இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றாலே ‘ஊபா’ சட்டத்தை ஏவுவதா? கழகத் தலைவர் கண்டனம்
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கேரள போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் கொல்லப்பட்டார்.
அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது. அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக தோழர்கள் சிலர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. அவர்கள் மீது மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் சேலத்தில் 07.02.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன் (41), தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன் (66) இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் அடக்குமுறை ‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சமூக விரோத வன்முறை காவி கும்பல்கள் சர்வ சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும் பாஜக அதிமுக அரசுகள், தோழர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக மிகக் கொடும் சட்டத்தின் கீழ் மனித உரிமை செயல்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது. விசாரணை வாரியம் முன் நிறுத்தி சட்டம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை விசாரிக்கும் உரிமையும் கிடையாது.
பாஜக – அதிமுக அரசுகள், காவி பாசிசம் வீழ்த்தப்பட களத்தில் நின்ற தோழர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
தோழர்கள் மீது பொய்யாக போடப்பட்டுள்ள கொடுஞ்சட்டங்களை திரும்பப் பெற தமிழக அரசை வலியுறுத்துவோம்.
தமிழக அரசே, தோழர் பாலன், சீனிவாசன் மீது போடப்பட்டுள்ள ஊபா சட்ட வழக்கை திரும்பப்பெறு! அவர்களை உடனடியாக விடுதலை செய் !
பெரியார் முழக்கம் 11022021 இதழ்