குழந்தை வேண்டாம் என்றொரு வாழ்க்கை! பெரியார் முன்மொழிந்த குடும்ப வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை…. மனித வாழ்க்கையில் இந்த நான்கும் பிரதானம். இந்தப் படிநிலைகளைச் சரியாகக் கடந்து வருவதே நிறைவான வாழ்க்கையாக நம் நாட்டில் கருதப்படுகிறது. குழந்தை இல்லாத வாழ்க்கையைக் குறையான வாழ்க்கையாகவே பார்க்கிறது சமூகம். குழந்தை இல்லாதவர்களை, தனிப்பட்ட காரணங்களுக்காகக் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களை, இது தொடர்பாக மற்றவர்கள் கேட்கும் கேள்விகள் குத்திக் கிழிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ‘சைல்ட்ஃப்ரீ சொசைட்டி’ என்கிற பெயரில் ஒரு சமூக அமைப்பே உருவாகி, பிரபலமாகி வருகிறது. குழந்தை இல்லாதவர்களுக்காக அல்ல… குழந்தையே வேண்டாம் என்கிறவர்களுக்கான அமைப்பு அது!
இப்போது இந்தியச் சமூகமும் மாறிக் கொண்டிருக்கிறது. குழந்தையைப் பற்றிக் கேட்கப்படுகிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதும், சமூக விமர்சனங்களை எதிர்கொள்வதும் தினசரி சவாலாக இருந்தபோதிலும், குழந்தை தவிர்த்த வாழ்க்கையில் இதையெல்லாம் மீறிய ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் இருப்பதாகவே சொல்கிறார்கள் ‘குழந்தை வேண்டாம்’ என முடிவெடுத்தவர்கள். அவர்களில் சிலரின் குரல்கள் இங்கே….
என்னோட முடிவெடுக்கும் உரிமைக்கு மதிப்பு கொடுங்க!
கொல்கத்தாவின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனரான சுசிஸ்மிதா தாஸ் குப்தா, “எனக்கு 33 வயசுலதான் கல்யாணமானது. ஆனா, 23 வயசுலேருந்தே ‘எப்போ கல்யாணம்’ என்ற கேள்வி துரத்த ஆரம்பிச்சது. 30 வயசை நெருங்கினபோது, ‘இப்பவும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா எப்போ குழந்தை பெத்துப்பீங்க?’னு கேட்டாங்க. 33 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, ‘வயசாகிட்டே போகுது… லேட்டா குழந்தைப் பெத்துக்கிட்டா குழந்தையை யார் பார்த்துப் பாங்க’ன்னு கேட்டாங்க. குழந்தை வேணுமா, வேண்டாமாங்கிறதைத் தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட கணவனும் மனைவியும்தான். சமுதாயம் அதைக் கேள்வியாக்கிக் குடைய வேண்டிய அவசியம் என்னன்னுதான் புரியலை…” எனக் காட்டமாகக் கேட்கிறார்.
“இப்பவும் என்னைப் பார்க்கிறவங்க என் வயசைக் கேட்பாங்க. அடுத்தக் கேள்வி, ‘எத்தனை குழந்தை’ங்கிறதாகத்தான் இருக்கும். குழந்தை இல்லைன்னு சொன்னா, ‘ஏன்… தங்கலையாம்’ம்பாங்க.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் இனப்பெருக்க எந்திரங்கள். கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை பெத்துக்கிறதுக்காகவே புரோகிராம் பண்ணப்பட்ட எந்திரங்கள். இந்த ரெண்டுல எது நடக்கலைன்னாலும் அந்தப் பெண் பொறுப்பற்றவளாகவும் அவளோட குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தின வளாகவும் பார்க்கப்படுகிறாள்.
நானும் என் கணவரும் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். குழந்தை வேணும்னு நினைக்கிறதுக்கு பலமான காரணம் இருக்கணும். திருமண வாழ்க்கையில் கட்டாயமா நிகழ்கிற ஒரு சம்பவமா குழந்தைப் பிறப்பு இருக்கக் கூடாது. ‘உடைஞ்சு முறிஞ்சு போகிற நிலைமையில் கணவன் – மனைவி உறவை குழந்தைங்கிற பேண்ட் எய்டால்தான் ஒட்ட வைக்க முடியும்’னு நம்பியே குழந்தை பெத்துக்கிட்ட ஃப்ரெண்ட்ஸையும் நான் பார்த்திருக்கேன். வாழ்க்கையில தாம் விரும்பி, தமக்கு நடக்காமல் போன விஷயங்களைக் குழந்தைகள் மூலமா தீர்த்துக்கிறதுக்காகவே குழந்தைப் பெத்துக்கிறவங்களும் இருக்காங்க. பிறக்கும்போதே மிகப் பெரிய சுமையோட இந்த உலகத்துக்கு வரும் அந்தக் குழந்தைதான் ரொம்பவே பாவம்.
