இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)
மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சமதர்ம அறிக்கையை 1931லேயே ‘குடிஅரசு’ வெளியீடாக பெரியார் வெளியிட்டார். அதற்கு பெரியார் எழுதிய முன்னுரையில் வேறு நாடுகளில் இல்லாத இந்தியாவில் கூடுதலாக ஜாதி என்ற அமைப்பு இருப்பதை எடுத்துக்காட்டி ஜாதி முதன்மையானதாகவும் பணக்கார – ஏழை தத்துவத்துக்குக் கோட்டையாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளார். பெரியார் தீட்டிய முன்னுரை:
தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைகளின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும்.
இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டு களுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக்கின்றன.
சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும் வெளியில் எடுத்து மக்களுக்குத் தெரியும்படியாக மகாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847 ம் வருஷத்திலேயே லண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மகாநாடு (காங்கிரஸ்) ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பயனாய் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் அதை சீக்கிரத்தில் கையாளப்படவும் அனுபவத்திற் கொண்டு வரவும் முயற்சித்த நாடு ரஷியாவாக ஏற்பட்டு விட்டது.
இது சம்பந்தமாக நமக்குக் கிடைத்த ஒரு அறிக்கை சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மனியர்களாயிருந்தாலும், அதற்காக மகாநாடு கூடினது லண்டன் பட்டணமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு தேசமாயிருந்தாலும், அது முதல் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் ரஷியா வாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தா லும் அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமலில்லை.
என்ன நியாயமென்று வாசகர்கள் கேட்பார் களேயானால் அதற்கு நமது சமாதானமானது எங்கு அளவுக்கு மீறிய – தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறு கொண்டு எழவும் சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.
எனவே இந்த நியாயப்படிப் பார்ப்போ மானால் உலக அரசாங்கங் களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்கக் கொடுங் கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்மமுறை அனுப வத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால் அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தை விட இந்தியாவுக்கே முதன் முதலாக ஏற்பட்டு இருக்கவேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித சூட்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூட்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதையுணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டு மிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூட்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச் செய்து வந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன் முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.
ஆன போதிலும்கூட இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங்களிலும் ஏற்பட்டு விட்டதின் காரணமாய் இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிற்க முடியாத அவசியாய் போய்விட்டதால் இங்கும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது
ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை.
இவ்விபரங்கள் இந்த அளவில் நிற்க, முன் குறிப்பிட்டதான அதாவது சமதர்மக் கொள்கை சம்பந்தமாக அந்தக்காலத்தில் வெளியான ஒரு அறிக்கையை மக்கள் உணரும்படியாக வெளிபடுத்தலாம் என்று நாம் கருதுவதால் அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்கின்ற கருத்துக்கு மேல்கண்ட வாக்கியங் களை முகவுரையாக எழுதினோம். இனிமேல் வருபவைகள் முழுவதும் அவ்வறிக்கையின் மொழிபெயர்ப்பேயாகும். அதில் நமதபிப்பிராயம் என்பது சிறிதும் இல்லை. ஆகையால் வாசகர்கள் அதை 1847-டு ல் இரண்டு ஜர்மனியர்களுக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் என்பதாகவே கருதி வாசிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
பெரியார்‘குடிஅரசு’ நூல் முகவுரை – 04.10.1931
சுயமரியாதையும் பொதுவுடைமையும் (2)
சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கை
‘கற்பனை-விஷமப்’ பிரச்சாரங் களை மறுத்து சுயமரியாதை இயக்கத் தின் அரசியல் கொள்கையை விளக்கி பெரியார் வெளியிட்ட அறிக்கை.
சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்மந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங் களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது.
இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் முன்பு விளக்கியவை களையே மறுபடியும் விளக்க வேண்டியிருக் கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே.
இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டு மானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற் படாது. ஆதலால், சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத் துறைகளில் உழைத்து வரவேண்டியதாகிறது.
எனவே, இம் மூன்று துறை உழைப்பிலும் இயக்கத்தின் திட்டம் என்ன என்பதை ஒருவாறு பொது ஜனங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இயக்கத்தைக் குறை கூறுகின்ற நண்பர்களுக்கும் விளங்குவதற்காக கீழே விவரிக்கின்றேன்.
