ஆழ் மனதுடன் ஓர் உரையாடல்- பழநிவேல் கோமதிநாயகம்
‘மஞ்சள்’ நாடகம் மற்றும் அதனுடன் இணைந்த பிரச்சாரத்தை அறிந்த சில நாட்களில் பெசவடா வில்சன் பற்றியும், கையால் மலம் அள்ளுதல் பற்றியும் விரிவாகத் தேடி அறிய ஆரம்பித்தேன். இதன் ஒரு கட்டமாக பாஷா சிங் இந்தியில் எழுதி ரீனுதல்வார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘unseen’ புத்தகத்தை வந்தடைந்தேன்.
பாஷா சிங் ஓர் ஊடகவியலாளர். சமூக செயற்பாட்டாளர்.. ஓர் ஊடகவியலாளரின் முதன்மைப் பணி என்பது தரவுகளின் அடிப் படையில் சார்பற்ற தகவல்களை அளிப்பது. இந்தப் புத்தகத்தில் முக்கியத் தரவுகளையும் தகவல்களையும் பாஷா சிங் கட்டமைத்துள்ள விதமே இந்த நூலை ஒரு முக்கிய ஆவணமாக என்னை கருத வைக்கிறது.
இங்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. பலரால் சொல்லப்படுகிறது. மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது. கற்பனையிலும் நான் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு வாழ்க்கை அவலத்தை பற்றி லக்ஷ்மானியஹாரியும், பல்லவியும், இந்திராவும், ரபீக்காவும், நாராயணம்மாவும் மற்றும் இன்னும் பல பெண்களும் என்னிடம் என்ஆழ் மனதிடம் மிக அந்தரங்கமாக பேசுகிறார்கள். நிலைகுலைந்து போகிறேன். மனம் பிறழ்ந்து போகிறேன். வரலாற்றின் முன் குற்றவாளியாக நிற்கிறேன். பெயரற்றவர்கள், அடையாளமற்றவர்கள், தவிர்க்கப்பட்டவர்கள் அனைவரும் என் முன் ஆழிப்பேரலையென ஓங்கி நிற்கிறார்கள். மலம் அள்ளிய அவர்களது கைகளை இறுகப்பற்றி கண்ணீர் மல்க நிற்கின்றேன்.
இந்த புத்தகத்தின் களம் இந்தியாவில் கையால் மலம் அள்ளுபவர்களைப் பற்றியதாகஇருந்தாலும், எனது வாசிப்பனுபவமானது இதனை மேலும் விரிவாக்கி இது அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே எனக்குள் ஒலிக்கிறது. யாரின் இருப்பை நான் பார்க்கத் தவறினேனோ யாரின் இருப்பை நான் மறுத்தேனோ அவர்கள் அனை வரின் ஒட்டுமொத்த குரலாகவே நான் இதைக் கேட்கிறேன். இத்தகையதொரு மாபெரும் மன விரிவாக்கத்தை இப்புத்தகம் எனக்களித்தது. ஏன் இவர்களின் குரலை இதுவரை நான் கேட்க மறுக்கிறேன் , ஏன் இவர்களின் இருப்பை பார்த்தும் பார்க்காத மாதிரி புறக்கணிக்கின்றேன் என்பதேஅனைவரும்தமக்குள்கேட்கவேண்டிய முதன்மையான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலின் தேடலில் தான் அமைகிறது இந்த இழிவின் தீர்விற்கான பயணத்தின் முதல் படி. இந்தத் தேடல் இல்லாதவரைக்கும் இது ‘அவர்களின்’ பிரச்சினை. இது ‘அவர்களின்’ இழிவு. இது ‘அவர்களின்’ துன்பம். இந்தத் தேடலை நோக்கிய பயணத்தை தொடங்கும்போது தான் இது ‘நம்’ இழிவாகிறது. இது ‘நம்’ துன்பமாகிறது . இது ‘நம்’ துயரமாகிறது. இந்த உருமாறுதலை பாஷா சிங்கின் இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது.