குழந்தைப் பெத்துக்கிறது அல்லது தத்தெடுக்கிறது, தாய்ப்பால் ஊட்டறது, அழற குழந்தையைச் சமாதானப்படுத்த பாதி இராத்திரி தூக்கத்துலேருந்து எழுந்திருக்கிறது, காலையில குழந்தையை எழுப்பி ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறது… இதெல்லாம் வேணுமா வேண்டாமாங்கிற முடிவெடுக்கிறது பெண்ணோட தனிப்பட்ட உரிமை. நாம சந்திக்கிற மனிதர்கள்கிட்ட ‘உங்ககிட்ட கார் இருக்கா?’, ‘காஸ்ட்லியான நாய் வளர்க்கறீங்களா?’ ‘பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?’னு கேட்பது எப்படி அநாகரிகமோ, அப்படித்தான் ‘எத்தனை குழந்தை… ஏன் இல்லை?’ என்று கேட்பதும். குழந்தை வேணும்னு விரும்பறது எப்படி ஒருத்தரோட உரிமையோ, வேண்டாம்னு முடிவெடுக்கிறதும் அப்படித்தான். இதை மத்தவங்க புரிஞ்சுக்கிட்டு மதிப்பு கொடுத்தா போதும்” – கோரிக்கை வைக்கிறார் சுசிஸ்மிதா.
சுயநல வாழ்க்கையிலிருந்து விடுபட எடுத்த முடிவு!
ஆவணப்பட இயக்குநரும், ஊடக வியலாளருமான கீதா இளங்கோவன் – இளங்கோவன் கீதா தம்பதியும் குழந்தை தவிர்த்த வாழ்க்கையைத் தேர்வு செய்தவர்கள்.
“நாங்க எந்தச் சடங்கு சம்பிரதாயங் களும் இல்லாம 2002 முதல் இணைந்து வாழ்கிறோம். அப்படியொரு வாழ்க்கையிலயும் எங்களுக்கிடையிலான பந்தம் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கும்னு ஃபீல் பண்றோம். இணைந்து வாழறதுன்னு முடிவெடுத்ததுமே குழந்தை வேண்டாங் கிறதையும் முடிவு பண்ணிட்டோம். எங்க ரெண்டு பேருக்குமே குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்களுக்குன்னு தனிப்பட்ட முறையில குழந்தைகள் பெத்துக்கிறதில்லைங் கிறதுல தீர்மானமா இருந்தோம். சமுதாயம் சார்பா நிறைய விஷயங்கள் செய்யணுங்கிற கொள்கைகள் கொண்ட எங்களுக்கு, குழந்தை களுடனான வாழ்க்கையில இருக்கும்போது அது முழுமையா சாத்தியமாகாதுன்னு தோணினது. குழந்தை வேண்டாம்ங்கிற முடிவைக் கேட்டு என் வீட்டுலயும் இளங்கோவன் வீட்டுலயும் முதல்ல லேசா அதிர்ச்சியானாங்க. குழந்தைப் பெத்துக்கச் சொன்னாங்க. அது அன்பினாலயும் அக்கறையினாலயும் சொன்னதே தவிர, வற்புறுத்தல் இல்லை. எங்களுக்கு இந்த வாழ்க்கைதான் பிடிச்சிருக்குனு சொன்ன பிறகு புரிஞ்சுக்கிட்டாங்க. எங்கம்மா ரொம்பப் பழைமைவாதி. ஆரம்பத்துல எங்க முடிவைக் கேட்டு அதிர்ந்த அவங்க, இன்னிக்கு எங்க வாழ்க்கையைப் பார்த்து சந்தோஷப்படறாங்க. ‘நீங்க எடுத்த முடிவு சரியானதுதான்’னு சொல்றாங்க. குழந்தைகள் இருந்தா அவங்களுக்காகச் சொத்து சேர்க்கணும்; ஓடி ஓடிச் சம்பாதிக்கணும்னு சுயநல வாழ்க்கைக்குப் பழகிடுவோம். இன்னிக்கு எந்தக் குழந்தையையும் எங்க குழந்தையா பார்க்கிற நேசிக்கிற சுதந்திரம் எங்களுக்கு இருக்கு…” – புன்னகையுடன் அழகாகச் சொல்லும் கீதாவைத் தொடர்கிறார் அவரின் இணையர் இளங்கோவன்
என் இரத்தம் என்பது பொய்த் தோற்றம்!
