உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி
உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக் கணிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பானுமதி குற்றம்சாட்டியுள்ளார். மூத்தோர் முன்னுரிமைப்படி இல்லாமல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகரை புறக்கணித்து, இமாச்சல் பிரதேச தலைமை நீதிபதியான வி.ராமசுப்ரமணியத்தை (இவர் ஒரு பார்ப்பனர்) கொலிஜியம் பரிந்துரைத்தது ஏன் என்றும் நீதிபதி பானுமதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஆகஸ்ட் 28இல் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், ரவீந்திர பட், வி. ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரே மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரையும் உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந் துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகளில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பானுமதி குற்றம் சாட்டியுள்ளார்.
சீனியாரிட்டி அடிப்படையில் இமாச்சல பிரதேசத்தின் தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் 42ஆவது இடத்தில் உள்ளதாகவும், அதே சமயம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சுதாகர் 3ஆவது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சுதாகருக்கான சீனியாரிட்டியை எப்படி புறக்கணிக்கலாம் என்றும் நீதிபதி பானுமதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் 6ஆவது மூத்த நீதிபதியான பானுமதி கொலிஜியம் குழுவில் இடம் பெறவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றியவர் என்பதால், அதே நீதிமன்றத்தில் பணியாற்றிய ராமசுப்பிரமணியன் தேர்வு குறித்து இவரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது தனது அதிருப்தியை நீதிபதி பானுமதி வெளிப்படுத்தி யுள்ளார்.
75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த தகில் இரமணி, 3 நீதிபதிகளே கொண்ட மேகாலயா உயர்நீதி மன்ற நீதிபதியாக ‘பொலிஜியம்’ மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் உயர்நீதிபதி பதவியிலிருந்து விலகி விட்டார்.
பெரியார் முழக்கம் 12092019 இதழ்