ஆந்திரப்பிரதேசம் அனந்தபூர் நாராயணம் மாவின் கதை இந்த சிக்கல் பற்றியும் இந்த சிக்கலுக்கான தீர்வுக்கான திசை பற்றியும் ஓர் ஒட்டு மொத்த சித்திரத்தை தரக்கூடியதாக உள்ளது.
600 உலர் கழிவறை. பெயரற்ற ஒரு ‘தோட்டிம்மா’ முப்பது வருடங்களாக தினமும் அதிகாலை முதல் மதியம் வரைகையால் மலம் அள்ளி அந்த கழிப்பறைகளை சுத்தம் செய்துக்கொண்டே இருந்தார். இது விதி இல்லை அநீதி என்றறியாது இருந்தார். பெசவடா வில்சனின் அறிமுகமும் அவர் மற்றும் பிற சமூக ஆர்வலர்களின் தொடர் முயற்சியால் ‘தோட்டிம்மா’ மீண்டும் ‘நாராயணம்மா’ வை கண்டுக்கொள்கிறார். ஓர் சுயமரியாதை கொண்ட மனிதராக தலைநிமிர்ந்து நடக்கிறார். எந்த சாதியடையாளத்தால் தனது சுயத்தை இழந்து அவமதிக்கப்பட்டாரோ அதே அடையாளத்தை தனது ஆயதமாக நாராயணம்மா பயன்படுத்திய தருணத்தை தலித் அரசியலின் பெரும் வீச்சாக மட்டும் நான் பார்க்கவில்லை. அது இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகவும் நான் பார்க்கிறேன். அரசியலதிகாரத்தின் ஒரு பகுதியாக தங்களை ஆக்கிக்கொள்வதின் மூலமாகவே தமது அடையாளம் இருப்புகொள்கிறது. தங்கள் குரல் கேட்கப்படுகிறது என்பதை நாராயணம்மா அறிந்த கணமே அவரின் விடுதலையைசாத்தியமாக்கியது.’எனதுகதையை கேட்கிறீர்களா?’ என்ற நாராயணம்மாவின் கூற்று எத்தனை வலிமையானது! எந்த பிற சாதி பெண்களின் உலர் கழிவறையிலுருந்து கையால் மலம் அள்ளினாரோ அந்தப் பெண்களின் ஆழ் மனதோடு உரையாடலைத் தொடங்கிய வரியல்லவா அது. தனது எதிர்தரப்பின் ஆழ் மனதோடு உரையாடுதல் என்பது தனக்கான விடுதலையின் முதல் படி மட்டுமல்ல அந்த எதிர்தரப்பினரின் விடுதலைக்கான முதல் படியும் தான் என்பதை நாராயணம்மா அறிந்திருப்பாராஎன்று தெரியவில்லை. ஆனால் சட்டப்போராட்டங்களுக்கு இணையாக எதிர் தரப்பினரோடு தொடர் உரையாடுதல் மட்டுமே “உண்மையான சாதிஒழிப்பு“ என்ற உன்னத குறிக்கோளுக்கு அருகில் நம்மை கொண்டு செல்ல வைக்கும். இல்லையெனில் சட்டம் மட்டும் இருக்கும். மனதளவில் நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்திலேயே நாம் வாழ்ந்துக்கொண்டிருப்போம். சாதி அழியவே அழியாது.
600 உலர் கழிவறை இருந்த இடத்தில இன்று 600 பேர் படிக்கும் பள்ளிக்கூடம் இருக்கிறது என்ற செய்தி என்னுள் ஏற்படுத்திய மனவெழுச்சியை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. இந்த வரலாற்றையல்லவா நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரவேண்டும். இருளிருந்து வெளிச்சத்திற்கு, இழிவுலிருந்து மேன்மைக்கு நம் முன் இருக்கும் ஆயுதம் கல்வி மட்டுமே என்பதை நாராயணம்மா போன்ற பல லட்சம் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். கட்டாயம் அது ஒரு நாள் நனவாகும், அது விரைவில் ஆகவேண்டும் என்றால் அதற்கு பிற சாதி மக்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும்.
