இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

காட்சி – 3

இடம் : தண்டகாரண்யம்

பாத்திரங்கள் : ராமன் சீதை, லட்சுமணன்

(சீதை, நடுவிலிருக்க, ராமனும், லட்சுமணனும் இருபக்கங்களிலும் இருந்து கொண்டு கொஞ்சி குலவிக் கொண்டு; மூங்கில் குழாய்களில் மதுவை ஊற்றி மூவரும் அருந்திக் கொண்டிருக்கின்றனர்.)

ராமன் : (போதையுடன்) லட்சுமணா! மது (சீதையைக் காட்டி) மாது மனுஷனுக்கு வேறு என்னடா வேணும்…?

லட்சுமணன் : எனக்குத் தெரியாது அண்ணா ?

ராமன் : என்னடா உளர்றே!

லட்சுமணன் : (குடித்துக் கொண்டே எனக்குப் பாதி சுகம்தானே அண்ணா தெரியுது. (சீதையைப் பார்த்துக்கொண்டே ஒன்னு இல்லையே. (சீதை முறைக்கிறாள்.)

ராமன் : (உடனே) சீதா – உம் நீ ஒன்னு போட்டுப் பாரேன்.. இல்லேன்னா நீயும் அசுர வம்சத்தைச் சேர்ந்தவளாயிடுவே சுராபானத்தின் சுகம் வேறு எதிலே இருக்கு? சாப்பிடு சீதே…. சும்மா சாப்பிடு.

[சீதையிடம் கொடுக்க அவள் வாங்கிக் குடிக்கிறாள்.)

லட்சுமணன் : என்ன அண்ணா ! சீதைக்கு கோபம் வரும் படியா பேசுறே!

ராமன் : அது இல்லேடா… அசடே. இதைக் குடிக்கும் நாம் சுரர். குடிக்காதவர் அசுரர். எப்படி! அடாடாடா! நமது முனிகளின் ஆராய்ச்சியே ஆராய்ச்சி? தம்பீ கண்ணைச் சுத்துதுடா… நான் கடவுளாகப் போறேண்டா… சீதையை நீ கவனிச்சுக்கோடா

[கையைத் தூக்கி சீதையின் தோளில் போடுகிறான்.

[இப்பேது அரசாங்க வீரன் விராதன் அங்கு வருகிறான்.]

விராதன் : ஏய் யாரடா நீங்க; குடிகாரப் பசங்க. இது மது அருந்தாத பிரதேசம் என்பதை மறுந்துவிட்டீர்களோ, மடையர்களே! இரண்டு தடிப்பயல்கள் குடித்துவிட்டு, ஒரு பெண்ணையா பலாத்காரம் செய்கிறீர்கள்? (“வாரா.ஆ. காண்டம், 2ம் சருக்கம் 1-15 )

ராமன் : லட்சுமணா இப்போ என்ன நடக்குது? இவன் யாரு?

விராதன் : யாரா அரசாங்க சேவகன்; அயோக்கியர்களை அரசியிடம் பிடித்துப் போக வந்துள்ளேன்.

சீதை : அய்யய்யோ …!

ராமன் : அலறாதே சீதா! டேய்! நாங்க எப்படியும் இருப்போம். அது எங்க இஷ்டம்டா; ஏண்டா வீணா தொந்தரவு கொடுக்கறே….

விராதன் : இது நாடோடிகளின் காடல்ல நீங்கள் எப்படியும் கூத்தடிக்க; நல்ல ஆட்சிக்குட்பட்ட தமிழகத்தின் பகுதி.

ராமன் : சரிதாண்டா ஒங்க ஆட்சியும் நீங்களும்… நாங்கள் ஆரியர்கள், இப்படித்தான் குடிப்போம்…. ஒரு பெண்னை இரண்டு பேர் என்ன, நூறுபேர் கூட வச்சுக்குவோம் அது எங்கள் பழக்கம்… உரிமை. உனக்குக் கேட்க அதிகாரமில்லை போடா…

விராதன் : குடிகாரா… அதிகமாவா பேசறே உன்னை என்ன செய்கிறேன் பார்.

[ராமனைப் பிடிக்க அருகில் வருகிறான். அப்போது லட்சுமணன் அவனை முதுகில் அம்பினால் குத்தி வீழ்த்தி விடுகிறான்.]

ராமன் : சபாஷ்! தம்பி, நம்பவேலையே இந்தப் பசங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது.

சீதை : தம்பியைப் புகழுங்க! நீங்க ஆளுதான் ஆம்பளையே தவிர உங்ககிட்ட ஆண்மையே இல்லை.

