பெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும் – வ.கீதா

ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டாகிறது. புரட்சிக் காலகட்டத்தில் பெரியாரும், அதுகுறித்த விரிவாக நடத்திய விவாதங்களை முன்வைக்கிறது இக்கட்டுரை, பெரியார் விட்டுச சென்ற நுட்பமான சமூகப் புரிதலை சமகாலத்தில் முன்னெடுப்பதில் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தையும் கட்டுரை பதிவு செய்கிறது.

போல்ஷெவிக் புரட்சியின் 100ஆவது ஆண்ட விழாவை அடுத்தாண்டு நாம் அனுசரிக்க இருக்கும் வேளையில் அப்புரட்சி மரபு ஈன்ற முக்கியமான அரசியல் ஆளுமைகளில் ஒருவரான ஃபிடல் காஸ்டிரோவை நினைவு கோராமல் இருக்க முடியாது. காரணம், போல்ஷெவிக் புரட்சியாளர்களான லெனின், ட்ராட்ஸ்கி ஆகியோரை போல அவருமே சோசலிசத்தை கட்டியெழுப்பும் பணியை புதிய மானுடத்தை உருவாக்க முனையும் பணியுடன் அடையாளப்படுத்தினார். அவரின் சக புரட்சியாளரான செ குவேரா, உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது எத்தனை அவசியமோ, புதிய மனிதனை உருவாக்கும் செயல்பாடும் அத்தனை அவசியமானது என்று வாதிட்டார். இத்தகைய உருவாக்கத்தை கட்டளைகள் மூலமோ புரட்சி நடந்து முடிந்த மாத்திரத்திலோ சாதிக்க முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கல்வி, கேள்வி, விவாதம், புரட்சியாளர்கள் சிறந்த முன்னுதாரணங்களாக இருந்து மக்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பது, கலையிலும் இலக்கியத்திலும் புதிய பரிசோதனைகளுக்கு இடமளிப்பது என்பன போன்ற பலவகைப்பட்ட செயல்பாடுகளை உள்ளடக்கிய அணுகுமுறையே புதிய மானுடத்தை வார்த்தெடுக்க உதவும் என்றும் விளக்கினார்.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார தளத்திலும் சோசலிசத்தை கட்டியமைக்கும் பணியை நிறைவு செய்ய, அதற்கு ஈடுகொடுக்க மேற்கண்ட பணிகள் அமைய வேண்டியதையும், இவற்றை செய்து முடிக்க அறவயப்பட்ட மனநிலையும் உறுதிப்பாடும் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அது நடந்து முடிந்த தருணத்தில் புதிய மானுடத்தைநோக்கியபயணமாகவே போல்ஷெவிக் புரட்சி அறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (பாரதி அதை யுக புரட்சி என்றார்). காலத்தை புரட்டி போட்டதோடு புதிய காலம் பிறப்பதற்கானஅறிவிப்பாகவும்அதுவிளங்கும் என்ற கனவும் எதிர்பார்ப்பும் சோசலிசம் என்றால் என்னவென்று அறியாதவர்கள் மத்தியிலும் அன்று இருந்தது. காலனிய ஆட்சிக்கு எதிராகவும் மன்னராட்சிக்கு எதிராகவும் செயல்பட துணிந்திருந்த ஆயிரமாயிரம் மக்கள் போல்ஷெவிக் புரட்சியை இவ்வாறுதான் புரிந்து கொண்டனர். துருக்கி, எகிப்து, மெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் நவீன கல்விமுறையில் பயின்று, தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தை மாற்றியமைக்க விழைந்த பல இளம் அறிவாளிகளுக்கும் ஜனநாயகத்தில் நாட்டமுடையவர்களுக்கும் இத்தகைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தன.

