பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்
வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தியது ஆகிய பணிகளில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் டெல்லியில் முடிவெய்தினார். அவருக்கு வயது 86.
கேரளாவில் 1932 டிசம்பர் 30ஆம் தேதி பிறந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். 1956இல் அய்.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வான அவர், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். எஸ்.சி. பிரிவினருக்கு சிறப்புக்கூறு திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர். 1990இல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மத்திய அரசின் கொள்கை உருவாக்க குழுக்களில் பொறுப்பாளராக பணியாற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவுரவ ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். ‘நீதிபதி கிருஷ்ணய்யர் விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காக தனது பதவிக் காலம் முழுதும் பாடுபட்டதோடு ஓய்வுக்குப் பிறகும் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார். மண்டல் ஆணையத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஆவணத்தை எழுதியதில் முக்கியப் பங்காற்றியவர் பி.எஸ்.கிருஷ்ணன். சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 9.11.2019 அன்று முடிவெய்தினார்.
திராவிடர் விடுதலைக் கழகம், சமூக நீதிப் போராளிக்கு வீர வணக்கம் செலுத்துகிறது.
பெரியார் முழக்கம் 14112019 இதழ்