தலையங்கம் அன்று ‘சமஸ்கிருதம்’ இன்று ‘நீட்’
‘நீட்’ எனும் வடிகட்டும் நுழைவுத் தேர்வு முறை – மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்தும் என்ற வாதத்தை மறுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் சரியான விளக்கங்களை முன் வைத்துள்ளார். ஒரு மாணவர், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டாலே, அவர் மருத்துவர் ஆக முடியாது. தனது படிப்புக் காலம் முழுதும் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக முடியும். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மருத்துவர்கள் உலகம் புகழும் மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் நீட் தேர்வு முறை வழியாக மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பயிற்சி மய்யங்களுக்குப் போய் பெரும் பொருட் செலவில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு ஆண்டு பயிற்சியில் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகாலம் தேவைப்படுகிறது” என்று நீட் உருவாக்கும் சமூகத் தடைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார், தமிழக முதல்வர்.
இத்தகைய சமூகத் தடைகளைத் தகர்த்துத் தான் பார்ப்பனரல்லாத மாணவர்கள் மருத்துவம் படிக்க முடிந்திருக்கிறது என்பதை கடந்தகால வரலாறுகள் கூறுகின்றன.
கடந்த பிப்.4, 2022, ‘இந்து’ ஆங்கில நாளேடு, தமிழ்நாடு குறித்த செய்தியில் (Focus) ஒரு வரலாற்றுப் பதிவை வெளியிட்டிருக்கிறது. சமஸ்கிருதம் ஒரு முன் நிபந்தனை (Sanskirit as Prerequisite ) என்ற தலைப்பில் வந்துள்ள செய்தி:
“சென்னை மாகாணத்தில் மருத்துப் படிப்பில் சேருவதற்கு சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்ற முன் நிபந்தனை இருந்தது. சமஸ்கிருதம் தெரியாத மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இது ஒரு தடை. இந்த நிபந்தனை நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர், இராமராயநிங்கார் முதல்வராக இருந்தபோது நீக்கப்பட்டது” என்று அந்த செய்தி கூறுகிறது. தனது குடும்பத்தைச் சேர்ந்த மாணவருக்கு, சமஸ்கிருதம் தெரியாத காரணத்தால் மருத்துவம் பயில முடியாமல் போய் விட்டது என்று தமிழறிஞரும் நீதிக்கட்சி செயலாளராக இருந்தவருமான கி.ஆ.பெ. விசுவநாதம், தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று நீட் தடை என்றால் அன்று சமஸ்கிருதம் தடையாக இருந்தது.
‘நீட்’ வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறுகிறார். ‘நீட்’ இல்லாவிட்டால், கிராமப் புற ஏழை – எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைக்கு நேர் எதிரான கருத்தை எவ்வித தரவுகளுமின்றி முன் வைத்து தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை திருப்பி அனுப்புகிறார். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மசோதா எதிராக இருந்தால் திருப்பி அனுப்பலாம் என்று அரசியல் சட்டத்தின் 200 பிரிவு கூறுகிறது. அந்தப் பிரிவை தவறாகப் பயன்படுத்தவும் ஆளுநர் தயங்கவில்லை. மைனாரிட்டி கல்வி நிறுவனமான வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி ‘நீட்’டிலிருந்து விலக்குக் கேட்டு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், கல்லூரி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து ‘நீட்’ அந்தக் கல்லூரிக்கு தேவை என்று தீர்ப்பு அளித்தது. இப்போது தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மசோதாவுடன் அந்த வழக்கை இணைப்பது முறையற்றது என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சந்துரு உள்பட பல சட்ட நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்குத் தான் நீட் கொண்டு வரப்பட்டது என்ற வாதமும் அர்த்தமிழந்து விட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் ‘நீட்’ தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்கள் பெறாமல் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் சேர்க்கலாம் என்று விதிவிலக்கு தரப்பட்டு விட்டதால் கட்டணக் கொள்ளைக்கு தாராளமாக கதவு திறந்து விடப்பட்டுள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்றவரும், பணம் இருந்தால் போதும் இடம் கிடைத்து விடும். அதே நேரத்தில் அரசுக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பை நீட் பறித்து விட்டது. பயிற்சி மய்யங்களில் பெரும் கட்டணம் செலுத்தி ஓராண்டுக்கு மேல் காத்திருந்து குறைந்தது 2 முறை தேர்வு எழுதும் மாணவர்களே அரசு மருத்துவக் கல்லூரியில் சே முடியும். 7.5 சதவீத அரசுப் பள்ளி இடஒதுக்கீட்டின் வழியாகப் படிக்க வரும் மாணவர்கள்கூட ‘நீட்’ தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எல்லாவற்றையும்விட ஒரு மாநில அரசுக்கு தனக்கான கல்விக் கெள்கையை வகுத்துக் கொள்ளும் உரிமையை ஒன்றிய ஆட்சி பறிக்கக் கூடாது; தமிழ்நாடு தனக்கான கல்விக் கொள்கைகளை இலவசக் கல்வி, சத்துணவு, இலவசப் பாட நூல், இலவசப் பேருந்துப் பயணம், இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச கணினி போன்ற கட்டமைப்புகளால் தனது கல்விக் கெள்கையை சமூக நீதியோடு பிணைத்து வளர்த்தெடுத்து பிற மாநிலங்களுக்கே வழிகாட்டி வருகிறது. எனவே இந்தக் கல்விக் கொள்கையின் உயிர்த் துடிப்பாக இயங்கும் சமூக நீதியைக் குலைக்க வந்த ‘நீட்’ என்ற போட்டித் தேர்வு முறையை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்பதுதான் தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வு. இதை டெல்லி ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் முழக்கம் 10022022 இதழ்