வாசகர்களிடமிருந்து…

திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள்  மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன்.

– பெ. கார்த்திக், திண்டுக்கல்

பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்கு புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கு கெடுதி விளையக் கூடும் இந்த பிராமணரல்லாதார் கிளர்ச்சி காலகதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்கள் இருக்கின்றன” – இப்போது ‘சங்கிகள்’ பேசும் இதே குரலை அப்போதே ஒலித்தவன் பாரதி.

பசுவை இந்துக்களின் தெய்வம் என்று இப்போது சங்பரிவாரங்கள் பேசுவதை அந்தக் காலத்திலேயே பேசியவன் பாரதி.

“பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும் பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்த தேசத்தில் பகிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்” என்று 1917லேயே ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் எழுதியவன் பாரதி.

லெனினை பரம மூடன் என்று எழுதிய பாரதியை பொதுவுடைமை கட்சியினர் எப்படி கொண்டாடு கிறார்கள் என்று புரியவில்லை. சொல்லப் போனால் அந்தக் காலத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் பாரதி.

– த. அமுது, மயிலாடுதுறை

மத மறுப்பாளர்களுக்கும் மதச் சார்பற்றவர் களுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பல நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதிப்படுத்தியிருந்தாலும் ‘மனம் புண்படுகிறது’ என்று சட்டப் பிரிவுக்குள் மதவாத சக்திகள் பதுங்கிக் கொண்டு நாத்திகர் கருத்துரிமையைத் தடுக்க முயற்சிக்கின்றன. இது குறித்து ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் வந்த சிறப்பான கட்டுரையை ‘நிமிர்வோம்’ வெளியிட் டிருந்தது. ஏராளமான தீர்ப்புகளை சான்றுகளாக முன் வைக்கிறது இக்கட்டுரை. நாத்திகப் பிரச்சாரத்துக்கான உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்து மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை என்ற அரசியல் சட்டத்தின் நோக்கம் முழுமையடையும்.

– திருவேங்கடம், மணப்பாறை

ஏடுகள், இதழ்கள் அனைத்தும் இருட்டடித்த ஒரு செய்தியை ‘நிமிர்வோம்’ வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன். தலித் பெண்கள் அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்ததையும் ஜாதிய ஒடுக்குமுறைகள் எப்படி இந்தியாவில் தலை விரித்தாடுகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் அதில் விளக்கியிருந்ததையும் அறிந்து மகிழ்ந்தேன். அந்தப் பெண் போராளிகளின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நல்ல நம்பிக்கையை விதைத்தன.

– இ.ரெ. சுந்தரம், நெல்லை

நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

You may also like...