இந்தியசூழலில்சாதிஎதிர்ப்புமரபைச்சேர்ந்த சிந்தனையாளர்கள்தான் சாதி அடையாளம் கடந்த, அதனை துறந்த புதிய மானுடம் குறித்து பேசி வந்தனர், எழுதினர், பரப்புரை செய்தனர். அவர்களுக்கும் போல்ஷெவிக் புரட்சி என்ற அந்த நிகழ்வு முக்கியமானதாக தோன்றியது. போல்ஷெவிக் புரட்சி குறித்து 1917-18ஆம்ஆண்டுகளியேயேதமிழர்கள்அறிய வந்தனர் (பாரதியார் இது குறித்து விரிவாக எழுதினார். தேசிய இயக்க நாளேடுகளிலும் புரட்சி குறித்த செய்தகள் வெளிவந்தன.) சுய-மரியாதை இயக்கத்தை பொருத்தவரை, புரட்சிக்குப் பிந்திய ரஷ்யா குறித்த விரிவான செய்திகளைஇயக்கஏடுகள்1928முதற்கொண்டே தொடர்ந்து வெளியிட்டதுடன் அப்புரட்சி கண்ட மாற்றங்களையும் சாதனைகளையும் நமக்கானதாக எவ்வாறுஉட்செரித்துக் கொள்ளப் போகிறோம் என்பது குறித்தும் விவாதித்தன. குறிப்பாக, பெரியார் சோவியத் யூனியனில் முன்றுமாதக் காலம் தங்கிவிட்டு வந்த பிறகு அவரே இத்தகைய சாதனைகளை முன்வைத்து தமிழக, இந்தியச் சூழலில் நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பேசினார். பார்ப்பனீயம், இந்துமதம், சாதிவரிசைஆகியவற்றைமறுக்கும் மாற்றங்களாக அமைந்து, புதிய சிந்தனை, செயல்பாடு, சுருங்கச் சொன்னால் புதிய மானுட ஓர்மை உருவாக இத்தகைய மாற்றங்கள் வழிவகுக்கும் என்பதை எடுத்துரைத்தார்.

பெரியாரும் சுய மரியாதை இயக்கத்தில் சோசலிச சிந்தனையுடையவர்களும் ரஷ்யா குறித்து மட்டும் எழுதவில்லை. சர்வதேச அளவில் நடந்த புரட்சிகர மாற்றங்களையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். குத்தூசி குருசாமியை ஆசிரியராக கொண்டு தொடங்கப்பட்ட ஆங்கில வாராந்திர ஏடான ரிவோல்ட்டில் உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பில் சர்வதேச அளவிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நடந்து வரும் புரட்சிகர செயல்பாடுகள், குறிப்பாக மதமறுப்பு, புரோகித-மறுப்பு செயல்பாடுகள் குறித்த கட்டுரை 1928இல் வெளியானது. அக்கட்டுரையின் தமிழ் வடிவம் குடிஅரசில் ஏற்கனவே வெளிவந்திருந்தது (7.10.1928). ரஷ்யா மட்டுமின்றி துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத்துக்கும் அரசதிகாரத்துக்கும் இருக்கும் உறவு துண்டிக்கப்பட்டதை இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டின. மதத்தின் செல்வாக்கை போல்ஷெவிக் புரட்சியாளர்கள் அழித்தொழித்ததையும் இந்த கட்டுரைகள் கவனப்படுத்தின.

 

