திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் -2 தேர்வில் தமிழ் மொழித்தாள் நீக்கம் !*

தமிழக அரசின் இந்த அறிவிப்பு *தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை முற்றிலும் பறிக்கும் சூழ்ச்சித் திட்டம்* !

*திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !*

*தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !*
தமிழக அரசால் தமிழ்நாட்டில் பணிபுரிவதற்காக பணியாளர்களைத் தெரிவு செய்ய தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது நடைபெற உள்ள குரூப்- 2 தேர்வில் தமிழ் மொழித்தாளை நீக்குவதாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மத்திய அரசுப் பணிக்காக தமிழ்நாட்டில் பணி புரிவதற்கு, தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கே அந்த வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் மத்தியில் பரப்புரை செய்து போராட்டங்கள் நடத்தி வரும் இச்சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை முற்றிலும் பறித்து வடநாட்டவர் இங்கு வந்து தமிழக அரசுப்பணிகளில் அமர்வதற்காக செய்யப்பட்டுள்ள திருத்தம் என்றே இதனைக் கருதச் செய்கிறது.

ஏற்கனவே மத்திய அரசுப்பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்ப்ட்டு சூழ்ச்சிகரமாக தமிழ்நாட்டில் வடவர் திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பது நாளும் நாளும் மிக வெளிப்படையான செய்திகளாகவே  ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த தொடர்வண்டித்துறை பணியாளர்த் தேர்வில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு வடநாட்டவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வருமானவரித்துறை பணி நியமனங்களிலும் இதே நிலைதான். சென்ற 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணி இடங்களுக்கு எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 36 பேர் அதாவது 12 விழுக்காடு நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தமிழக அரசின் முக்கிய நிர்வாகத்துறையில் துணை வணிக வரித்துறை அலுவலர், சார் பதிவாளர்  போன்ற பொறுப்புமிக்க பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வான குரூப்-2 தேர்வில் தமிழ் மொழித் தாளை நீக்கி, வடநாட்டவர் அப்பணிகளில் சேர வாய்ப்பை ஏற்படுத்தி தமிழக அரசு மத்திய பாஜக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் கைப்பாவையாக செயல்படுவது தமிழினத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். இதன் மூலம் தமிழே தெரியாத வடநாட்டவர் ஒருவர் தமிழ்நாட்டில்
ஆட்சியர் அலுவலகத்திலும், வணிகவரித்துறை போன்ற அலுவலகங்களிலும் உயர் பதவிகளில் அமர்ந்துவிட முடியும். தமிழ்நாட்டு மக்கள் இந்த தமிழே தெரியாத இந்தி மொழி பேசும் வடவர்களிடம் தங்கள் குடிமைப்பணிகளுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உருவாகும்.

2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தமிழக அ.திமு.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில், அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள்) சட்டம் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது. இதன்படி 7.11.2016 இல் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை, தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியில் சேரலாம் என்று தெரிவிக்கிறது. இந்த தேர்வாணைய விதிகள் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி 20.09.2019 அன்று பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின் மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாட்டில்  படித்த பட்டதாரி இளையோர் 90 இலட்சத்துக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய தமிழக அரசு அந்த வேலைவாய்ப்பைப் பறித்து வடநாட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு வழங்க வழி செய்யும் இந்த குரூப் -2 தேர்வில் தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

*கொளத்தூர் தா.செ.மணி*
*தலைவர்* ,
*திராவிடர் விடுதலைக் கழகம்* .
*28.09.2019*

You may also like...