டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்
புதுடில்லியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து, அக்.9 முதல் ‘சதுர்வேதா சாவர்க்கர் மகாயக்ஞா’ என்ற யாகம் நடத்தியுள்ளனர். நான்கு வேதங்களைப் பரப்புவதற்கு இந்திய நாகரிகம் வேத நாகரிகமே என்பதை உணர்த்தவும், வீட்டு நிகழ்வுகளில் வேத சடங்குகளைப் பின்பற்ற வைக்கவும் இந்த யாகம் நடத்தப்படுவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித் துள்ளது. மத்திய அமைச்சர் இதில் பங்கேற்றுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். என்ற பாரம்பரிய அமைப்பு, வேதகலாச்சார அடிப்படையிலான இந்து தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களை உறுப்பினராக சேர்க்க ஆர்.எஸ்.எஸ். மறுத்து வருவதோடு அதன் துணை அமைப்புகள் எல்லாவற்றுக்கும் சமஸ்கிருதப் பெயரையே சூட்டியுள்ளது.
1939ஆம் ஆண்டு வரை ஆரிய நாட்டை வணங்குகிறோம் என்று இந்தியிலும், மராத்தியிலும், பிரார்த்தனை செய்து வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிறகு இதை பார்ப்பனர்களின் “தெய்வீக மொழி”யான சமஸ்கிருதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்கள்! தங்களின் சுயரூபத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய அந்தப் பாடல் வரிகளை மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்கள் அவர்களின் சமஸ்கிருத வெறித்தனத்தைப் பட்டாங்கமாகப் படம் பிடித்துக் காட்டிவிடுகிறது!
ஆர்.எஸ்.எஸ். சட்டதிட்டங்களில் 8ஆவது பிரிவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் உள்ள பிரிவுகள் என்ன என்பது எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது! அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள்; இந்தியா முழுமைக்கும் அது எந்த மொழி பேசும் மாநிலமாக இருந்தாலும் அந்த அமைப்புகள் இந்த சமஸ்கிருத மொழியிலேதான் அழைக்கப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களின் 8ஆவது விதியில் கூறப்பட்டிருக்கும் பிரிவுகளின் பெயர்கள் என்ன?
“பிராண்ட்” – மண்டலம்
“விபாக்” – மண்டலத்தில் ஒரு பகுதி
“பிராந்திய கேந்திரா” – மண்டலத் தலைமையகம்
“ஜில்லா” – மாவட்ட அமைப்பு
“ஷாகர்” – நகர அமைப்பு
“மண்டல்” – கிராம அமைப்பு
சட்டத் திட்டத்தின் 11ஆவது பிரிவு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர்கள், உயர் அமைப்புகள் பற்றி எடுத்துச் சொல்கிறது.
தலைவர்கள், பல்வேறு உயர் மட்டப் பிரிவுகளின் பெயர் பட்டியல் இது.
- “சர் சங் சலாக்” (இவர்தான் அமைப்பின் தலைவர்)
- “சர் கார்ய வஹா”
- கேந்திரிய கார்ய காரி மண்டல்
- அகில பாரதீய பிரதிநிதி சபா
- பிராந்த், விபாக், ஜில்லா மற்றும் சங்சலக்குகள்
- பிரச்சாரக்
- பிராந்திய பிரதிநிதி சபா
ஆர்.எஸ்.எஸ்.ஸைத் துவக்கிய ஹெட்கேவருக்குப் பெயர் – அத்ய சர்சங்சலக். (ஆதாரம் விதி 12)
14 ஆவது விதியில் “கேந்திர கார்யகாரி மண்டல்” என்ற அமைப்பில் யார் யார் அங்கம் வகிப்பார்கள் என்று கீழே விவரிக்கப்பட்டிருக்கிறது.
அவைகள் இதோ:
- சர் கார்ய வஹா
- ஷா சர் கார்ய வஹா
- அஹில் பாரதீய ஷிரிக் ஷிக்கான் பிராமுக்
- அஹில் பாரதீய பவுதீய பவுதிக் ஷிக்கான் பிராமுக்
- அஹில் பாரதீய பிரச்சார் பிராமுக்
உறுப்பினர்களுக்கு தரப்படும் பயிற்சிவகுப்புக்குப் பெயர் “அதிகாரி ஷிக்ஷன்வர்கா” இவர்கள் – நடத்தும் நிகழ்ச்சிகளுக்குப் பெயர் “வியாஸ் பூர்ணிமா” பொருளாளருக்குப் பெயர் நிதி பிரமுக் – தினசரி நடத்தும் பயிற்சிக்குப் பெயர் “ஷாக”, “சமஸ்கார்.”
வாத்ய இசையை அமைத்துக் கொண்டு முன்னே போவதற்குப் பெயர் “கோஷ்”. அணிவகுப்பு ஊர்வலத்துக்குப் பெயர் “பாதஞ்சலன்”.
பிறப்பிக்கின்ற கட்டளைக்குப் பெயர் “ஏகச”, “சப்பத” முதல் நபராக வருகின்றவர்களை அழைக்கின்ற பெயர் “அக்ரே சரோராக.”
குழந்தைகள் மாநாட்டுக்குப் பெயர் “சிசு சங்”.
ஏன் இந்த அமைப்புக்கே பெயர் “இராஷ்டிரிய சுயம் சேவக் சங்க்.”
தலையைச் சுற்றுகிறதா தோழர்களே! இந்தக் கூச்சல் தமிழகத்தில் கேட்கலாமா?
இப்படி எல்லாவற்றிலும் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கும் இந்த அமைப்பு பார்ப்பனீயத்தின் கலாச்சாரப் பாதுகாப்பு என்பது அல்லாமல் வேறு என்ன?
இவைகள் எல்லாவற்றையும் விட ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரகடனமே பார்ப்பனீய சமஸ்கிருத வெறியைத் தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களில் “விதிகளும் ஒழுங்கு முறைகளும்” என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“The aims and objects of Sangh are to weld together the diverse groups within Hindu Samaj and to revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit, that it may achieve an all sided development of the Bharathvarsha.”
“இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு எழுச்சி ஊட்டி இளமை இரத்தம் பாயச் செய்ய வேண்டும். இந்து தர்மம், மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லா துறைகளிலும் வளர்ச்சிப் பெற முடியும். இதுதான் இந்த அமைப்பின் நோக்கமும் கொள்கையும் ஆகும்.”
இந்த கொள்கையை அரசு அதிகாரத்தின் வழியாக முன்னெடுப்பதற்கே இந்த யாகம் நடக்கிறது! ட
பெரியார் முழக்கம் 24102019 இதழ்