேவையாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ‘நீட்’ எதிர்ப்புக் குரல் கருநாடகத்திலிருந்து கேட்கிறது. ஆளுநர் அதிகாரங்களைப் பறிக்க வேண்டும் என்று கேரளாவும் மேற்கு வங்கமும் களத்தில் இறங்கியிருக்கிறது. புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிறார், தெலுங்கானா முதல்வர். தமிழ்நாடு தான் வழிகாட்ட வேண்டும் என்கிறார் ராகுல் காந்தி.

அண்ணாவின் ஆட்சி தமிழ்நாட்டில் தொடங்கி வைத்த திராவிட இயக்கக் கொள்கைகள், ஏனைய மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ‘கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு’ என்று தொண்டர்களுக்கு ஒழுக்க நெறிகளை வரையறுத்தார் அண்ணா; அந்த முழக்கங்களுடன் ‘சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம்’ என்ற கொள்கை இலக்கையும் இப்போது இணைத்து, திராவிடர் இயக்கம் தன்னை மேலும் செழுமையாக்கியிருக்கிறது. இதுவே அண்ணா காட்டிய திராவிடன் மாடல்!

பெரியார் முழக்கம் 10032022 இதழ்

You may also like...