அரசியல்
சுயமரியாதை இயக்கம் ஆரம்ப காலத்தில் அரசியல் துறையில் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற ஒரு அபிப்பிராயத்தைக் கொண் டிருந்த போதிலும், அரசியலின் பெயரால் காங்கிரஸ் என்னும் ஒரு ஸ்தாபனத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றி அதைத் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வந்து இந்நாட்டில் எவ்விதமான சமுதாய சீர்திருத்தமும், பொருளாதார சீர்திருத்தமும் ஏற்பட முடியாமல் அவ்விரண்டுக்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததால், குறிப்பாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டுமானால் காங்கிரசை சுயமரியாதைக் கொள்கைகள் முழுவதற்குமே விரோதமாக வேலை செய்வதற்கே பயன்படுத்தி வந்ததால், அப்படிப்பட்ட காங்கிரசை எதிர்க்க வேண்டியதும், அதன் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டியதற்கு எவ்வித முறையையும் கையாள வேண்டியதும் அவசியம் என்னும் தன்மையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது அவசிய மானால் அந்தப்படியும் செய்வது என்றும் கருதி வந்திருக்கிறது என்பதோடு இனியும் அந்தக் கருத்தையே கொண்டிருக்கிறது.
ஆதலால் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிரவேசிக்கிறது என்று சொல்லப்படுமானால், பார்ப்பன ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் காங்கிரசை பார்ப்பனர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாய் உபயோகப்படுத்தி பயன் பெறாமல் இருப்பதற்காகவுமே ஒழிய மற்றபடி அரசாங்க சட்டதிட்டங்களை எதிர்க்கவோ அவற்றிற்கு மாறாக நடக்கவோ என்பதற்காக அல்லவென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதே அபிப்பிரா யத்தை இதற்கு முன்னும் பல தடவை தெரியப்படுத்தியு மிருக்கிறோம்.
அன்றியும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பல அமுலுக்கு வர வேண்டு மானால் அரசாங்கத்தின் மூலம் பல சட்டத் திட்டங்கள் ஏற்பட வேண்டி இருப்பதால் அதை உத்தேசித்தும் அரசியலில் தலையிட வேண்டியது அவசியமாகிறது.
ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில் தலையிட்டது என்று சொல்ல வேண்டிவருமானால் அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ, அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்.
பொருளியல்
நாட்டு மக்களின் பொது நலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்வுக்கும் பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஒரு அளவுக்காவது சமமாய் பரவப்படும்படியாயும் ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும் அவசியமானதுமான காரிய மாகும். ஆதலால் அந்த அளவுக்கு பயன் ஏற்படும்படி செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாகும்.
அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ திடீரென்று தலைகீழ் புரட்சியான காரியங்களால் மனித சமூகத்தில் பயமும், அதிருப்தியும், சமாதான பங்கமும் ஏற்படும்படி செய்து, சட்டம், சமாதானம் சீர்குலையும்படி செய்வதோ ஆகிய காரியங்கள் இல்லாமல் பொதுஜன உபயோககரமான தொழில் சாலைகள், வியாபாரங்கள், லேவாதேவி முதலான காரியங்களை அரசாங்க நிருவாகத் திற்குள்ளாகவே கொண்டு வரும்படி செய்வதும், அரசாங்க நேர்பார்வை நிர்வாகத்திற்குட்பட்ட கூட்டுறவு முறையின் கீழ் அவை நடைபெறும்படி செய்து லாப நஷ்டங்கள் எல்லா மக்களுக்கும் சமமாய் இருக்கும்படி செய்வது முதலான சமதர்மக் கொள்கையே இயக்கத்தின் பொருளாதாரத் தத்துவமாகும்.
சமூக இயல்
மக்கள் அரசியலிலாகட்டும், பொருள் இயலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவு படுத்தப்பட்டும் கிடப்பதற்கு சமுதாயத்துறை யிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத் துறை யிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால் ஜாதி மத சம்பந்தமான மூடக் கட்டுப்பாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை சுயமரியாதை இயக்கம் ஆதியிலிருந்தே வற்புறுத்தி வந்திருக்கிறது.
ஆகவே இந்தக் காரியங்கள் செய்வதற்கு வகுப்பு பேதங்கள், ஜாதி பேதங்கள் ஆகியவைகளை அறவே ஒழிக்க முயற்சிப்பதும், ஜாதி வகுப்பு முதலியவைகளுக்கு ஆக்கமளிக்கும் மதங்களின் தன்மைகளை வெளிப் படுத்துவதும், நியாயமான முறைகளில் ஜாதி, வகுப்பு, மதம் ஆகியவைகளின் தத்துவங்களைக் கண்டிப் பதுமான காரியங்கள் செய்ய வேண்டியது அவசியமென்றும் கருதுகிறது.
