1. சீதை

அடுத்தாற்போல் சீதையின் யோக்கிதையைப் பற்றி சிறிது ஆராய்வோம். இராமாயணக் கதை முழுவதிலுமே சீதையைப் போற்றத் தகுந்த இடம் மிக அரிதாகவே இருக்கிறது.

  1. சீதையின் பிறவியே சந்தேகத்திற்கு இடமானது. (இராமனைவிட மூத்தவள்)
  2. சீதை “நான் புழுதியில் கிடந்தவளானதால் என்குலம் தெரியாத. . . . .பக்குவம் அடைந்த பிறகும் என்னை மணம் செய்து கொள்ள பலநாள் வரை யாரும் வரவில்லை” என்று சொல்லுகிறாள்.
  3. கல்யாணமான சிறிது நாட்களிலேயே பரதனால் வெறுக்கப்பட்டு விட்டாள்.
  4. இதை இராமனும், “நீ பரதனால் போற்றத்தகுந்தவளல்ல.” என்று சொல்லிவிட்டான்.
  5. இதை சீதையும் “என்னை வெறுக்கும் பரதனிடம் நான் இருக்க மாட்டேன்” என்று சொல்வதன் மூலம் ஒப்புக்கொள்கிறாள்.
  6. கணவனை “அற்பன்” என்கிறாள்.
  7. “நீ வேஷத்தில் ஆணே ஒழிய காரியத்தில் உம்மிடம் ஆண்மை இல்லை” என்கிறாள்.
  8. “உன்னிடத்தில் ஒரு சக்தியும் ஒரு தன்மையும் தேஜசும் இல்லை” என்கிறாள்.
  9. “தன் மனைவியைப் பிறனுக்கு விட்டு அதனால் பிழைக்கும் கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறருக்குக் கொடுத்து பயன்பெறக் கருதுகிறாயே” என்கிறாள்.
  10. இராமன் சீதைமேல் அடிக்கடி சந்தேகப்படுவதாக அறிந்து “ராமா, நான் நீயே கதி; உன்னிடத்திலேயே அன்பாய் இருக்கிறேன் என்று எத்தனைதரம் சத்தியம் செய்தாலும் என்னை நம்பமாட்டேன் என்று, என்மீது சந்தேகப்படுகிறாயே” என்கிறாள்.
  11. இராமன் “உன்னை சோதித்துப் பார்த்தேன்” என்கிறான்.
  12. இராமன் சீதையின் ஆடம்பரத்தையும் பேதமைத் தன்மையையும் பார்த்து “நீ காட்டுக்கு வருவதாய் இருந்தால் உன் நகைகளைக் கழற்றிவிட்டு வா” என்று சொல்லியிருக்கிறான்.
  13. சீதை முதலில் கழற்றி விட்டு மறுபடியும் வேறு நகைகளை பூட்டி அலங்கரித்துக் கொள்ளுகிறாள்.
  14. இதைப் பார்த்த கோசலை சீதையை “பதிவிரதைபோல் நடந்து கொள் புருஷன் வார்த்தையை அலட்சியம் செய்யாதே” என்று சொன்னால் சீதை “இதெல்லாம் எனக்குத் தெரியும்” என்று மாமியை அலட்சியமாய் பேசுகிறாளே ஒழிய நகையை கழற்றவில்லை.
  15. இராம லட்சூமணர்கள் மரவுரி உடுத்திக் கொண்டபோது சீதை உடுத்திக் கொள்ள இஷ்டப் படவில்லை.
  16. இதைக் கண்ட பெண்கள் பரிதாபப்பட்டு “சீதையை விட்டு விட்டுப் போங்கள்” என்று சொல்ல கைகேயி அதை அனுமதிக்காத தாலேயே இராமன் சீதைக்கு வலிய மரவுரி உடுத்தி அழைத்துக் கொண்டு போகிறான்.
  17. அப்பொழுதும் சீதை அதை ஏற்காமல் நல்ல ஆடைகள் ஆபரணங்களுடனேதான் விட்டுப் போகிறான். ஆகவே சீதை காட்டுக்குப் போனது பரதன் வெருப்புக் கொண்டதும், கைகேயி சீதை நாட்டில் இருப்பதற்கு அனுமதிக்காததும்தான் முக்கிய காரணங்களாய் காணப் படுகின்றன.
  18. சீதை நதியைக் கடக்கும்போது “திரும்பவும் அயோத்தி வந்து சேர்ந்தால் 1000 பசுவும், 1000 குடம் கள்ளும் வைத்து பூசிக்கிறேன்” என்று நதியைப் பிரார்த்தனை செய்கிறாள்.
  19. சீதையும் தங்களுக்கு காட்டில் ஆபத்து வரும் என்று பயந்தபோதெல்லாம் “கைகேயி மனம் குளிரும், கைகேயி திருப்தி அடைவாள்” என்று மனதில் கைகேயி மீதுள்ள வெருப்பை காட்டிக் கொள்ளுகிறாள்.

