7 தமிழர் விடுதலை: மாநில அரசு அழுத்தம் தராதது ஏன்? – நீதிபதி து. அரிபரந்தாமன்
தங்கள் தீர்மானத்தை உதாசீனம் செய்யும் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தர மாநில அரசும் முன்வரவில்லை. உள்ளபடியே அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்படத் தவறியதைப் பற்றி தமிழக அரசு மக்களிடம் பேச வேண்டும். நீதி மன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடுக்கலாம்.
7 தமிழர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் நீண்ட காலம் கிடப்பில் போட்டு வைத்திருக்க முடியாது என்று கருத்து கூறிய உச்சநீதிமன்றம், இது குறித்து ஆளுநரின் கருத்து என்ன என்பதைக் கேட்டு நீதி மன்றத்துக்கு அறிக்கைத் தர உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன், இது குறித்து எழுதி யுள்ள கட்டுரை.
அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்படி, தமிழ்நாடு அரசின் அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 தமிழர் களை விடுதலைசெய்வது எனத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கான பரிந்துரையை உடனே ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அமைச்சரவைத் தீர்மானத்தையொட்டி ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
அமைச்சரவைத் தீர்மானத்துக்குப் பின் எழுவரையும் விடுதலை செய்யாதது சட்ட விரோதம் என்றும், எனவே உடனே விடுதலை செய்து உத்தர விடுமாறும் எழுவரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். அந்த வழக்கில், மத்திய அரசு பதிலுரை தாக்கல் செய்துள்ளது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் — விடுவிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது என்று கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, அரசமைப்புச் சட்டக் கூறு பிரிவு 161-க்கும், உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளுக்கும், இந்த எழுவரில் நால்வரின் கருணை மனு சம்பந்தப் பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 25, 1999 அன்று வழங்கிய தீர்ப்புக்கும் முற்றிலும் விரோதமானது.
பிப்ரவரி 19, 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, இந்த எழுவரையும் விடுதலைசெய்து உத்தர விட்டது. எழுவரும் 24 ஆண்டுகள் சிறையில் இருப்பதால், விடுதலை செய்வது என்ற முடிவை தமிழ்நாடு அரசு எடுத்தது. அது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவு. மூன்று நாட்களில் எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், அந்தத் தகவலை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
மத்தியப் புலனாய்வுத் துறை புலனாய்வு செய்த வழக்குகளில் தண்டனை பெற்ற எவரை யேனும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விடுதலை செய்ய எந்த மாநில அரசு முடிவெடுத்தாலும் அது பற்றி மத்திய அரசிடம் சம்பந்தப்பட்ட மாநில அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம். அதன்படி தகவல் அளிப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
அப்போது மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசின் மேற்சொன்ன பிப்ரவரி 19, 2014 தேதியிட்ட உத்தரவை எதிர்த்து உடனடி யாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, எழுவரின் விடுதலைக்குத் தடை பெற்றது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை வழங்கியது.
மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் பற்றிய முக்கிய பிரச்சினை இந்த வழக்கில் எழுவ தால், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்கப் பரிந்துரை செய்து ஏப்ரல் 25 அன்று உத்தரவை வழங்கியது மூவர் அமர்வு. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, நீண்ட விவாதங்களுக்குப் பின் டிசம்பர் 2, 2015இல் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் அமர்வில் வழக்கை நடத்தியது, தற்போது மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜக அரசு.
“மத்திய அரசின் புலனாய்வுத் துறை புலனாய்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற எவரையேனும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விடுவிக்க சம்மந்தப்பட்ட மாநில அரசு முடிவெடுக்கும்போது மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும்’’ என்று கூறியது அந்தத் தீர்ப்பு. குற்றவியல் நடைமுறைச் சட்டத் தில் உள்ள ‘ஆலோசனை’ (கன்சல்டேஷன்) என்பதற்கு ‘ஒப்புதல்’ (கன்கரன்ஸ்) என்று வியாக்யானம் செய்தது உச்ச நீதிமன்றம்.
அதே டிசம்பர் 2, 2015 தீர்ப்பில், அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்படி, மாநில அரசு சிறையில் இருக்கும் எவரையேனும் விடுதலைசெய்ய முடிவெடுத்தால், அப்போது மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் ஐந்து நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, அத்தீர்ப்பின்படி அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த எழுவரை விடுவிக்கத் தீர்மானம் இயற்றவில்லை. எனவே, எழுவரின் விடுதலை நிகழவில்லை.
ஜெயலலிதா செய்யாததை, எடப்பாடி பழனி சாமி செய்தார். எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று எழுவரை விடுதலைசெய்வது என்ற முடி வெடுத்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி யது. அத்தீர்மானத்தின்படி விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைசெய்தது. ஆனால், அத்தீர்மானம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையின்படி எழுவரை விடுவித்து, ஆளுநர் உத்தரவேதும் போடவில்லை.
