உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது!

ஜாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கு இத்தீர்ப்பு துணிச்சலைக் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது!

திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை :

2016 மார்ச் 13 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்தார் என்கின்ற ஒரே காரணத்திற்காக உடுமலையில் பட்டப்பகலில் நடுவீதியில் சங்கர் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். அவர் காதலித்து திருமணம் செய்த கௌசல்யா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்.
அதனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சங்கரைப் படுகொலை செய்தனர் என்பது தான் இந்த படுகொலைக்கும் கௌசல்யா மீதான கொடூர கொலை முயற்சி தாக்குதலுக்கும் அடிப்படையான காரணம். இது கொலை வழக்கு மட்டுமல்ல கொலை செய்யும் நோக்கில் கொடுங்காயம் ஏற்படுத்திய கொலை முயற்சி வழக்கும் கூட.

இதற்கு ஜாதிய ஏற்றதாழ்வுகள் மட்டுமே காரணம். சங்கரைப் படுகொலை செய்யும் அளவிற்கான ஜாதிவெறியும், தேவையும், நோக்கமும் கவுசல்யாவின் குடும்பத்தினருக்குத்தான் இருந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள கூலிப்படையினர், யாருடைய தூண்டுதலும் இல்லாமல தாங்களாவே முன்வந்து இந்த கொலையை செய்வதாக நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது மிக வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

சங்கர் படுகொலையைப் பார்த்து இந்த நாடே அதிர்ச்சி அடைந்தது. இந்த கொலை வழக்கின் தீர்ப்பு திருப்பூர் கீழமை நீதிமன்த்தில்் 2017 டிசம்பர் 6 தேதி வழங்கப்பட்டது இதில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தாயார் தாய்மாமன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

பிறகு இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சென்றது சென்னை உயர்நீதிமன்றம் தற்பொழுது 22.6.2020 அன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பின் முக்கிய சாரம் கொலைக்கான கூட்டுசதி நிரூபிக்கப் படவில்லை என்பதும், சந்தேகத்திற்கிடமின்றி கொலையை செய்தவர்கள் இவர்கள் தான் என்று நிரூபிக்க பட்டவர்கள் வயதை காரணம் காட்டி தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதும் ஆகும்.

கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி க்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டு இருப்பதுதான் இந்த தீர்ப்பில் மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.
மரண தண்டனை கூடாது என்பது நம் நிலைப்பாடு என்றாலும் கூட தண்டனையே கூடாது என்பது நம் நிலைப்பாடு அல்ல.
அவர் குற்றவாளி அல்ல என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நமக்கு ஏற்புடையதும் அல்ல.

இந்த ஜாதி ஆணவப் படுகொலை கௌசல்யாவின் குடும்பத்தினரால் திட்டமிடப்படடாமல், கூலிப்படையினர் அவர்களாகவே இதனை செய்திருப்பார்கள் என்பதை எவர் ஒருவரும் நம்ப மாட்டார்.

இந்தக் கொலை நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து, கூட்டு சதி செய்து, திட்டமிட்டு நிறைவேற கௌசல்யா குடும்பத்தினருக்குத்தான் தேவையும் இருந்திருக்க முடியும் என்பது மேலோட்டமாய் பார்ப்பவர் கூட அறிந்து கொள்ள முடியும்.

இப்போது கௌசல்யா குடும்பத்தில் தந்தை தாய்,தாய்மாமா போன்றோர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டு இருப்பது ஜாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கு சட்டத்தின் மீது உள்ள அச்சத்தை போக்கி விடுமோ என்று நாம் அச்சப்படுகிறோம்.
இது போன்ற ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன.

உச்சநீதிமன்றம் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது குறித்து பல்வேறு அறிவுரைகளை ஏற்கனவே வழங்கியுள்ளது. நாடாளுமன்றமும் ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்றுவது குறித்து மாநிலங்களுக்கு கருத்து கேட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு தென் மாநிலங்களில் தமிழ்நாடு மட்டும் தான் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது என அறிகிறோம்.
உடனடியாக இதுகுறித்து தமிழக அரச தன்னுடைய நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கொரோனா காலத்திலும் கூட ஜாதி வெறியர்கள் ஜாதி ஆணவப்படுகொலைகளை செய்து வருகின்ற இந்த மோசமான சூழலில் இந்த தீர்ப்பு மேலும் ஜாதி ஆணவ படுகொலை செய்பவர்களுக்கு சாதகமாகி விடக்கூடாது. இதனை தடுக்க தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை் பெற்றுக் கொடுக்கும் தீர்ப்பு, ஜாதி ஆணவ படுகொலை செய்பவர்களுக்கு அச்சத்தையும்
கடும் எச்சரிக்கையையும் விடுக்கும் வகையில் இருக்கவேண்டும்.

மேலும் மாநில அளவில்கூட தமிழக அரசு ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்ற முடியும். அது இப்பொழுது கட்டாயத் தேவை என்பதையும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

திராவிடர் விடுதலைக் கழகம்,
23.06.2020

You may also like...