இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்
உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவு ஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா?
இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குமுன் ரூர்க்கேலா அய்.அய்.டி. வளாகத்தில் மனிஷ்குமார் என்ற ‘சாமார்’ சாதிப் பிரிவில் பிறந்த (செருப்பு தைக்கும் சமூகம்) மாணவர், வளாகத்துக்குள் பிணமாகக் கிடந்தார். அவரது சாவின் ‘மர்மம்’ அப்படியே நீடிக்கிறது. 2014ஆம் ஆண்டு பம்பாய் அய்.அய்.டி. விடுதியில் அனிஹட் அம்ப்ஹோர் என்ற தலித் மாணவர் மர்மமாக இறந்து கிடந்தார். ஜாதி அவமானத்துக்கு உள்ளாகியே தனது மகன் பிணமானார் என்று பெற்றோர்கள் புகார் தந்தார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அய்.அய்.டி.க்கு எதிரான போராட்டங்கள் எதையும், தமிழ்நாட்டின் ஆங்கில-தமிழ் நாளேடுகள் இருட்டடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் பத்திரிகைகளோடு நெருக்கமான தொடர்புகொண்டு, செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது. மறைந்த பேராசிரியர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் இது பற்றி எழுதினார். ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடுகள் மட்டும் துணிந்து சுஜி பழிவாங்கப்பட்ட செய்திகளை வெளியிட்டன. (அதற்காக, அந்த ஏடுகளின் செய்தியாளர்கள் முறையே ஜெயா மேனன் மற்றும் பகவான் சிங் மீதும் அந்த ஏடுகளின் நிர்வாகத்தின் மீதும் அய்.அய்.டி. இயக்குனர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்) இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு அய்.அய்.டி. நிர்வாகம், அதன் வரலாற்றிலேயே முதன் முதலாக தலித் மாணவியை தோல்வி அடையச் செய்த தனது அநீதியான முடிவை திரும்பப் பெற முன் வந்தது. சுஜி, தொடர்ந்து படித்தாலும் அவரால் கல்வியை அங்கே தொடர முடியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், அனுப்குமார் எனும் மாணவர், ‘அய்.அய்.டி.’களில் ஜாதியம் குறித்து நேரடி விசாரணை நடத்தி, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதேபோன்று பல்கலைக்கழக நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட். நேரடி ஆய்வுகளை நடத்தி, 72 சதவீத தலித் மாணவர்கள் புறக்கணிப்புக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார்கள் என்பதை வெளிச்சப்படுத்தினார் (டைம்ஸ் ஆப் இந்தியா, செப்.2014).
பெரியார் முழக்கம் 21112019 இதழ்