நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளி நகரம் சார்பாக, 26.12.2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டம் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆனந்த் குழுவினருடன் வீதி நாடகமும் நடைபெற்றது.

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவல்லி அன்பு, ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஊஞஐ நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது ரயீஸ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உரையாற்றினார்கள். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

கூட்டத்திற்கு மேட்டூர், மேட்டூர் சுளு, கொளத்தூர், காவலாண்டியூர், சேலம், இளம்பிள்ளை, தார்க்காடு பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர். நங்கவள்ளி பகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணன்,  இராஜேந்திரன் மற்றும் சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவல்லி அன்பு, நங்கவள்ளி பகுதி தலைவர் கண்ணன், செயலாளர் பிரபாகரன் ஆகியோருடன் இணைந்து நங்கவள்ளி பகுதி தோழர்கள் சிறப்பான கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நங்கவள்ளி பகுதி முழுவதும் நினைவு நாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

கோவை மாவட்டக் கழக சார்பில் கழக ஏட்டுக்கு 265 சந்தாக்கள்: கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பொள்ளாச்சி பகுதியில் பர்வானா அரங்கத்தில் உள்ள மடத்துக்குளம் மோகன் நினைவு அரங்கத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில் 30.12.2021 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆனைமலை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வினோதினி வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார். கண்ணையன் கொள்கைப் பாடல்களை பாடினார். தமிழ்நாடு திராவிடர் கழகம் கா.சு.நாகராசன்,  மக்கள் விடுதலை முன்னணி மாரிமுத்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்  பாரதி, ஆதித்தமிழர் பேரவை வானுகன் ஆகிய தோழர்கள் கருத்துரை யாற்றினார்கள். சிறப்புரையாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி – தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரின் ஒப்பீட்டு ஆய்வுரையை நிகழ்த்தினார்.

7.11.2021 அன்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் கூட்டு முயற்சியில்  நவம்பர் 15 முதல் டிசம்பர் 30 வரை சேர்த்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா 265 சேர்த்து  முதல் தவணை தொகையாக  ரூ. 30,000/-த்தை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார்.

மடத்துக்குளம் பகுதிகளின் சார்பாக 5 ஆயிரம் ரூபாயை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் சிவானந்தம் வழங்கினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகம்சபரிகிரி நன்றி உரையாற்றினார். நிகழ்வில் ஆசிரியர் சிவகாமி, பாண்டியநாதன், மாதவன் சங்கர், கிருஷ்ணன், அரிதாசு, சிவா ,ஆனந்த், மணி, விவேக், சக்திவேல் சந்தோஷ், திராவிடர் முருகன், விஷ்ணு, பிரபாகரன்  உள்ளிட்ட  பல தோழர்கள்  கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 06012022 இதழ்

You may also like...