1931இல் ஸ்பெயின் நாட்டில் தோற்று விக்கப்பட்ட குடியரசை பற்றிய கட்டுரை அக்குடியரசின் நிறைகுறைகளை விவாதித்து எழுதியது. மன்னராட்சிக்கு எதிராகவும் குடியரசாட்சிக்குசார்பாகவும்நிற்கும்அரசியல் இயக்கங்கள் குறித்த செய்திகள், குறிப்பாக ஸ்டாலின்,ட்ராட்ஸ்கிஆகியோரின்வேறுபட்ட அரசியல் புரிதல்களினூடாக வெளிப்பட்ட குடியரசு ஆதரவு ஆகியன குறித்து இக்கட்டுரை பேசியது (குடிஅரசு, 15.1.1933). ஸ்பெயின் குறித்த வேறுவேறுகட்டுரைகள் தொடர்ந்துகுடிஅரசில் வெளியிடப்பட்டன -பாசிசத்தின் தோற்றம், அதன் பின்னணி ஆகியனவற்றை விளக்கி, விமர்சித்துஎழுதப்பட்டக்கட்டுரைகளாகஇவை அமைந்ததுடன்,பாசிசத்தைஎதிர்க்கத் துணிந்த இடதுசாரிகளின் எழுச்சியான அரசியலையும் இவை போற்றின. சீனக் கம்யூனிஸ்டுகள் குறித்த கட்டுரைகளும்குடிஅரசில்மட்டுமின்றி,புரட்சி, பகுத்தறிவு ஏடுகளிலும் வெளியிடப்பட்டன (எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, சுமரியாதை சமதர்மம், விடியல், 2009 பதிப்பு, ப. 607).

சர்வதேசநடப்புகளைபற்றியகட்டுரைகளிலும் கூட அத்தகைய நிகழ்வுகளை இந்திய சூழலுக்குரிய வகையில் நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்ற அக்கறையை பெரியார் உட்பட அனைத்து கட்டுரையாளர்களும் வெளிபடுத்தினர். ஸ்பெயின் பற்றிய கட்டுரையில் இது மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

ஸ்பெயினில் தற்சமயம் இருந்து வரும் குடி அரசுக்கு சற்று பலம் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அங்கு தற்சமயம் உள்ள குடிஅரசானது ஒரு வகை முதலாளி குடிஅரசு ஆகத்தான் இருக்கிறது. சென்ற 5, 6 வருஷ காலமாய் சென்னை மந்திரி சபைகளுக்கு எப்படியாதொரு கொள்கையுமில்லாமல் எப்படியாவதுஉத்யோகம் நிலைத்தால் போதும் என்கின்ற ஒரே “பலமான” கொள்கை மீது மந்திரிகள் நிர்வாகம் நடைபெற்று வந்தனவோ அது போலவே தான் ஸ்பெயின் குடி அரசு அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் நடந்து வருகின்றது. மக்களுக்கு உண்மை உணர்வு வந்து விட்டால் இம்மாதிரி கொள்கையற்ற ஆட்சி ஒழிந்து தான் தீரும். …இந்தியாவிலோ கைராட்டினமும், கோவில் பிரவேசமும் தான் தாண்டவமாடுகின்றது. இதைத்தான் தேசியமாகவும், சுயராஜ்யமாகவும், குடி அரசாகவும், புரட்சியாகவும் பாமர மக்கள் கருதும்படிகாந்தியார்மூலம்நிர்வாகம்நடைபெற சில முதலாளிகளும், கோடீஸ்வரர்களும் பண உதவி செய்து வருகிறார்கள். …நாளைக்கு ஏதாவது இந்தப் பணக்காரனையும், உத்யோகஸ்தனையும் திட்டி காலம் கடத்துவதற்கு ஏதாவது ஒரு இயக்கமோ கட்சியோ கிடைக்காதா என்று தேடவேண்டியதைத் தவிர வேறு ஒரு வேலையும் கிடைக்கப்போவதில்லை…. இத்தனைசந்தடியில் ‘கல்யாணசந்தடியில் தாலிகட்ட மறந்தது’ போல் பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கதி மறந்து போய் அவர்கள் என்றும் பதினாறாக வாழப் போகின்றார்கள் என்பதில் யாரும் கடுகளவு சந்தேகமும் படவேண்டியதில்லை (குடிஅரசு, 15.1.1933).

