கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

.கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது அவதூறுகளை பரப்பி முகநூல், யூ டியூப் போன்றவைகளில் நேரலையாக பதிவிட்ட தமிழச்சி, சாரதா, தாமரை தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் மீது இந்திய தண்டனைச் சட்டம் 190 (i) (a) மற்றும் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கை, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி பதிவு செய்துள்ளார். வழக்கை வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெருநகர நீதிபதி முன்பு பதிவு செய்துள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம்,சில தனி நபர்கள் மீதான பாலியல் முறைகேடு குறித்து தான் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரை கொளத்தூர் மணி விசாரிக்கவில்லை என்று கூறி அவர் குற்றவாளியை தப்பிக்க வைக்க முயற்சிப்பதாக தமிழச்சி என்பவர் எழும்பூர் நீதிமன்ற வாயிலில் நின்று வீடியோ பதிவு ஒன்றை முகநூலில் நேரலையாக பதிவிட்டார். அதில் ‘நாளை திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தின் முன் சிறப்பான சம்பவம் ஒன்றை நான் செய்யப்போகிறேன்’ என்றும் அறிவித்து இருந்தார். அப்போது அவருடன் சாரதா என்பவர் உடனிருந்து உதவினார்.

திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் ‘சிறப்பான சம்பவம் ஒன்று செய்யப் போகிறேன்’ என்று அறிவித்ததை தொடர்ந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்புடைய மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தமிழச்சி,சாரதா இருவரும் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலக வாயிலில் நின்று கொண்டு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும், திராவிடர் விடுதலைக் கழகத்தையும் கடுமையாக தாக்கி அவதூறுகளை பேசி, முகநூல் வழியாக நேரலையாக பதிவிட்டனர்.

அப்போது இரா.உமாபதி, “நான் இப்படி அவதூறுகளை பேசி அலுவலகம் வாயிலில் பேசுவதை நிறுத்துங்கள் என்று கூறினேன்” என்று உமாபதி தனது வழக்கில் தெரிவித்துள்ளார். தமிழச்சி கழகத் தலைவர் மீதும் கழகத்தின் மீதும் உண்மைக்கு புறம்பான அவதூறுகளை மிக மோசமான மொழிகளில் திட்டியதை அந்தப் பகுதி மக்கள் மற்றும் அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அனைவரும் நின்று கேட்டனர். நேரலை வழியாகவும் பரப்பப்பட்டதால் பெரியார் கொள்கைகளுக்காக உழைத்து வரும் ஒரு தலைவருக்கும், அவரது கழகத்திற்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளார். “நான் ஒரு பெரியாரிஸ்ட். என் மீது புகார் (காவல்துறையில்) கொடுத்தது கொளத்தூர் மணி தூண்டுதலில் தான் நடைபெற்றுள்ளது. அவர் இனி அரசியல் செய்யவே முடியாது. ஒரு பாலியல் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவரிடம் புகார் அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்” என்று தமிழச்சி பேசி நேரலையில் ஒளிபரப்பினார். அதற்கு சாரதா என்பவரும் உறுதுணையாக இருந்தார். “பெரியார் பெயரை வச்சிகிட்டு திருட்டுத்தனம் பண்ணிகிட்டு இருக்கானுங்க ” என்றும் தமிழச்சி பேசியிருக்கிறார்.

இத்தகைய அவதூறு பேச்சுக்களால் நாங்கள் ஏற்றுக்கொண்ட மதிப்புமிக்கத் தலைவரையும் நான் சார்ந்துள்ள கழகத்தையும் அவமானபடுத்திய போது நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று உமாபதி தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். அவதூறு பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தமிழச்சி பேசியதை, அது உண்மைதானா என்று ஆராயாமல், ஊடகத்திற்குரிய அறம் நேர்மையை பின்பற்றாமல் தமிழச்சி, சாரதா ஆகியோரின் அவதூறுகளுக்கு உடன்பட்டு தாமரை தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் இதை ஒளிபரப்பியது. அதற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மீது உண்மைக்கு மாறான, அவருக்கு தொடர்பே இல்லாத குற்றச்சாட்டையும் இணைத்து ஒளிபரப்பியது.

எனவே, இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனைச் சட்டம் 499 ன் கீழ் குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 500 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்கு உள்ளதாகும். எனவே, நீதிமன்றம், தமிழச்சி, சாரதா, தாமரை தொலைக்காட்சி, தாமரை யூ டியூப் ஆகிய நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதோடு, இழப்பீடாக 25 இலட்சத்தையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று உமாபதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...