தமிழ்நாடு ‘பிராமண’ சங்கத்தில் ‘குடுமிபிடி’
‘பிராமணர்கள்’ தனியே சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கியவர் இராஜகோபாலாச்சாரி. அனைத்துக் கட்சி அமைப்புகள் அதிகார மய்யங்களில் ஊடுருவி, ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பது அவரது கருத்து. அண்மைக்காலமாக ‘பிராமணர்கள்’ சங்கம் அமைத்துக் கொண்டார்கள். நடந்து முடிந்த தேர்தலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள். ‘பிராமணர்’ சங்கம் என்பது ஜாதி சங்கம்அல்ல; அது ‘வர்ணாஸ்ரம’ சங்கம். அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்ற பல்வேறு ‘பிராமண’ வர்ணப் பிரிவினர் இதில் உறுப்பினராக முடியும். இப்போது ‘அவாள்’ சங்கத்துக்குள்ளே மோதல் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பழனியில் சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே மாநிலத் தலைவைராக செயல்பட்ட திருவொற்றியூர் நாராயணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது இந்தக் குழு. தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் ரமேஷ்குமார் என்பவர் இதை அறிவித்ததோடு பழனி ஹரிஹரமுத்து அய்யரை தலைவராக அறிவித்துள்ளார்.
அதேபோல் ஏற்கனவே செயலாளராக இருந்த சங்கரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நீக்கப்பட்டு, அப்பதவிகளுக்கு தன்னையும், கணேசன் என்பவரையும் அறிவித்திருக் கிறார். இந்த பொதுக் குழுவைக் கூட்டுவதே சட்ட விரோதம் என்று நாராயணன் அணி நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நீக்கப்பட்ட சங்கரன் என்பவர் இது சட்ட விரோதமான பொதுக் குழு என்றும், அறிக்கை விடுத்துள்ளார். சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த சங்கரன் தன்னிச்சையாக இப்படி அறிக்கைகளை விடுவதாகவும், ‘பிராமண’ சங்க உறுப்பினர்களை அவமதிக்கும் வாசகங்கள் அவரது அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகவும், சங்கரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் ரமேஷ் குமார் என்பவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
‘சூத்திரர்’களை இழிவுபடுத்துவதில் ‘பிராமணர்கள்’ ஒற்றுமையாக இருந்தாலும், அமைப்பாகத் திரண்டு சங்கம் வைக்கும்போது தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள். ‘பிரம்மம்’ என்ற உயரிய நிலையை அடைந்தவனே ‘பிராமணன்’ என்று சொல்லிக் கொள்ளும் இந்த ‘பூதேவர்கள்’ பதவி அதிகாரத்துக்கு ‘குடுமிப்பிடி’ சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பன ‘தினமலர்’ நாளேடு இந்த செய்தியை ‘பழனி கூட்டத்தில் விதி மீறவில்லை’ என்ற தலைப்பிட்டு வாசகர் கண்களுக்கு தெரியாததுபோல ‘பூசி மெழுகி’ செய்தி வெளியிட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 13062019 இதழ்