கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழக பெரியாரியல் பயிற்சிமுகாம், மே 23, 24 தேதிகளில் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது.

இதுவரை பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்காத புதிய இளைஞர் களுக்கான இந்த முகாமில் 20 பெண்கள் உள்பட 45 தோழர்கள் பங்கேற்றனர். காவலாண்டியூர் ஒன்றியக் கழகம் பயிற்சி முகாமை மாவட்டக் கழகம் சார்பில் முன்னின்று நடத்தியது.

மே 23 அன்று மாலை 9.30 மணியளவில் முகாமை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார்.

முதல் வகுப்பாக ‘பெரியார் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுத்தார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியளவில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ‘புராணம் – மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில்  பேசினார். பிற்பகல் 4 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடர் இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.

தொடர்ந்து மடத்துக்குளம் மோகன் , ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இரண்டாம் நாள் மே 24 அன்று காலை முதல் வகுப்பை விடுதலை இராசேந்திரன், ‘மதவாதம் – ஆர்.எஸ்.எஸ்.’ என்ற தலைப்பிலும், அம்பேத்கர் குறித்து ஆசிரியர் சிவகாமியும் வகுப்பு எடுத்தனர்.  மதிய உணவுக்குப் பிறகு ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்ற தலைப்பில் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரனும், ‘திராவிட இயக்கமும் ஈழமும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் மணியும் வகுப்பு எடுத்தனர்.

பயிற்சியாளர்களுக்கு ‘வினா-விடை’ புதிர் போட்டிகளைத் தோழர்கள் குமரேசன், பரத் நடத்தினர். பயிற்சியாளர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கமளித்தனர். பயிற்சியாளர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காவலாண்டியூர் ஈசுவரன், காவை இளவரசன், பரத், விஜய்குமார் முன்னின்று ஏற்பாடுகளை செய்தனர்.

தோழர்கள் சி. சுப்ரமணியம், பரத், விஜய்குமார், கழக முயற்சியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சிறீதர்-தேவப்பிரியா இணையர், உணவுக்கான ஒவ்வொரு வேளை செலவுகளையும் ஏற்றனர்.

 

மண்டபத்தில் பணியாற்றிய பெண் கழகத்தில் சேர விருப்பம்

இரண்டு நாள் பயிற்சிகளையும் நேரில் கவனித்து, அதில் ஈர்க்கப்பட்டு மண்டபத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட சித்ரா என்ற பெண் தோழர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்தார். கழகத் தலைவர் அவருக்கு ‘பெரியார் வரலாற்று’ நூலை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 30052019 இதழ்

You may also like...