ராமன் : என்னடி, உண்மையையெல்லாம் தைரியமாக வெளியே உட ஆரம்பிச்சுட்டே…. உம் லட்சுமணா… அண்ணி அதிகமாப் பேசுது… நீ போயி நம்ப பர்ண சாலையிலே ஏதாவது பாக்கி இருந்தா கட்டு… போ . வருங்காலத்திலே இந்த அசுரப் பசங்களோட நாட்டிலெல்லாம், உம்பேருதான் அடிபடப் போவுது. ராட்சசப் பசங்க பெரிய பெரிய நகரங்களையும், அணைகளையும் கட்டி இருக்கிறார்கள். எவன் புகழ்வான் அவன்களை? நீ போடா தம்பி, நமக்கு ஏராளமா இருக்காங்க ரிஷிங்க இருக்கிறதும் இல்லாததுமா எழுதிக் குவிக்க. [இலட்சுமணன் போனதும் ] என்ன சீதை…. இதுக்குதான் நீ அயோத்தியிலே இருக்க மாட்டேன்னு ஒடியாந்தே போலிருக்கு. என்னமோ வயதிலும் அனுபவத்திலும் உன்னைவிட நான் ரொம்ப சின்னவன்… கோவிச்சுக்காதே.

சீதை : அயோத்திப் பெண்களைக் கேட்டா போதுமே. உங்க அனுபவம் எப்படீன்னு; எனக்கா தெரியாது?

ராமன் : உம்! நீ மட்டும் என்னவாம். உங்கம்மா உன்னை யாருக்கோ எப்படியோ? எங்கேயோ; எக்கச்சக்கமா… பெத்துட்டதனாலேதானே மூட்டை கட்டி மண்ணிலே தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டா… என்னமோ உன்யோகம் சனகர் கண்ணிலே பட்டுவச்சே… அப்படியுந்தான் நீ எப்படி இருப்பியோ என்னமோன்னு உன்னை ஒருத்தனும் கல்யாணம் பண்ணிக்க வரல்லே; நான் போனாப் போவுதுன்னு… (*கி.கா. 1-ம் சருக்கம். 45-50 )

சீதை : ஆமா, நம் குலத்திலே இல்லாதது மாதிரி புதுசா பேசறீங்களே.

ராமன் : ஆமாமா! நீ போய் எருமைக்கால் பாக்கியிருந்தா ரசம் வச்சுக் கொண்டா… நான் ஒரு பன்றியைப் புடிச்சு அக்னியிலே ஆகுதி குடுத்துக் கொண்டாறேன். போ… போ…. அந்தப் பய லட்சுமணன் இருப்பான்… ஜாக்ரதையா இரு இதோ வந்துடறேன்.

(எழுந்து வில்லைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு போகிறான். கொஞ்சதூரம் போனதும் தூரத்திலே தன்னைப் போலவே கையிலே வில் அம்புடன் காட்சியளித்த ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தபடியே நின்று விடுகிறான். வேட்டைக்காக வந்த காமவல்லி தனது சேடியர்களை விட்டு ஒதுங்கி தனியே வரவே எதிர் பாராது ராமனை சந்திக்கின்றாள்]

காமவல்லி : யாரையா நீர்?

ராமன் : நான்… நான்… பெரிய வீரன்.

காமவல்லி : (சிரித்துக் கொண்டே) அதுதான் தெரியுதே நீர்வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே!

(ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)

ராமன் : நான் பெரிய அரச குமாரன், எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி அது… ஆகலே, அதுக்காக….

காமவல்லி : இப்படி ஊரைச் சுத்தறே… இல்லையா…? உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ போ!

ராமன் : உன்னைப் பார்த்ததும்….

காமவல்லி : ஒன்றும் புரியல்லியோ? (“வாரா.ஆ. காண்ட ம் 17-ம் சருக்கம். 13-20) ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்று விடு. உம்….

ராமன் : நான் யாருன்னு தெரிஞ்சா இப்படி கோபமா பேசமாட்டே நான் யார் தெரியுமா? ராமன்! தசரதன் மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.

காமவல்லி : (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.

ராமன் : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்துதாரங்களை மணக்கலாமே. அரசி! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள். அடிமையாக வாழ்கிறேன். கண்ணே! உன்னைக் கண்டதுமே காதல்…

காமவல்லி : காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே; என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?

ராமன் : பொறுமைக்கும் அளவுண்டு…. பொன்மானே!

காமவல்லி : நீ எருமை….!

ராமன் : நான் ஆண்… ஆரியன்!

காமவல்லி : அசல் கோழை!

ராமன் : நீ தனிமையில் இருக்கிறாய்…..

காமவல்லி : நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக் குண்டு.

ராமன் : உன்னை அடையாது விடவே மாட்டேன்.

[தாவிப் பிடிக்கிறான்]

காமவல்லி : உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது.

(எட்டி உதைக்கிறாள். ராமன் கீழே விழுந்தபடியே கத்துகிறான்.]

ராமன் : தம்பி லட்சுமணா ஓடிவாயேன்! அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போறாளே, அவளை உருக்குலைத்துவிடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி… தம்பி…?

[இந்தக் கூச்சலைக் கேட்டதும் லட்சுமணன் ஓடிவந்து ராமன் கீழே கிடப்பதையும், துரத்தில் காமவல்லி போவதையுங் கண்டு ஓடிப்போய் அவளைத் தடுத்து]

லட்சுமணன் : ஓய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி….