தங்கள் தீர்மானத்தை உதாசீனம் செய்யும் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தர மாநில அரசும் முன்வரவில்லை. உள்ளபடியே அமைச்சரவை யின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்படத் தவறியதைப் பற்றி தமிழக அரசு மக்களிடம் பேச வேண்டும். நீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடுக்கலாம்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. தேசியப் புலனாய்வுச் சட்டத் தின் கீழ் மாநில அரசின் சம்மதமின்றி, குற்ற வழக்கின் புலனாய்வை தேசியப் புலனாய்வு முகாமைக்கு மாற்றுவதை எதிர்த்து சத்தீஸ்கர் மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதுபோல தமிழ்நாடு அரசும், உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிவித்தாலே போதும்… ஆளுநர் வழிக்கு வருவார்.
இதே போல, ‘நீட்’ தேர்வு விலக்குச் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி னாலும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்பதை இங்கே நினை வூட்ட வேண்டியிருக்கிறது. இதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கேதும் தொடுக்கவில்லை. இது மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மையாகவே முழு மனதுடன்தான் தமிழக அரசு இத்தகு முயற்சிகளை மேற்கொள்கிறதா அல்லது மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசு நடத்தும் நாடகமோ என்று யோசிக்க வைக்கிறது.
தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எவரையும், கூறு 72இன் கீழ் குடியரசுத் தலைவரும், கூறு 161இன் கீழ் மாநில ஆளுநரும் விடுவிக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. மத்திய அரசின் பரிந்துரை இன்றி, குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டம் பிரிவு 72இன் கீழ் எவரையும் விடுதலை செய்து உத்தர விட முடியாது. அதேபோல, மாநில அரசின் பரிந்துரை இன்றி ஆளுநர் எவரையும் விடுதலை செய்து உத்தரவிட முடியாது. இதுவே சட்ட நிலை. மத்திய/மாநில அரசின் பரிந்துரையின் படியே குடியரசுத் தலைவர்/ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதே, நமது அரசமைப்புச் சட்டம் கூறுவது.
1999இல் தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது ஆளுநராக இருந்தவர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவி. அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய போது, கருணை மனுவின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய/மாநில அரசுகளுக்குத்தான் உண்டு என்றும், குடியரசுத் தலைவரோ/ஆளுநரோ முடிவெடுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால், தான் அளித்த தீர்ப்புக்கே மாறாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுவை, தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின்றி நிராகரித்து, அக்டோபர் 29, 1999இல் உத்தர விட்டார். ஆளுநரின் அந்தத் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 25, 1999 அன்று வழங்கிய தீர்ப்பில் இரத்து செய்தது. தமிழக அமைச்சரவை கருணை மனுவின் மேல் முடி வெடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படை யில் ஆளுநர் கருணை மனுவின் மேல் உத்தர விட வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் கூறியது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமையேற்ற நீதிபதி கே.டி.தாமஸ், நீண்ட காலம் சிறையில் இருந்து விட்டதையும் அவ்வழக்கின் புலன் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதையும் கருத்தில் கொண்டு எழுவரையும் விடுவிக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார். சோனியா காந்திக்கும் இது பற்றி கடிதம் எழுதி, எழுவரை யும் விடுவிக்கக் கோர வேண்டும் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாகச் செயல்பட்ட ரகோத்தமன், இவ் வழக்கு பற்றி எழுதிய புத்தகத்தில் புலனாய்வில் பல குறைபாடுகள் இருந்தன என்று சுட்டிக் காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் பங்கேற்ற அவர், எழுவரும் நீண்ட காலமாகச் சிறையில் இருப்பதால், அவர்களை விடுவித்துவிடலாம் என்றார். இந்த வழக்கில் குற்றவாளிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த மற்றொரு புலனாய்வு அதிகாரி தியாக ராசன், வாக்குமூலங்கள் சரியானபடி பதிவு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத் திலேயே மனு தாக்கல்செய்தார். மேற்சொன்ன அனைத்தும், இந்த எழுவரும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று சொல்லுவன அல்ல; மாறாக, இவை தண்டனையைக் குறைப்ப தற்கான மன்னிப்பதற்கான நியாயங்கள். 29 ஆண்டு சிறைக்குப் பின் இப்போது விடுதலை செய்வதற்கான வலுவான காரணிகள்.
இது போன்ற எந்த ஒரு காரணியுமின்றி, காந்தியை படுகொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்ற மூவரை – கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா – 16 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருந்தது போதுமென அக்டோபர் 13, 1964இல் பிரதமர் நேரு மறைந்த 5 மாதங்களில் விடுதலை செய்தது காங்கிரஸ் அரசு.
இப்போதைய பாஜக அரசு, பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளத்தின் கோரிக்கையை ஏற்று காலிஸ்தான் கோரி ஆயுதமேந்திப் போராடியதற்காக ஆயுள் தண்டனை பெற்ற 8 பேரை குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி விடுதலை செய்தது. இதே அணுகுமுறையை எழுவர் விடுதலையிலும் பின்பற்றுவதற்கு மத்திய பாஜக அரசு மறுப்பது சரியல்ல. தமிழக அமைச்சரவை முடிவெடுத்த பின்னரும், எழுவரை விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிடத் தவறியது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆகவே, எழுவரை விடுவிப்பதற்கான அழுத்தங் களை அதிமுக அரசு உண்டாக்க வேண்டும்!
நன்றி : தமிழ் இந்து
பெரியார் முழக்கம் 27022020 இதழ்