20.சீதை காணாமல் போய்விட்டதற்காக இராமன் வருந்தும் போது “ஒரு சாதாரணப் பெண்ணுக்காக இப்படி வருந்தலாமா” என்று இலக்குவன் அலட்சியமாய் சொல்லுகிறான்.

  1. இலக்குவன் சீதையை “கெட்ட நடத்தை உள்ளவள்” என்று சொல்லி இருக்கிறான்.

22.சீதைக்கு ஆபத்து வந்து விடுமே என்று கருதி அவளைத் தனியே விட்டு போகத் தயங்கிய லட்சுமணனை அட பாவி என்னை கைப்பற்றக் கருதி இராமன் சாகட்டும் என்று பேசாமல் இருக்கிறாயா? இதற்காகத்தான் எங்கள் கூட யோக்கியன் போல வந்தாயா? அட சண்டாளா நீ என் மீது ஆசை வைத்து இராமனைக் கொல்ல நினைக்கிறாய். பரதன் உன்னை எங்களோடு இதற்காகவே அனுப்பினானா? நீயாவது, பரதனாவது என்னை அனுபவிக்க நான் ஒப்ப மாட்டேன்” என்கிறாள்.

  1. இலக்குவன் “தாயே இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று வணக்கமாகச் சொல்லும் போது அதற்கும் சீதை “ஏ. வஞ்சகா, இப்படியாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று பார்க்கிறாயா?” என்கிறாள்.
  2. இராவணன் சீதையைத் தூக்கிப் போக வந்தபோது சீதையைப் பார்த்துக் காதலித்து அவள் அழகில் மயங்கி, சீதையின் கொங்கை, துடை முதலிய உறுப்புகளை வர்ணித்து சல்லாபம் பேசும் போது, அவனை அலட்சியம் செய்யாமல், கடிந்து பேசாமல் அவனுக்கு உபசாரம் செய்து தன்னுடைய பெறுமையையும் இளமையையும் மிகைப்படுத்தி, தனது வயதைக் குறைத்துமே சொல்லுகிறாள்.
  3. இராவணன் தன்னை அரக்கர் தலைவன் என்றும், இராவணன் என்றும் சொன்னபிறகே அவனை வெறுக்கிறாள்.
  4. இராவணன் சீதையைத் தூக்கி மடியில் வைத்து அணைத்துக் கொண்டு போகும் போது, தனது மேலாடையை எடுத்து எறிந்துவிட்டு அரை நிர்வாணமாய் இருக்கிறாள்.
  5. இராவணன் மாளிகைக்குச் சென்றபோது மோகம் கொண்டு விட்டாள்.
  6. அங்கு அவன் “என்னோடு கூடிக் களிக்கவா” என்கிறான். . .சீதை கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர் விடுகிறாள்.
  7. உடனே இராவணன் “சீதா, உனக்கு என்னோடு ஏற்பட்ட இந்த சம்மந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது முனிவருக்கு சம்மதமானது.” என்று சொல்லுகிறான். இந்த சமயத்தில், “நீ என் உடலை எப்படியானாலும், கட்டிக் கொள், எனக்கு இந்த தேசத்தைக் காக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தவறி நடந்தேன் என்கின்ற அபவாதம் மாத்திரம் வரக் கூடாது.” என்கிறாள். இதிலிருந்து சீதை இராவணனிடம் கலவி செய்ய தானாக சம்மதிக்கவில்லை என்றுதான் கருதமுடிகிறது.
  8. இதை உறுதிப்படுத்தும் தன்மையாகவே, சீதை இராமனுக்கு சொல்லும் பதிலும் இருக்கிறது. அதாவது, இராமன் சீதையைப்பார்த்து “இராவணன் உன்னை அனுபவிக்காமல் விட்டிருப் பானா?” என்றபோது
  9. “உண்மைதான் நான் என்ன செய்வோன். பலம் இல்லாதவள். என் சரீரம் அவன் வசப்பட்டிருந்தது. நான் மனவிருப்பத்தோடு . . . . . செய்யவில்லை. மனம் உன்னிடம் தான் இருந்தது. தெய்வ சங்கல்பத்தால் நேர்ந்து விட்டது.” என்று சொல்லி இருக்கிறாளே ஒழிய “இராவணன் என்னை அனுபவிக்கவில்லை” என்று கூட சொல்லவே இல்லை.
  10. சீதை கர்ப்பமாய் இருப்பதைக் கண்டு மறுபடியும் சந்தேகித்து ஊரார் மீது சாக்குப் போட்டு சீதையை லட்சுமணனால் காட்டில் விடச் செய்கிறான. அப்போது சீதையை லட்சுமணனுக்கு தலை வயிற்றைக் காட்டி “நான் கர்ப்பமாய் இருக்கிறேன் பார்” என்று சொல்லுகிறாள்.
  11. காட்டில் சீதைக்கு இரண்டு குழந்தைகள், ஏற்படுகின்றன.
  12. கடைசியாக இராமன் சத்தியம் கேட்கின்ற போது, சீதை சத்தியம் செய்யாமல் இறந்து போகிறாள்.

குடி அரசு – கட்டுரை – 01. 01. 1944