ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

இடம் : இலங்கையில் இராவணன் கொலு மண்டபம்.

பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், மற்றும் அமைச்சர்கள், சேனா வீரர்கள், மந்திரி சபையினர்.

[நாட்டின் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.]

மேகநாதன் : தந்தையே! அந்தத் தருக்கர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால், நாடு நாசகாரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் – விரைவிலே அந்த வீணர்களை ஒழிக்கத் திட்டம் தேவை!

சேனாதிபதி : மன்னர் மன்ன! தமிழரசி, தங்கள் மூதாட்டி தடாதகை அம்மையார் தாக்கப்பட்ட போதே இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

கும்பகர்ணன் : கொலையும் வேள்வியும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்க முடியாது. கொடி போட்டு ஆளவும் திட்டம் இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா !

இராவணன் : உம்: ஆச்சர்யம்! சிங்கக் கூட்டத்திலே சிறு நரிகள்; செந்தாமரை ஓடையிலே முதலைகள் ; தமிழகத்திலே ஆரியர்கள் ! வேட்டைக்கு வேறு இடம் கிடைக்கவில்லை போலிருக்கிறது அந்த வீணர்களுக்கு.

மேகநாதன் : தந்தையே விந்தமலைச் சாரல் முற்றும் வேள்விப்புகைச் சூழ்ந்து கொண்டது. அகத்தியனாம் ஓர் ஆரிய முனி… அவன் அங்கே முகாமிட்டிருக்கிறான்… நமது வீரர்கள்… எல்லைப்புறக் காவலின் தளபதிகள் வாதாபி, வில்வலன் இருவரையுமே ஏமாற்றி விருந்துக்கழைத்து, உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்து ஒழித்து விட்டானாம் அந்த எத்தன்.

சேனாதிபதி : கலையாலும், மொழியாலும், மக்கள் தம் வாழ்வாலும் உயர்ந்து போன தென்னாட்டை, ஒழித்துக் கட்ட இமயத்தின் மருங்கே உள்ள ஆரிய இறைவனால் அனுப்பப்பட்டவனாம் அந்த இருடி…. அவனுக்குத் துணையாகப் பல்லாயிரம் ஒற்றர்கள்…. பைந்தமிழ்ச் சோலைகளிலே ஊடுருவி நிற்கின்றனர் பாதகச் செயல்களுக்கு உறுதுணையாக….

கும்பகர்ணன் : அதுமட்டுமல்ல. முன்னர் தாடகையை வீழ்த்தினானே தசரதன் மைந்தன் ராமன், அவனும் அவனது சகாக்களும் இப்போது தண்டகாரணியத்திலே உலவி வருவதாக நமது ஒற்றர்களின் உரைகள்.

இராவணன் : உண்மைதான்… ஆரியம் கச்சையை வரிந்து கட்டிவிட்டது. ஆடுமாடுகளின் உணவுக்காக, அண்டிப் பிழைக்க வந்த அந்தக் கூட்டம்; நம்மிடம் அடிமைகளாக வாழ்ந்து காலம் கழித்துக் கொண்டிருக்கும் அற்பர்களின் சந்ததி. இன்று நாடு பிடிக்கப் புறப்பட்டு விட்டது படை கொண்டு தாக்க உரமில்லா அந்த பேடிகள்; பைந்தமிழ் மக்களின் உள்ளங்களிலே பாதகத்தைத் தூவி வஞ்சக விதை விதைத்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்து விட்டார்கள். கொல்லாமை விரதம் பூண்ட தமிழகம் இன்று கொலை வேள்விக்கு நிலைக் களமாக மாறி வருகிறது. மது தீண்டா நம் மக்களை சுராபான வெறியர்களாக மாற்றி வருகின்றனர் அந்த சூதர்கள். வளங்குன்றா நம் மொழியில் வடவர்தம் விஷம் கலக்கப்படுகிறது. வஞ்சம், சதி, துரோகம் இதை இனியும் பொறுத்து இருக்கமாட்டான் இராவணன்.

மேகநாதன் : இப்பொழுதே நாம் அவர்களுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்காவிட்டால்; நம்மைக் கோழைகள் என்றெண்ணிவிடுவர் அந்தக் கொடியர்.

மறையவர் : மன்ன! கோதாவரிக் கரையிலிருந்து வந்த எமது சீடன் குறிப்பிடுகிறான், நம் திராவிட மறைகள் எல்லாம் மறைந்து போய் அந்த இடத்திலே ஆரியர்களின் இருக்கும், யஜ்ரும், சாமமும், அதர்வணமும் புகுந்து வருகின்றனவாம். இந்த நிலை நீடித்தால் இறுதியில் தமிழ் இனமே அழிந்துவிடும் அரசே!

இராவணன் : அமைச்சர்களே அவைப் பிரதிநிதிகளே! ஆரியர்களின் அநீதி பற்றி இதுகாறும் நம் முன்பு ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் கூறப்பட்டவைகளை அறிவீர். போர்முறைகளைப் பின் பற்றாது இரவு நேரங்களில் ஒளிந்து நின்று தாக்குவதும், தீயிடுவதும், திருட்டுத் தொழில் செய்வதும், எதிர்ப்போர்களை எம்பெருமான் ஆணை என்று மடக்குவதும், மறுப்பவர்களை ஒழிப்பதும்; அம்மாபாதகர்களின் அன்றாட வேலைகளாக இருக்கிறது. இதுபற்றி நமக்கு வந்து குவிந்திருக்கும் முறையீடுகளுக்குக் கணக்கே இல்லை. அன்பையும், அமைதியையும் அடிப்படையாகக் கொண்ட நம் ஆட்சியை சீர்குலைக்கவே அந்த சிறு நரிகள் இந்த வேலைகளில் இறங்கிவிட்டன போலும். அவர்களது கொலையையும், வேள்வியையும் எதிர்க்கும் நம் வீரர்களை பயங்கர உருவினர்கள், மாயாவிகள், அரக்கர்கள், ஆகாயத்தில் பறப்பவர்கள் என்றெல்லாம் கதை கட்டி விடுகின்றனராம் அந்தக் கயவர்கள். இந்தக் கதைகளை நம்மவர்களிலே சில சிறுமதி படைத்தோர் சிந்திக்காது, ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்களாம். என்னே ! விபரீதம்! எனவேதான் நாம் அப்பகுதியின் நம் அரசப் பிரதிநிதியாகிய காமவல்லிக்கு இதுபற்றி தாக்கீதும் – உதவிக்கு கரன், தூஷணன் என்ற தளபதிகளையும் உதவிப் படைகளையும் அனுப்பக் கருதியுள்ளோம். உங்கள் அபிப்பிராயங்கள் ஏதாவது இருந்தால் சொல்லலாம்.

அமை. தலைவர் : இறையே! தங்கள் எண்ணப்படியே செய்ய அமைச்சர் அவை பூர்ண சம்மதம் அளிக்கிறது.

இராவணன் : மிக்க மகிழ்ச்சி! அன்பார்ந்த அமைச்சர்களே! ஆரியர் இழைக்கும் கொடுமைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு, தகுந்த ஏற்பாடுகளை விரைவில் செய்வோம். இதுபற்றி இன்னும் விரிவான தகவல்கள் கோரியுள்ளேன் அவைகள் வந்ததும் அவர்களின் சதிச் செயல்களை எப்படி முறியடிப்பது என்பது பற்றித் தீர்மானிப்போம். இன்று அவை இத்தோடு கலையலாம்.

You may also like...