இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10
காட்சி – 10
இடம் : கிட்கிந்தையில் ஒரு மலை அடிவாரம்
பாத்திரங்கள் : அனுமன், அங்கதன், சாம்பவந்தன், மற்றும் பலர்
அனு : நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் மட்டும் சம்பாதி முனிவன் சொன்ன விவரப்படி இலங்கை சென்று சீதாபிராட்டியாரைக் கண்டு திரும்புகிறேன். நான் வருகிறவரையில் வேறு எங்கும் போகாதீர்கள்.
அங்க : *ஆமாம்! (* கி.கா. 53-ம் சருக்கம் 1-2 55-ம் சருக்கம் 1-16) சீதையைக் காணாமல் நாம் சுக்ரீவனையோ ராமனையோ பார்ப்பதற்கில்லை. அந்தக் கொடியவர்கள் குணம்தான் நாம் அறிந்ததாயிற்றே.
அனு : நான் எப்படியும் சீதையைக் கண்டே திரும்புகிறேன்.
அங்க : அனும! நீ எப்படி இலங்கைக்குப் போவாய்?
அனு : இலங்கைக்குப் போவது முடியாத காரியமென்று நினைத்துவிட்டாயா அங்கதா?
அங்க : இடையிலே பெருங்கடல் இருக்கிறதாமே!
அனு : இல்லை! அனுபவமில்லாதவர்கள் – ஆய்ந்து பார்க்கத் திறனில்லாதவர்கள் கட்டிய கதையப்பா அது எனது. – அனுபவப்படி தமிழகமும் இலங்கையும் ஒரு காலத்தில் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. இடையிலே உண்டாகிய கடல் கோளினால் சிற்சில பகுதிகளிலே மட்டும் பூமியைக் கடல் நீர் பிளந்து சென்றிருக்கிறது. அவற்றைக் கடப்பது வெகு சுலபம். அதிலும் நீந்தும் திறன் பெற்ற எனக்கு மிக எளிது.
சாம் : அப்படியா? இவ்வளவு காலமும் அறியாது போனோமே!
அனு : சரி, நான் போய் வருகிறேன். ஜெய் ஸ்ரீராம்
[போகிறான்]