“என் தாத்தா யாருன்னு எனக்குத் தெரியும். தாத்தாவோட தாத்தா யாருன்னு தெரியாது. அப்படித்தான் பேரனோட பேரனும். இப்படி நான்கைந்து தலைமுறைகளிலேயே ஒட்டு மொத்தமாக மறக்கடிக்கப் போவதுதான் நம் வாழ்வு. ‘என் வாரிசு, என் இரத்தம்’ என்பது எல்லாம் வெறும் பொய்த் தோற்றம், கற்பிதம்தான்.
ஒரு காலத்தில் இயற்கைச் சீற்றம், போர், தொற்று நோய் மாதிரியான காரணங்களால் மக்கள் எண்ணிக்கைக் குறைவா இருந்தது. அதனால எல்லோரும் நிறைய குழந்தைகள் பெத்துக்கணும்னு வலியுறத்தினாங்க. ஆளுக்கு பதிமூணு, பதினாறுன்னு குழந்தை பெத்துக்கறது பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ அறிவியல் வளர்ச்சிக் காரணமா இறப்பு எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. மக்கள் தொகையோ எக்கச்சக்கமா வளர்ந்துடுச்சு. மக்கள் தொகை குறைவா இருந்த காலத்துல நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு சமூகப் பங்களிப்பா இருந்ததுபோல தாமாக முன் வந்து குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்வதும், மக்கள் தொகை பெருகியிருக்கும் காலகட்டத்தில் ஒரு சமூகப் பங்களிப்பாக அமையும்.
குழந்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் அந்தப் பெண்ணை ‘மலடி’ என்றும். அந்த ஆணை, ‘ஆண்மையற்றவன்’ என்றும் சமுதாயம் இழிவுபடுத்த வாய்ப்பிருக்கறதுதான். ‘கடைசி காலத்துல கஷ்டப்படப் போறீங்க’ என்று சிலர் சாபம் கொடுத்துட்டுப் போவார்கள். குழந்தை வளர்ப்பை ஒரு முதலீடாக நினைக்கிறவங்களுக்குத்தான் இப்படியொரு சிக்கல். அவன் கூடவே இருந்து கடைசி காலத்தில் சாகும் வரை நமக்கு உதவிக் கொண்டிருக்க வேண்டும் என்ற சுயநலம். எங்களைப் போன்றவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்திருந்தாலும் கடைசி காலத்தில் அவன் கூடவே இருந்தாக வேண்டும் என்ற வற்புறுத்தல்களை அவன்மீது திணித்திருக்க மாட்டோம் என்பதால், இது ஒரு விஷயமாகவே படவில்லை. சக மனிதர்கள் மீது எப்போதும் நேசம் கொண்டிருக்கும் எவரும் வாழ்வைப்போலவே கடைசி காலத்தையும் இனிமையாகவே கடப்பார்கள்….” – குழந்தை தவிர்த்த வாழ்க்கைக்கான ஆணித்தரமான கருத்தை முன் வைக்கிறார் இளங்கோவன் கீதா.
பிள்ளை வேண்டும் என்பவரை
மணக்க மாட்டேன்!
திருமணத் துக்குப் பிறகு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுப்பதை விட, திருமணத் துக்கு முன்பே அப்படியொரு முடிவு எடுக்க அதிகத் துணிச்சல் தேவை. டெல்லியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அனுபா யாதவுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது.
“எனக்கு தாஜ்மகால் பிடிக்கும். அதற்காக எனக்கே எனக்கென ஒரு தாஜ்மகால் வேண்டும் என நினைப்பது எப்படி நியாயமான தில்லையோ, அப்படித்தான் குழந்தைகளும். குழந்தை வளர்ப்பு என்பது நிறையப் பொறுமையும் எனர்ஜியும் தேவைப்படுகிற ஒரு விஷயம்.