இப்படிச் செய்வதில் ஜாதி வகுப்புத் துவேஷங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதோ, எந்த ஜாதி, எந்த
மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குள் துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என்பதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக் கொள்ளுவதும் இல்லை.
முடிவு
எனவே சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியப் பட்டாலும் அவ்வளவு அரசாங் கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் ஜாதிமத பேதங்களை அகற்றுவதும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடை பிரசாரம் செய்யவும், அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயமாகும்.
பெரியார், ‘குடி அரசு’ 10.03.1935
சுயமரியாதையும் பொதுவுடைமையும் (3)
சுயமரியாதை இயக்கத்தின் மீதான அடக்குமுறைகள்
சமதர்மப் பிரச்சாரத்துக்காக சுயமரியாதை இயக்கத்தையே முடக்க பிரிட்டிஷ் ஆட்சி முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் பெரியார் சமதர்மப் பிரச்சாரத் திட்டங்களை தள்ளி வைப்பது என்ற நிலையை எடுத்தார். அதற்கான காரணங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரை இது.
உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்த தாகும்.
அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர் களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப் பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்து விட்டார்கள்.
இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை யடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும் பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.
அன்றியும் நான் ரஷியாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு அதிக கவலை எடுத்து எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களை எல்லாம், வருவதையும், போவதையும், இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று ஒரு சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டரும் என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும், நான் செல்லுமிடங்களிலெல்லாம் என் பின் தொடர்ந்து எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டேபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன இன்னமும் இருந்து வருகின்றன.
இவை தவிர பல தடவை ஆபீசும், வீடுகளும் சோதனை இடப் பட்டதுடன் என்னுடன் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் இம்மாதிரி கவனிப்பும் அவர்களது தபால்களை உடைத்துப் பார்த்தல் ஆகிய காரியங்களும் நடந்து வந்தன.
உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்களுடைய தபால்களைக்கூட சி.ஐ.டி. போலீசார் உடைத்துப் பார்த்து வந்திருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார் 175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை செய்து வந்ததை, சர்க்கார் உ.i.ன. இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள் பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும் இருக்கவும் நேர்ந்துவிட்டது.
இயக்க சம்மந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும், சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும், சங்கத்தி லிருந்தும் விலகிக் கொள்ளவும் பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு “சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்க”மென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்து கொண்டு இருந்த தொண்டர் களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால் தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்த்த போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டு வதுமான காரியங்களும் எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும் என் தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடே செய்ததாக எண்ணும்படி பல வழக்குகள் தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம்.
இதனால் எல்லாம் நம்முடய விரோதிகள் பலரும் இயக்கத்தில் பொறுப்பில்லாமல் கலந்து விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம் “பேஷ் பேஷ்” என்று நம்மை உற்சாகப்படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய மற்றபடி இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும் சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொருப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு உள்ளானேன்.
அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியா வுக்கும் பணப்போக்குவரத்தோ, பிரசார சம்பந்தமோ ஏதும் இல்லை என்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு இயக்கமல்லவென்றும், சர்க்கா ரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம், தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகிற தென்றும் விளக்கிக் காட்டினேன்.
மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத் துவேஷமுண்டு பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப் பட்டதென்றோ, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்குப் பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண் டேன்.
இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்மந்தப்பட்ட விஷயங்கள் எனக்குக் காட்டப் பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதிகாரிகளும் அந்தப்படியே ஒப்புக் கொண் டார்கள்.
ஆகவே இந்த சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக்குள்ள தப்பபிப் பிராயத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.
நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமூகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற் கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம் என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணருகிறேன்.
இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால் ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரசாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.
சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும் நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங் களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத் தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.
சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட வரம்புக்கு உட்பட்டு பிரசாரம் செய்கிறவர்கள் என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கட்சி வேலைத் திட்டத்திலேயே கடைசி பாராவில் தெளிவாய்க் காட்டி இருக்கிறோம்.
செங்கல்பட்டு மகாநாட்டின்போதும் இயக்க நோக்கம் வகுத்த போதும் நம் இயக்கம் சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம் என்றே குறிப்பு காட்டி இருக்கிறோம். மத்தியிலும் பல தடவையிலும் எனது வழக்கு ஸ்டேட்மெண்டி லும் குறிப்பு காட்டி இருக்கிறேன். மற்றும் ஆரம்ப முதல் காங்கிரஸை எதிர்த்து வந்திருப்பதோடு தென்னாட்டில் காங்கிரசின் ஆதிக்கத்தை சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை பாராட்டிக் கொண்டே வந்திருக்கிறோம்.