இத்தகைய கட்ரைகள் போக, 1930களில், லெனினின் வாழ்க்கை வரலாறு குடிஅரசில் தொடராக வெளிவந்தது. குடிஅரசில் வெளிவந்த லெனின் குறித்த சில கட்டுரைகள் பின்னர் நூலாகக் தொகுக்கப்பட்டு லெனினும் மதமும் என்ற தலைப்பில் வெளிவந்தது -டால்ஸ்டாய் பற்றிய லெனினின் கட்டுரையும் இதில் அடங்கியிருந்தது. டால்ஸ்டாய் பற்றிய லெனினின் கட்டுரைகள் பெரியாரை வெகுவாக கவர்ந்ததால் அது குறித்து அவர் விரிவாக எழுதினார். லெனின் டால்ஸ்டாய் குறித்து முன்வைத்த விமர்சனம் ஏறக்குறைய பெரியார் காந்தியார் பற்றி கொண்டிருந்த விமர்சன பார்வையை ஒத்ததாக அமைந்தது இதற்கு ஒருமுக்கிய காரணமாக இருந்தது (எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, ப. 606). ரஷ்யாவில் பெண்கள் நிலை, ரஷ்ய சிறைச்சாலைகள், ரஷ்ய கல்விமுறை என்று அந்நாட்டின் பலவேறு துறைகள் கண்டிருந்த மாற்றங்கள் குறித்து பெரியார் மட்டுமின்றி பிறரும் கட்டுரைகளை இயக்க ஏடுகளில் எழுதினர். இவைப் போக ரஷ்ய நிலைமைகள், புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியன குறித்த ஆங்கில கட்டுரைகளும் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டன (மேலது நூல், ப. 606).

 

1940களில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட விவாதங்களிலும் ரஷ்ய முன்னுதாரணங்கள் முன்வைக்கப்பட்டன. இலக்குமிரதன் பாரதியின் கட்டுரை இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது –

ட்ராட்ஸ்கியின் ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில் பேசப்படும் கருத்துகள் இங்கு முன்மொழியப்பட்டதுடன் திராவிட நாடு கோரிக்கையின் தர்க்கநியாயத்தை இடதுசாரிகளுக்கும் இந்திய தேசியவாதிகளுக்கு விளக்குவதாகவும் அமைந்தது (மேலது நூல், 971-976). அது போல வேறொரு கட்டுரையும்

-எஸ். சி. பரன் என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுரையும் -தேசங்களின் சுய-நிர்ணய உரிமையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையாகும் (மேலது நூல், ப. 962-967). ரஷ்ய நடவடிக்கைகளை குறித்து இக்கட்டுரை நேரடியாக பேசாவிட்டாலும் தேசியம் குறித்து காங்கிரஸ்சோசலிஸ்ட்கட்சியினர்கொண்டிருந்த புரிதலானது அவர்கள் பாவிக்கும் சோசலிச அரசியலுக்கு உகந்ததல்ல என்ற வாதத்தை முன்வைத்தது.

போல்ஷெவிக் புரட்சி ரஷ்யாவில் மட்டுமின்றி சர்வதேசிய அளவில் சாதித்த அரசியல், சமுதாய மாற்றங்களை சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளர்களும் செயல்வீரர்களும் மிக முக்கியமான உலக நிகழ்வுகளாக கருதினர் என்பதில் ஐயமில்லை. பகசிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற கட்டுரையை சுய-மரியாதை இயக்க ஏடான பகுத்தறிவு வெளியிட்டமைக்காக கட்டுரையை மொழியாக்கம் செய்த ப. ஜீவானந்தமும் பகுத்தறிவு ஆசிரியராக இருந்த ஈ.வெ.கிருஷ்ணசாமியும்கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து, சாதி-எதிர்ப்பு, பார்ப்பனியஎதிர்ப்பு, பெண் விடுதலை, தாழ்த்தப்பட்டோர் விடுதலை ஆகியன பொருட்டு சுய-மரியாதை இயக்கம் செய்து வரும் பணிகளுக்கு கேடு விளைவிக்க விரும்பாத பெரியார், ஆங்கில அரசின் கண்காணிப்பையும் எதிர்ப்பையும் தவிர்க்கவே விரும்பினார். சமதர்ம கொள்கைகளை இனி தான் பிரச்சாரம் செய்ய போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்தார். அவரதுவற்புறுத்தலின்பெயரால்ஜீவானந்தமும் கிருஷ்ணசாமியும் அரசுக்கு “மன்னிப்பு” கடிதம் எழுதிக் கொடுத்தனர் (மேலது நூல், 362-64). என்றாலும் தொடர்ந்து சோசலிச கருத்துகளும், ஏன் ரஷ்யா பற்றிய கட்டுரைகளும் குடி அரசில் வெளிவந்தன. அதாவது, ரஷ்ய நிகழ்வுகளை சுயமரியாதை இயக்கத்தினர் எத்தனை முக்கிய மானவையாக கருதினர் என்பதையே இது காட்டுகிறது.