குழந்தைகள் இருக்கும் பெற்றோருக்குமே எதிர்காலம் குறித்த கவலையும் பயமும் இருக்கின்றன. படிப்பு, வேலை என ஏதோ காரணங்களுக்காகப் பெற்றோரை விட்டு வெளிநாடுகளுக்குப் போய் அங்கேயே தங்கிவிடும் பிள்ளைகளைப் பல வீடுகளில் பார்க்கிறோம். வயதான காலத்தில் பிள்ளைகள் காப்பாற்றுவார்கள்; ஆதரவாக இருப்பார்கள் என்கிற அவர்களது எதிர்பார்ப்பு அங்கே என்னவாகிறது?
பிற்காலத்தில் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்கிற காரணத்துக்காகக் குழந்தைப் பெற்றுக் கொள்வது சுயநலத்தின் உச்சம். திருமணம் செய்து கொள்கிற எண்ணம் எனக்கில்லை; அப்படியே செய்து கொண்டாலும் குழந்தை வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க மாட்டேன்…” – அனுபாவின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
பண முதலீடே எதிர்காலப் பாதுகாப்பு!
“‘நான் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்குத் திரைப்படத்துறை ஏற்றதல்ல’ என்ற கருத்து நிலவிய போது திரைப்படத் தொகுப்பாளராகும் விருப்பத்தோடு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். நான் வேறொரு முடிவையும் எடுத்திருந்தேன். ‘நான் திருமணம் செய்து கொள்வதில்லை; எனக்கு ஏற்றத் துணைவர் யாரோ அவருடன் சேர்ந்து வாழ்வது’ என்பதுதான் அது” – அதிரடியாகப் பேசுகிறார் கானுயிர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஜானகி லெனின்.
“ஒருவர் மீது ஒருவர் காதல் இல்லாமல், ‘திருமணம் செய்து கொண்டோம்’ என்கிற கடமைக்காகவே பலரும் வாழ்கிறார்கள். முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழும்போது அந்த உறவு முறியாமல் நீடித்திருக்க இருவரும் முனைப்புடன் இருக்க வேண்டும். திருமணச் சடங்கு என்கிற செயற்கையான உறவைவிட எனது முடிவே நேர்மையானது என நான் நம்புகிறேன். இப்படி வழக்கத்துக்கு மாறான முடிவுகளின்படி வாழும்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் வாழ்வது பெரிய விஷயமில்லை.
சமூகம் எதிர்பார்க்கிறது என்பதற்காகவே பெரும்பாலானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அப்படிப் பெற்ற குழந்தைகளை நாம் நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்கிற நோக்கமே இல்லாமல் வளர்க்கிறார்கள். நான் நல்ல தாயாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து வைத்திருந்தேன். எனக்கு ஆர்வமில்லாத நிலையில் ஏன் மற்றொரு ஜீவனை (குழந்தையை) துன்பத்துக்கு ஆளாக்க வேண்டும்? என் துணைவர் ராம் விட்டேகரும் அப்படியே நினைத்தார். அவருக்கு, முந்தைய திருமணத்தில் இரு மகன்கள் இருக்கின்றனர். அந்த அனுபவத்தை மீண்டும் செய்ய அவர் விரும்பவில்லை. என்னுடைய முடிவால், உறவினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு என் பெற்றோர் தள்ளப்பட்டனர். ஆனாலும், அவர்கள் எனக்கு ஆதரவாக இல்லாதிருந்தால் சமூகத்தை எதிர்கொள்ளும் சக்தியும் துணிச்சலும் எனக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
‘எதிர்காலத்தப் பத்தின பயமே இல்லையா’ என்கிற கேள்வியையும் அடிக்கடி எதிர்கொள்கிறேன். அந்தப் பயம் யாருக்குத்தான் இல்லை? ஆனால், முதுமைக்கோ எதிர்காலத்துக்கான உத்தரவாதத்துக்கோ குழந்தைகள் தீர்வாக மாட்டார்கள். உங்களுக்கு முன் உங்கள் குழந்தை இறந்து விட்டாலோ, உங்களை நிராகரித்துவிட்டாலோ, வாழ்நாள் முழுவதும் குழந்தைக்கு உங்கள் பராமரிப்பு தேவைப்பட்டாலோ என்ன செய்ய முடியும்? முதுமைக்கால ஓய்வூதியம் பற்றிய கவலை இருந்தால் உங்கள் பணத்தை நம்பிக்கையான இடத்தில் முதலீடு செய்யுங்கள்.”
– குழந்தை தவிர்த்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு தீர்வையும் முன் வைக்கிறார் ஜானகி.
நன்றி: ‘அவள் விகடன்’
நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்