தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

‘தமிழ் இந்து’- வின் ஊடக அறம் இது தானா ?

கடந்த காலங்களில் அரசு நியமிக்கும் குழுக்கள், கட்சி காரர்களுக்கு பதவி தருவதற்கே பயன்படுத்தப்பட்டன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதில் பண்பு மாற்றங்களை செய்து வருகிறது. துறை சார்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இது குறித்து தமிழ் இந்து நாளேடு (19.11.2021) எழுதியுள்ள தலையங்கம் ஊடக அறத்தை புறம் தள்ளி அரசுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறது.

‘சென்னை பெருநகர வெள்ளச் சேத தணிப்பு மேலான்மைகள்’ மற்றும் மேலான்மைகளுக்கான அறிவுரை குழுமத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்புகழ் நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலான்மையில் மிகச் சிறந்த அனுபவம் பெற்ற இவர், குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவரது நம்பிக்கைக்குரிய அதிகாரியாக செயல்பட்டார். மோடி பிரதமரானவுடன் அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ள, டெல்லிக்கு அழைத்து பேரிடர் மேலான்மை துறையில் முக்கியப் பொறுப்பை வழங்கினார். இந்த அரசியல் பின்புலங்களை விட அவரது திறமையும், அனுபவமும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவரை பேரிடர் மேலான்மை குழுவின் முக்கிய பொறுப்பாளராக அமர்த்தியுள்ளார்.

அதே போல நீட் தேர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஏ.கே.இராஜன் தலைமையிலான குழுவில் இடதுசாரி சிந்தனையாளர்களான மருத்துவர் இரவீந்தர்நாத், எஸ்.ஜவஹர் நேசன் ஆகியோரையும், சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி இரவீந்தர்நாத், ஆதி திராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் அரசை, கண்களை மூடிக்கொண்டு அப்படியே ஆதரிப்பவர்கள் அல்ல. கடும் விமர்சனத்தை வெளிப்படுத்த தயங்காதவர்கள். தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையை சமரசமின்றி போராட்டக் களத்திலும், உரிமைக் குரல் எழுப்புவதிலும் உறுதியாக நின்றவர்கள்.

தமிழ் இந்து நாளேடு சில குழு உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அதில் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. உண்மையில் இந்த நியமனங்கள் அவர்களது திறமைகளை பயன்படுத்துவதானால் வரவேற்கத்தக்கது தான், என்று கூறிவிட்டு அதைத் தொடர்ந்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறது. “அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அவர்களை அரசு நியமிக்கும் குழுக்களில் உள்ளடக்கி அமைதிப்படுத்தும் முயற்சியாக அது இருந்துவிடக்கூடாது” என்று தலையங்கத்தை முடித்திருக்கிறது. அரசை விமர்சிப்பவர்களை அமைதிப்படுத்துகிறதா திமுக ? என்பது அந்தத் தலையங்கத்திற்கு சூட்டப்பட்டுள்ள தலைப்பு.

ஆளும் கட்சி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் வரிசையில் எங்கள் நாளேட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான் இந்த தலையங்கம் தெரிவிக்கிற செய்தி. அதுமட்டுமின்றி அரசுக் குழுக்களில் பதவி வழங்கி விட்டதாலேயே இந்த சமரசமற்ற கொள்கையாளர்கள் ஆட்சி அரசிடம் சரண்டைந்து விடுவார்கள் என்று அவர்களை இந்த தலையங்கம் அவமதிப்பதாகவும் இருக்கிறது.

தமிழ் இந்து தொடங்கிய காலத்தில்
அது போர்த்திக் கொண்ட முற்போக்கு அடையாளங்கள் கடந்த சில ஆண்டுகளாக தலைகீழாக மாறி நிற்பதை வாசகர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதைத்தான் இன்றைய தமிழ் இந்துவின் தலையங்கமும் உறுதிபடுத்தியிருக்கிறது.

You may also like...