புரட்சி சாதித்த மாற்றங்களை இந்திய சூழலுடன் பொருத்திப் பார்த்து சுயமரியாதை இயக்கத்தினர் விவாதித்த கருத்துகளில் முக்கியமானவற்றை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். குடி அரசில் வெளிவந்த ஓரிரு கட்டுரைகளின் சாராம்சம் மட்டுமே இங்கு எடுத்துக்காட்டுகளாக கொள்ளப்படுகின்றன.

*** குடிஅரசு இதழில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதி முதன்முதலில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது என்பதை நம்மில் பலர் அறிவோம். அந்த மொழி யாக்கத்துக்கு அவர் எழுதிய முன்னுரையின் முக்கியமான பகுதியாக இவ்வரிகளைக் கொள்ளலாம். தற்காலம்உலகில்ரஷ்யாவிலும்,ஸ்பெயினிலும், மற்றும்சைனாமுதலியஇடங்களிலும்சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைற்றின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். … ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்தினருக்கு இந்தியர்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலை யாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால்

இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை (குடிஅரசு, 4.10.1931).

உலகம்அனைத்துக்கும்விடுக்கப்பட்டஅறை கூவலாக விளங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கையை இந்திய சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, வர்க்க வேறுபாடுகள் குறித்த உண்மையை அறிய வொட்டாமல் சாதி ஏற்பாடுகள் அரணாக அமைந்து வர்க்க வேறுபாடுகளை உள்ளபடியே காப்பாற்றி வருகின்றன என்ற மிக நுட்பமாக இந்தியசூழலின்தனிச்சிறப்பானதன்மையையும் அதனை எதிர்க்கொண்டு அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவையையும் பெரியார் விளக்கு கிறார். இத்தாலிய புரட்சியாளரும் மிகச் சிறந்த மார்க்சிய அறிஞருமான அந்தோனியோ கிராம்ஷி வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல், பொருளாதார தளங்களில் காணப் படும் முரண்பாடுகளை ஒருவர் உணரா வண்ணம் குடிமைச்சமுதாயம் அல்லது சிவில் சொஸைட்டி என்பது ஒருகோட்டையாகநின்று அவற்றைப் பாதுகாப்பதுடன் அவற்றுக்கான நியாய வாதங்களையும் தொடர்ந்து கற்பித்து வருவதாக கூறுவார். பெரியாரும் ஏறக்குறைய சாதியின் பாத்திரத்தை இப்படித்தான் புரிந்து கொண்டார்.