இனியும் நாம் காங்கிரசை பார்ப்பனர் கோட்டையென்றும், அதன் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாய் கருதிக் கொண்டும் இருக்கிறோம்.
இன்றும் அன்றாடம் நித்திய நடவடிக்கை களில் காங்கிரசின் பேரால் நடக்கும் சூழ்ச்சி களைக் கண்டு ஆத்திரம் காட்டி அவ்வப்போது கண்டித்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம்.
சுயராஜ்ஜியம் என்பது அர்த்தமற்றதும் பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்த்தை என்றும், தேசாபிமானம் என்பதும் தேசீய என்பதும் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு நாடகம் என்றும், யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றும் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம்.
“இந்தியா பூராவுமே” பகிஷ்கரித்த சைமன் கமிஷனைக்கூட வரவேற்கச் செய்து அக் கமிஷனுக்கு உண்மை தெரியச் செய்தோம்.
இந்தக் காரியங்களால் ஒரு கூட்டத்தாரால் நாம் “தேசத் துரோகி’, “சர்க்கார் தாசர்’ என்ற பெயரைக்கூட வாங்கினோம்.
இதனால் எல்லாம் கெட்டுப் போகாத அழிந்து போகாத சுயமரியாதை இயக்கமும் அதன் பிரமுகர்களும் அதில் கலந்திருந்த தொண்டர்களும் இந்த அறிக்கையினாலோ சர்க்காருடன் சமாதானம் செய்து கொண்டதாலோ அழிந்து போகும் என்று யாராவது நினைப்பார்களானால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி கொண்டு நேரத்தைக் கெடுத்துக் கொள்வதை விட சற்று பொறுமையாய் இருந்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது புத்திசாலித் தனமான காரியமாகுமென்றே நினைக்கிறேன்.
சுதந்திர எண்ணம் தோன்றிய வாலிபர்கள் என்பவர்கள் என்னுடைய இந்த அபிப் பிராயத்துக்காக வெட்கப்படுவதாகக்கூடச் சொல்லலாம். இயக்கத்தில் இருப்பதே தங்கள் சுயமரியாதைக்கு அழகல்லவென்றும் சொல்ல லாம். இதைப் பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்றும் பலர் சொல்லலாம். பலர் இயக்கத்தை விட்டுப் போய் விடுவதாகவும் சொல்லலாம்.
இவை எல்லாம் எந்த எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் இயற்கையேயாகும். பழைய வாலிபர்கள், ஆட்கள் கழிதலும் புதிய வாலிபர்கள் ஆட்கள் புகுதலும் குற்றமல்ல, கால இயற்கையேயாகும்.
அது மாத்திரமல்லாமல் இயக்கத்தில் முக்கியஸ்தர்களாக கருதப் பட்டு வந்தவர்களே இயக்கத்தையும் இயக்கத்தில் முக்கியமாய் வேலை செய்து கொண்டு இருப்பவர்களையும் குற்றம் சொல்லுவதும் இயற்கையேயாகும்.
எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இது விளங்கும். ஜஸ்டிஸ் கட்சியில் தாசானு தாசர்களாய் இருந்தவர்கள் இன்று அந்தக் கட்சியை வைது கொண்டு அழிக்க முற்பட்டுக் கொண்டு திரிவது நமக்குத் தெரிய வில்லையா? காங்கிரசில் தாசானுதாசர்களாய் காந்தியாருக்குத் தாசானுதாசர்களாய் இருந்தவர்கள் காங்கிரசை வைதுகொண்டும், காந்தியாரை வைதுகொண்டும் இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்கு சேமமில்லை என்று சொல்லுகின்றவர்களையும் நாம் பார்க்க வில்லையா? பெசண்டு அம்மையாரை குருவாக வும், “தெய்வமாகவும்”, அந்த ஸ்தாபனத்தைத் “தெய்வீக” ஸ்தாபனமாகவும் கொண்டாடி யவர்கள் இன்று அந்த அம்மையாரையும், அந்த ஸ்தாபனத்தையும் பயனற்றது என்றும் ஹம்பக் என்றும் சொல்லுகின்றதை நாம் பார்க்க வில்லையா?
