கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

*கறுப்பு ஜூலை !*
தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

– திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி அறிக்கை !*

இலங்கையில் 1983-ல் நடைபெற்ற இந்த மறக்கவியலா வரலாற்று பேரவலமான தமிழர்கள் மீதான அழிப்பு நடவடிக்கையின் 37 ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

ஆண்டுகள் இத்தனை கடந்தாலும் அன்று தமிழர்கள் மீது நடந்தப்பட்ட கொடூர தாக்குதல்கள்,ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுகள் ஆறாத வடுக்களாக இன்னமும் உலகத் தமிழர் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது.

ஒவ்வொரு வருடம் ஜூலை மாதமும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் அளவிற்கு இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் கோர தாக்குதல் குறித்து இத்தலைமுறையும் அறிந்து கொள்வது அவசியம்.

தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாக பார்க்காமல் அதன் வரலாற்று பின்னணி,
விடுதலைப் போராட்டத்தின் தேவை,
ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ள அப்போது நடந்த கொடுமையான நிகழ்வுகளை மீண்டும் நினைவுப்படுத்துவது அவசியமான ஒன்று என்றே கருதுகிறோம்.

இலங்கை 1948ல் விடுதலை அடைந்ததாக சொல்லப்பட்டது என்பது ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கை சிங்கள பெளத்த பேரினவாதிகளிடம் மாற்றப்பட்டது என்பதே ஆகும். அப்போது முதல், சிங்கள இனவெறி அரசால் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கும் திட்டங்கள் மெதுமெதுவாக அரங்கேற்றப்பட்டன.

அரசியல் உரிமை பறிப்பு,
கல்வி உரிமை மறுப்பு,
தரப்படுத்துதல் சட்டம்
என்று தொடங்கி, நேரடியான தாக்குதல்கள்,
தமிழர்கள் உயிர் வாழும் உரிமையைக் கூட கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு தொடர்ந்து நடைபெற்றன.

1956 – கல்லோயா குடியேற்றத்திட்ட வன்முறை 150 தமிழர்கள் கொலை
1958 – பொலன்னறுவையில் 300 தமிழர்கள் கொலை
1974 – யாழ்ப்பாண உலக தமிழாராய்ச்சி மாநாடு – 11 தமிழர்கள் கொலை
1977 – அனுராதபுரம் தாக்குதல் – 500 தமிழர்கள் கொலை
1981 – யாழ்ப்பாண நூலக எரிப்பு – 1 லட்சம் நூல்கள் தீக்கிரை – 7 தமிழர்கள் கொலை.
என நீண்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை 1983 ஜூலை மாதம் உச்சகட்டத்தை எட்டியது.

இலங்கை கொழும்பு மற்றும் தெற்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தால் துவங்கிவைக்கப்பட்ட திட்டமிட்ட வன்முறை நாடு முழுவதும் தீயாய் பரவியது.

1983 ஜூலை மாதம் 23ம் தேதிக்கு பிறகு
இலங்கை அரசால் ஒரு  திட்டமிட்ட தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. அப்போது அதிபராக இருந்த J.R.ஜெயவர்த்தன இத்தாக்குதலை மறைமுகமாக இயக்கினார்.

தமிழர்கள் கொழும்பு  தெருக்களில் வேட்டையாடப்பட்டார்கள்.தமிழர் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
வீடுகள் சூறையாடப்பட்டன.
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
முதியவர் குழந்தைகள் பெண்கள் என வேறுபாடு இன்றி தெருக்களில் நிர்வாணமாக்கப்பட்டு அடித்தும் , வெட்டியும், உயிரோடு தீ வைத்தும் கொல்லப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு தமிழர்கள் அடையாளம் காணப்பட்டு,வீடு வீடாக தேடித்தேடி கொல்லப்பட்டார்கள்.
இது ஒரு அரச பயங்கரவாதம்.
குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசே இப்படுகொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றியது.மக்களைக் காக்க வேண்டிய இராணுவம், காவல்துறை சிங்கள வெறியர்களுடன் சேர்ந்து கொண்டு ஆளும் அமைச்சர்கள் வழிநடத்துதலில்  தமிழர்களைக் கொன்றனர்.

கறுப்பு ஜூலை தாக்குதலில் 3000த்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.25,000 தமிழர்கள் கொடுங்காயப் படுத்தப்பட்டனர்.5000 தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. 8000 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.1.5 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர்.

இது நாடு முழுவதும் பரவி மலையகத் தமிழர்கள் மீதும் தாக்குதல் ஆரம்பமானது. தேயிலைத் தோட்டங்களில் தாக்குதல்கள்.தேயிலை ஆலைகள் தீக்கிரை என கட்டுகடங்காமல பரவியது.

இந்த கறுப்பு ஜூலை கொடூர இன அழிப்பிற்குப் பிறகுதான் தமிழர்கள் இனி சிங்கள பேரினவாத அரசில் தங்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு இல்லை என்கிற திடமான முடிவுக்கு வர வேண்டியிருந்தது. அதன் காரணமாக தங்கள் உயிரை காத்துக் கொள்ள ஆயுத போராட்டத்தை தீவீரமாக நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

இந்த கறுப்பு ஜூலை கொடூர இன அழிப்பிற்கு காரணம் என சிங்கள இன வெறியர்கள் ஒரு சம்பவத்தை சாக்காக சுட்டிகாட்டுவதை வழக்கமாக வைத்திருந்திறார்கள்.