காமவல்லி : *மானத்தை விட்டவனே மரியாதையாகப் பேசு. (* வாரா.ஆ. காண்டம் 18-ம் சருக்கம் 18-21)

(என்று வாளைத் தூக்குகிறாள். லட்சுமான் தனது வாளினால் அவளுடன் போராடி அவளது வாளைத் தள்ளிவிட்டு மூக்கையும், காதையும் வெட்டி விடுகிறான்.)

காமவல்லி : அய்யோ அண்ணா! போய்விட்டதே! தமிழனின் பெருமை! ஆரியன் என்னை அவமானம் படுத்தி விட்டானே!

[அலறியபடியே ஓடி வருகிறான்.) [வழியிலே வேட்டையாடிக் கொண்டு நின்ற கரனும், தூஷணனும் வீரர்களும் இந்தக் கூச்சலைக் கேட்டுத் திகைத்து நிற்கின்றனர்.)

காமவல்லி : அண்ணா ! ஆரிய லட்சுமணன் என் அங்கங்களை வெட்டி விட்டானே! காமுகன் ராமன், என்மீது இச்சை கொண்டான், நான் மறுத்தேன்; அம்மடையன் என்னை மல்லுக்கிழுத்தான்? நான் அவனை வீழ்த்தினேன். உடனே அவன் தம்பி, அந்தப் பாவி ஓடிவந்து இப்படிச் செய்துவிட்டான்; அய்யோ! மங்காப் பெருமையுள்ள தமிழ்ப் பெண்குலத்துக்கு இந்தப் பாவியால் மாசு வந்துவிட்டதே அண்ணா! என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள். பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா!

[வீழ்ந்து இறந்து விடுகிறாள்.)

கரன் : பேடிகள்! தனிமையில் அகப்பட்ட ஒரு பெண் இடமா இரண்டு வீரர்கள் திறமையைக் காட்டுவது? இதோ ஒழித்து விடுகிறேன் பார் அவர்களை…

[வீரர்களுடன் வருகிறார்கள். அதற்குள் இங்கே ராமனும் லட்சுமணனும் வில்லேந்திய ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆரிய முனிவர்களும் கூடிக் கொண்டிருக்கின்றனர்.]

கரன் : ஆரியப் புல்லர்களே! உங்கள் நாட்டில் பெண்கள் இல்லையோ? டேய், ராமா! பேடீ, நீ ஒரு பெண் வயிற்றில் தானே பிறந்தாய்? தனிமையில் அகப்பட்ட ஓர் அபலையை உருக்குலைத்து அனுப்புவது தான் உன் தாய் உனக்குக் கற்றுக் கொடுத்த பாடமோ? தறுதலையே! ஏண்டா விழிக்கிறாய்? வாடா இப்படீ….

 

ராமன் : முனிவர்களே! அய்யோ பெரிய ஆபத்து வந்து விட்டதே, தம்பீ… தம்பீ…

 

லட்சுமணன் : ரகசியமாக பொறு அண்ணா ? இவர்களை நாம் நேரில் எதிர்க்க வேண்டாம். மரத்தின் மேலிருக்கும் நமது ரிஷிகள் இந்த இரண்டு தலைவர்களையும் கொன்று விட்டார்களானால் பாக்கிப் பேர்கள் ஓடிவிடுவார்கள். அப்பொழுது நாம் பார்த்துக் கொள்வோம்.

 

தூஷணம் : டேய், லட்சுமணா! உன்னைப் பெற்றாளே ஒருத்தி அவள் வயிற்றைக் கீறினாலும் எங்கள் துயரம் அடங்காதடா படுபாவி.

[இருவரும் சரமாரியாக அம்புகளை பொழிகிறார்கள். மரத்தின் மீது ஒளிந்து கொண்டிருந்த முனிவர்கள் அங்கிருந்து பின்புறமாக அம்புகளை எய்யவே, கரனும் தூஷணனும் வீழ்ந்து விடுகிறார்கள். உடனே கரனின் வீரர்கள் சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்ச்சியைக் கண்டு பின்வாங்குகிறார்கள். அப்போது சில முனிகள் ராமன் கையில் வில்லை எடுத்துக் கொடுத்து தைரியம் சொல்லி அனுப்ப, அவனும் லட்சுமணனும், மற்றும் ஆரிய முனிகளும், முன்னேற்பாடில்லாது வந்த தமிழ் மறவர்களில் பெரும்பாலோரை எதிர்த்துக் கொன்று விடவே மற்றவர்கள் அரண்மனைக்கு தப்பிச் செல்கிறார்கள். )

ராமன் : ஜேய்! எல்லா அசுரப் பசங்களும் ஒழிந்து விட்டார்கள் சீதை! கொண்டா உங்கையாலே சோமரசத்தை . ரிஷிப்பசங்க எல்லோருக்கும் நீயே கொடு. அழிப்போம் அசுரர்களை, ஆக்குவோம் இதை ஆரிய நாடாக. எல்லோரும் : ஜெய்! சீதாராம்.

(திரை)

You may also like...