மற்றும் சைவன் சைவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், வைணவன் வைணவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், முஸ்லீம் முஸ்லீம் மதத்தையே வைவதும் விட்டுப் போவதும் இவற்றிற் கெல்லாம் புது ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டு இருப்பதும் ஆன காரியங்களை “தெய்வத் தன்மை பொருந்திய” மத விஷயங் களில்கூட நாம் தாராளமாய் தினமும் பார்த்து வர வில்லையா? ஆகவே இவற்றாலெல்லாம் ஸ்தாபனங்கள் ஆடிப்போகும் என்று கருதுவது அனுபவ ஆராய்ச்சி இன்மையே ஆகும். எவ்வித மாறுதலும், இறக்கமும், ஏற்றமும் பிற்போக்கும் முற்போக்குமான விஷயமாய் இருந்தாலும் திடமான மனதுடன் உண்மையான முடிவுடன் ஏற்பட்டதானால் ஒற்றை ஆளாயிருந்தாலும்கூட ஒரு நாளும் ஆடிப் போகாது என்பது உறுதி.
ஆனால் ஊரார் என்ன சொல்லுவார்கள் எதிரிகள் என்ன சொல்லு வார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து, அதற்கு அடிமையாகி மாற்றங்கள் செய்வதனால் மாத்திரம் அவற்றிற்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருத முடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில் எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
ஆகவே இயக்க சம்மந்தமாகவும் திட்டங்கள் சம்மந்தமாகவும், வழக்கு சம்மந்தமாகவும் சர்க்கார் நிலைமை சம்மந்தமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமயையும் அவசியத்தையும் விளக்கவே இதை எழுதுகிறேன்.
பெரியார், ‘குடிஅரசு’ தலையங்கம் 31.03.1935
சுயமரியாதையும் பொதுவுடைமையும் (4)
‘மே’ நாளைக் கொண்டாடுங்கள்!
பெரியார் சமதர்ம பிரச்சாரத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்த பிறகுதான் அதே ஆண்டு தொழிலாளர் தினமான ‘மே’ தினத்தைக் கொண்டாடுமாறு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை இது.
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1ம் தேதியை “தொழிலாளர் தின”மாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள்.
பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைபாடுகளை பகிரங்கப்படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் அதாவது தொழிலாளர் குடிஅரசாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண் டாடப்படுகிறது.
இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப் பட்டது.
சு.ம. வீரர்களே! சம தர்மிகளே! தொழி லாளர்களே! தொழிலாளிகளின் தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லா விலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக் கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன்.
தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழி லாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இங்ஙனம்
ஈ.வெ. ராமசாமி,
‘குடிஅரசு’ 28.04.1935
சுயமரியாதையும் பொதுவுடைமையும் (5)
மே தினக் கொண்டாட்டத்தில் ஏனைய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டிய பெரியாரின் உரை.
தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.
அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.
ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.
இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதன் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.
எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப் படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.
மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப் பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப் பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி முதலாளி கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.
ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும் அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
ஐந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும் ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக இழி மக்களாக நடத்தப்பட வில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திர மல்லாமல் ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளி களாகவோ, சரீரப் பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும் சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி முதலாளி அல்லது எஜமான் அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில் தான் பெரியதொரு கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்.
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டு மானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 100க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளியாகவும், அடிமையாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப்பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறுவிதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி அந்தஸ்துடன் வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.
ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு ஆக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படை யுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மை யையும் ஒழிக்க சம்மதிக்கவில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர் களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழில்சாலையில் நித்திய கூலிக்கோ மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதினாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய்ப் பேசி விடுவதினாலேயே அல்லது அவர்களுக்கு தலைமை வகிக்கும் பெருமையை சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாகக் கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல் தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்ட தாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன்.
இந்த முதலாளி தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர் கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களேயாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.
ஆகையால் இதில் வெள்ளையர் கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்பதைத் தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டி யிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருப்பதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.
இன்று நம் நாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியே யாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.
இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பன ரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத் துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம் வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப்பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண் பெண் கொடுமையும் ஒழிய வேண்டியது அவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமை களாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள் நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க, இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில் நமது பண்டிகைகளில் அனேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதே யாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர் கூடி இப்பண்டிகை களைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.
பெண்களையும் வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம் பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப் படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படு வதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளை யும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்மந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக் கூட்டத்தை முடித்து விடுகிறேன்.
குறிப்பு: 01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய முடிவுரை.
பெரியார், ‘குடி அரசு’ 12.05.1935
நிமிர்வோம் மே 2018 இதழ்