சாதி சமுதாயத்தை மையப்படுத்தியும் அச்சமுதாயத்தின் பண்பு கூறுகளை, குறிப்பாக அறிவுலகில் பார்ப்பனிய சிந்தனைமுறையின் மொத்த வடிவமான இந்து மதம் செலுத்தி வரும் ஆதிக்கத்தை விமர்சித்துமே கம்யுனிச சிந்தனையை இந்திய சூழலில் வளர்த்தெடுக்க முடியும் என்பதைதான் பெரியாரும் குத்தூசி குருசாமி போன்றவர்களும் திரும்ப திரும்ப கூறினர். ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் ஐந்தாண்டு திட்டத்தின் நுணுக்கங்களை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் அத்தகைய திட்டமிடுதல் ஏன் இந்தியாவில் சாத்தியப்படாது என்பதை கவி ரவீந்தரநாத் தாகூரின் சொற்களைக் கொண்டு பெரியார் விளக்கினார்.

சில மாதங்களுக்கு முன் ரஷ்ய தோழர் ஒருவர் கவி. ரவீந்தரநாத் தாகூருக்கு நிரூபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசத்தில் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எவைகள்? என்று வினவியிருந்தார். அதற்கு கவிதாகூர் “தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷ்ய நாட்டின் வெற்றிக்கு காரணம். சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதேஎங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார் (குடிஅரசு, 23.7.1933).

ரஷ்யப் புரட்சி சாதித்த கூட்டுறவு முறையை மதிப்பிட்டு எழுதுகையில் அத்தகைய மாற்றங்கள் மனதளவிலும், செயலளவிலும் இருக்க வேண்டியதன் அவசியத்தை பெரியார் எடுத்துரைத்தார். கூட்டுறவாளர்கள் தினத்தன்று ஆற்றிய சொற்பொழிவில்ரஷ்யாவில் கூட்டுறவு வாழ்க்கைமுறைக்கு தரப்படும் முக்கியத்துவம், நகரங்களில் மக்கள் கூட்டுவாழ்க்கை நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றை முக்கியமான சாதனைகளாகஅடையாளப்படுத்திப்பேசினார். கூட்டுறவு வாழ்க்கையின் தத்துவத்தை அவர் இவ்வாறு விளக்கினார்.

ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப்பற்றி பேசுபவன் என்று உங்களுக்கு தலைவர் எடுத்துச்சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கிய பாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒருகாலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளைக் கவனித்துப் பார்த்ததினால், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது எண்ணம் சாத்திய மாகக் கூடிய தென்பது மிக்க பலமாக உறுதிப்பட்டது. …எனது முடிவான லக்ஷ்யம் அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத் தானிருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.

கூட்டுறவு என்கிற உயரிய சரியான நிலையானது நம்முடைய நாட்டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று-சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வோம் என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று குதூகுலமாகவாழவழிஏற்பட்டுவிடும்….கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது எவ்வாறு உதவி செய்வது என்கிறவிஷயங்களேநமதுவாழ்க்கையின்முக்கிய லக்ஷியமாய் இருக்கவேண்டும். என்பதாகும். இவைகளில் தனித்தனி மனிதனைப்பொறுத்த தத்துவம் என்பதே கூடாது… (குடிஅரச, 12.11.1933)

 

கூட்டுறவு வாழ்க்கைமுறையை சகாய வாழ்க்கை முறையாக அறிமுகப்படுத்திய பெரியார்அத்தகையசகாயவாழ்க்கைமுறையை நடத்த ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்டிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்துண்ணும் கூட்டுறவு சமையலறைகளையும் கூட்டு வசிப்பிடங்களையும் குறித்து விரிவாக எழுதினார். அதாவது கூட்டுறவுமுறையில் அமைக்கப்பட்ட ரஷ்ய பொருளாதார அமைப்புகளான கூட்டுப் பண்ணைகள், பொதுதொழிற்கூடங்கள் ஆகியவற்றை மட்டும் புரட்சி சாதித்த முக்கியமான சாதனைகளாக அவர் கருதவில்லை. பெண்களின் வேலை பளுவைக் குறைத்து அவர்களை குடும்ப வெளியிலிருந்து விடுவித்து பொதுவாழ்க்கைக்கு கொண்டுவர உதவும் பொதுசமையலறைகள் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டியதில் ஆச்சரியமேதும் இருக்க முடியாது. குடும்ப வாழ்க்கையும் சமையல் வேலைக்கென செலவிடப்படும் நேரமும் பெண்கள் சமூக பணிகளிலும் அறிவுப்பணிகளிலும் ஈடுபடுவதற்கு முட்டுக்கட்டைகளாக இருப்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்.

