விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்
விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம்,
திராவிடர்விடுதலைக் கழகம் கடும் கண்டனம்.
இந்த சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு திவிக முழு ஆதரவு !
இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :
விகடன் பத்திரிக்கை குழுமம் 170 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சியை விகடன் குழு கொடுப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
1947ம் ஆண்டு தொழில் தகராறு சட்டப்படி இது சட்ட விரோத நடவடிக்கையாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீதை பிறப்பித்திருந்தது இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கக் கூடாது என்பதோடு அவர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்று மத்திய அரசின் சுற்றறிக்கை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் விகடன் குழுமத்தின் இந்த நடவடிக்கை தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும்.
இதற்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் தீவிரமான முன்முயற்சிகளை எடுத்து இந்த வேலை நீக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம் இந்த முயற்சிக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை வழங்குகிறது. விகடன் குழுமம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து இந்த தொழிலாளர்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் தமிழின உணர்வாளர்களின் ஒருமித்த வேண்டுகோள் ஆகும்.
– #விடுதலை_ராஜேந்தின்,
#பொதுச்_செயலாளர்,
#திராவிடர்_விடுதலைக்_கழகம்
22.05.2020