அது பலாலியில் இருந்து புலிகளைக் கொல்ல வந்த அந்த சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் 23.07.1983 இரவு 11.35 மணிக்கு யாழ்பாணம் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்தி 13 சிங்கள இராணுவத்தினரைக் கொன்றார்கள் என்பதே ஆகும். இத்தாக்குதலில் காயம் அடைந்த இருவர் பிறகு இறந்தனர்.மொத்தம் 11 இராணுவத்தினர்.புலிகள் தரப்பில் லெப்.செல்லக்கிளி அம்மான் வீரச்சாவடைந்தார்.

இத்தாக்குதலில் பேரதிர்ச்சி அடைந்த சிங்கள இனவெறி அரசு தன் மோசமான பின்னடைவை திசை திருப்பவும், சிங்களர்களுக்கு அரசின் இயலாமையை மறைக்கவும், விடுதலைப் புலிகளின் இராணுவ வளர்ச்சியை  ஜீரணிக்க முடியாமலும் அடுத்த நாள் இலங்கை தெற்கு பகுதியில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீது திட்டமிட்ட தாக்குதலைத் திடீரென்று நடத்தியது.

இன அழிப்பிற்கான சூழலுக்காக காத்திருந்த சிங்கள இனவெறி அரசிற்கு இது ஒரு சாக்காக பயன்பட்டது. இச்சூழலைப் பயன்படுத்த நினைத்த ஜெயவர்த்தன அரசு இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்களைக் கொழும்பிற்கு அதுவும் இரத்தக்கறையுடன் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து
சிங்கள மக்களை வெறியேற்றி  தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த வைக்க திட்டமிட்டு அதனைச் சரியாகவும் அரங்கேற்றியது.அதன் தொடர்ச்சி சிறை வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராளித் தலைவர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரைக் கொன்றொழிக்கும் அளவுக்கு சென்றது.

இனவெறியைத் தூண்டி அதன் மூலம் சிங்கள மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த அப்போட்டியில் ஜெயவர்தனேவும், அவரது அரசியல் எதிரி ஸ்ரீமாவோவும் ஒன்றுபோலவே தமிழர்களுக்கு எதிராக
சிங்கள இனவெறியைத் தூண்டினார்கள்.

இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள் கொழும்பிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பிறகு அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க இயலாத அளவிற்கு தமிழர்களின் மீதான தாக்குதல்கள் வன்முறை சம்பவங்கள் கொழும்பின் உச்சத்தை எட்டிக் கொண்டிருந்தது.

தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த புத்த பிக்கு ஒருவர் தமிழர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார் என்றும், கொழும்பின் மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் பொய்யான பரப்புரைகளைத்   தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியையும், கோபத்தையும்,ஆத்திரத்தையும் சிங்கள அரசே தூண்டிவிட்டது.

பிறகு இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டப் பின் இந்தத் தாக்குதல் இன்னும் தீவிரமடைந்து.

பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் வேட்டையாடப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனை நினைவு கூறும் நிகழ்வே கருப்பு ஜூலை என்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் மீதான இப்படுகொலைத் தாக்குதல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் கொதித்தெழுந்து சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான கண்டனக் குரல்களையும் போராட்டங்களையும் தெருவெங்கும் நடத்தினார்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறி பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பது வரலாறு.

கறுப்பு ஜூலையின் இந்த வரலாற்று நினைவுகளை நாம் மீண்டும் நினைவூட்டுவதன் மூலமும்,
2009ன் இன அழிப்பின் கொடூரத்தின் மூலமாகவும்,
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் இனத்திற்கு நீதி கிடைக்கவும்,இலங்கை சிங்கள அரசின் மீதான போர்க்குற்ற விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டவும்,
இன அழிப்புக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப்  பெற்றுத்தரவும்,
ஈழத்தில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை எட்ட ஐநா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதன் வழியாக அமைதியான, கண்ணியமான
குடிமக்களாக வாழ வைக்கவும் முனைந்து செயல்படுமாறு சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்துவதும்,
அதற்கான அரசியல் நகர்வு நடவடிக்கைகளைத் தொய்வின்றி
முன்னெடுக்கவும்,
இது போன்ற இரத்தம் தோய்ந்த வரலாற்று நினைவுகள் நம்மை மீண்டும் மீண்டும் உந்தித் தள்ளும்.

கருப்பு ஜூலை நினைவுகளை அணையாமல் காப்போம் !
அதன் மூலம்
அடுத்த தலைமுறை தமிழ்ச் சமூகத்தின் விடுதலை உணர்வை வளர்த்தெடுப்போம் !

= *கொளத்தூர் மணி*
*தலைவர்*,
*திராவிடர் விடுதலைக் கழகம்*

23.07.2021.

You may also like...