ஏற்றத்தாழ்வின்றி மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் பொது வசதிகளுடைய குடியிருப்புகளையும் ரஷ்ய அரசு அமைத்திருந்ததை முக்கியமான சாதனையாக அவர் கருதியதையும் நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். வாழ்விடமும் வசிப்பிடமும் சாதி அடையாளத்தை அறிவிக்கும் குறியீடுகளாக உள்ள சமுதாயத்தில் சாதி, வர்க்க வேறுபாடின்றி மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் தேவை, அதன் சாதகமான கூறுகள், அத்தகைய வாழ்க்கை முறையானது அழகும் ஓழுங்கும் கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையெல்லாம் ரஷ்ய எடுத்துக்காட்டைக் கொண்டு அவர் நிறுவ முனைந்துள்ளதை சாதிய சமூகத்தின் வாழ்க்கைப் பண்பாட்டை பற்றிய விமர்சனமாகவும் அதற்கான மாற்று என்பது சாத்தியம்தான் என்பதை நிறுவிக்காட்டும் புரிதலாகவும் நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

பெரியார் மட்டுமின்றி சுய மரியாதை இயக்கத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பல அறிவாளர்களும் ரஷ்ய நிலைமைகளுடன் இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு எழுதினர் என்று ஏற்கனவே கூறினோம். சோசலிசம் வறட்டு சிந்தாந்தமாக குறைக்கப்பட்டு வெறும் கோஷமாகவும் விதியாகவும் உருமாறிவிடக்கூடாது என்ற அக்கறையிலேயே பலர் எழுத முன்வந்தனர். பெரியாரும்இதைதான்பலமுறைவலியுறுத்தினார். இதனால்தான் அவர் தொழிலாளர்கள் குறித்துப் பேசும் போது தொழிலாளியின் மனநிலையை அவன் செலுத்தும் உழைப்பும், உழைப்புச் சூழலும் மட்டுமின்றி அவன் சார்ந்திருக்கும் சாதியும் வடிவமைக்கின்றன என்பதை சுட்டிக் காட்டினார். 1940இல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் கூலிக்காக மாரடிக்கும் தொழிலாளியின் தேவைகள், ஆசைகள், அவன் சந்திக்கும் ஒடுக்குமுறை, அவனை வருத்தி கசக்கிப் பிழியும் முதாளித்துவ வேலைமுறை ஆகியனவற்றின் பயனாய் அவன் வர்க்கவுணர்வு பெறுகிறான் என்பதை அவர் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளவில்லை (விடுதலை, 16.2.1940). அவன் தான் சந்திக்கும் ஒடுக்குமுறையை குறித்து யோசிக்கையிலும்கூட, தனது விடுதலை பற்றிய எண்ணத்தைக் காட்டிலும் தான் சாதிப்படிநிலை அமைப்பில் ஏற்றம் பெறுவதையும் எத்தகைய ஏற்றம் தனக்கு சாத்தியப்படும் என்று எண்ணி செயல்படுவதையும் பற்றியே கவலைக் கொள்வான் என்பதே அவரின் வாதமாக இருந்தது. இதனால்தான் பொதுவுடைமை வேறு, பொதுவுரிமை வேறு என்றும் அவர் வாதிட்டார். பொதுவுடைமை என்பது கணக்கு சம்பந்தப்பட்ட ஒன்று என்றும், பொதுவுரிமை என்பது பண்பு சம்பந்தப்பட்டது என்றும், பிறவியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அதிகாரங்கள் ஆகியவற்றை மறுத்து அனைவருக்கும் பொதுவான அறத்தையும் உரிமையையும் முன்வைக்கும் பொது தர்மமானசமதர்மம் என்பதுதான்இந்தியாவில் பொதுவுடைமை தத்துவத்தையும் அது சாதிக்க நினைக்கும் மாற்றங்களையும் நிலைநிறுத்தி பொதுநீதி,சமத்துவம்ஆகியவற்றைநிலைநாட்ட உதவும் என்றும் விளக்கினார் (குடிஅரசு, 25.3.1944).

ரஷ்யப் புரட்சியின் சிறப்பை, வரலாற்று முக்கியத்துவத்தை சுயமரியாதை இயக்கத்தினர், குறிப்பாக பெரியார் திரும்ப திரும்ப வலியுறுத்தியதை நாம் இன்று நினைவுகூர்கையில் அன்று அவர்கள் செய்ய முனைந்ததை பற்றிய முழுப் பார்வையை ஏற்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. சாதி சமுதாயத்தில் உழைப்பு, உழைப்பாளி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள இடம், பாத்திரம், அவர்களின் சமூக அடையாளத்தை வாழ்விடமும் வசிப்பிடமும் சாதி அடை யாளத்தை அறிவிக்கும் குறியீடுகளாக உள்ள சமுதாயத்தில் சாதி, வர்க்க வேறுபாடின்றி மக்கள் அனைவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின்தேவை,அதன்சாதகமானகூறுகள், அத்தகைய வாழ்க்கை முறையானது அழகும் ஓழுங்கும் கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையெல்லாம் ரஷ்ய எடுத்துக்காட்டைக் கொண்டு அவர் நிறுவ முனைந்துள்ளதை சாதிய சமூகத்தின் வாழ்க்கைப் பண்பாட்டை பற்றிய விமர்சனமாகவும் அதற்கான மாற்று என்பது சாத்தியம்தான் என்பதை நிறுவிக் காட்டும் புரிதலாகவும் நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

நிர்ணயிக்கும் சாதி பற்று, உறவுகள், மணச் சடங்குகள், குறிப்பாக அகமணமுறை, பிள்ளைப்பேறு ஆகியவற்றுக்கும் சொத்து சேகரிப்பதற்கும் உற்பத்தி களத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்க வர்க்கவுணர்வுக்கும் இடையிலான உறவு, சாதி அமைப்பின் அனைத்து கூறுகளையும் இணைத்து அவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய கருத்துநிலைக்கும் அரசதிகாரத்துக்கும் இடையிலான உறவு, பொருளாதார மாற்றங்கள் என்பன சாதி ஆதிக்கவுணர்வையும் சாதியை துறக்க உதவும் சமூக மாற்றங்களையும் ஒருசேர உருவாக்கும் போக்கு ஆகியன பற்றிய சுயமரியதை இயக்கத்தினரின் புரிதலை நாம் அடுத்தடுத்தக் கட்டங்களுக்குகொண்டுசென்றிருக்கவேண்டும். ஆனால் தவறிவிட்டோம்.

மத மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி அழிப்பு, பெண் விடுதலை ஆகியன குறித்த பார்வையை வளர்த்த சுயமரியாதை மரபு சோசலிசத்துடன் நடத்திய உரையாடல்கள், குறிப்பாக ரஷ்ய முன்மாதிரியை முன்வைத்து தொடுத்த வாதங்கள், கேள்விகள் ஆகியவற்றை மீள்பரிசோதனை செய்து வர்க்கம்,சாதி,சொத்து, சமூக இழிவு, மேலாண்மை, மதம் பற்றிய நமது கெட்டித்ட்டி போன பார்வையை தளர்த்திக் கொண்டு இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பெரியாரின் நுட்பமான வாதங்களை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனாபூர்வமாகவும் வாசிக்கவும் விவாதிக்கவும் முன்வருவோம்.

நிமிர் ஜனவரி 2017 இதழ்

You may also like...