நாராயணம்மாவின் கதையை சொல்வதின் மூலம் நம் ஆழ் மனப் பதிவுகளை சீண்டுகிறார் பாஷாசிங். அந்த சீண்டலே என்னை ஓர் அகப் பயணத்திற்கு தூண்டியது
“தமக்கு சுயசாதி அடையாளம் இல்லை, சாதி மேட்டிமை நோக்கு தமக்கில்லை“ என்போரின் ஆழ் மனதோடு உரையாடி அவர்களால் மிகத் தந்திரமாக கட்டமைக்கப்பட்ட சுய பிம்பத்தினை அசைத்துப்பார்க்கும் ஓர் ஆவணம் இந்த நூல். இன்னும் சில பல ஆண்டுகளில் இந்த இழிவு இல்லாமல் போகலாம். ஆனால் அன்றும் வரலாற்றின் முன் நானும் என் முன்னோரும் என் சந்ததியினரும் குற்றவாளிகளாகத் தான் நிற்கமுடியும். இந்த இழிவிற்கு இவர்தான் காரணம் என்று பிறரை நோக்கி கைக்காட்டாமல் நானே காரணம் என்று முழுமுதல் பொறுப்பேற்பதே எனது குறைந்தபட்ச நேர்மையாக இருக்க முடியும். சாதிய படிநிலைகளின் ஏற்றத்தாழ்விற்கு ஒரு கருத்தியலை பார்ப்பனர்கள் தந்திருக்கலாம். ஆனால் இந்த கருத்தியலின் லாபத்தை இடைநிலை சாதியினர் உட்பட அனைத்து ஆதிக்க சாதியினரும் அனுபவித்திருக்கிறார்கள், அனுபவிக்கிறார்கள் என்பதே உண்மை. கையால் மலம் அள்ளுதல் என்ற இழிவு இந்த இருபத்தியன்றாம் நூற்றாண்டிலும் இருப்பதற்கு அனைவருமே பொறுப்பாளிகள்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இங்கு ஒரு சட்டப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. ஆனால் இது ஒடுக்கப்பட்டவர் களிலும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் மட்டுமே பெரும் பான்மையாக இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனாலேயே இது ‘அவர்களின்’ வலிமையற்ற குரலாகவே இருக்கிறது. அவர்கள் பார்க்க தவிர்க்கப்பட்டவர்கள் மட்டுமல்ல கேட்கவும் தவிர்க்கப்பட்டவர்கள். not only unseen but also unheard’. ஒட்டுமொத்த தலித்துகளின் பிரச் சனையாக இது தலித்துகளாலேயே பார்க்க விரும்பப்படுவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணரவேண்டும். தலித் என்ற குடையின் கீழ் வரும் ஒவ்வொரு சாதியும் தங்களது சொந்த சாதியடையாளத்தை விலக்கி தலித் என்ற பொது அடையாளத்தை ஏற்க ஏன் முன்வரவில்லை என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். சாதிய அடுக்குநிலை தான் ஒவ்வொருவரின் இருப்பையும் நிலை நிறுத்துகிறது. எனக்கு கீழ் ஒருவர் இருக்கும்போது தான் நான் இந்திய சாதிய சமூக அமைப்பில் அடையாளம் கொண்டவனாக இருக்கின்றேன். இல்லையெனில் நானும் பார்க்கப்படாதவன். கேட்கப்படாதவன். தவிர்க்கப்பட்டவன். ‘uஸீsமீமீஸீ ணீஸீபீ uஸீலீமீணீக்ஷீபீ’. இந்த சாதியப்படிநிலை என்பது நிலப் பிரபுத்துவ கால கூறு. இதற்கு இன்றுஎந்தவொரு தேவையும் இல்லைமதிப்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது அழிய வேண்டிய எச்சம். ஆனால் இதற்கு ஒவ்வொரு மனிதனும் ஓர் அகப்பயணம் மேற்கொள்ளவேண்டும். தலித் அல்லாத பிற சாதியினர் மட்டுமல்ல தலித்துகளும்தான்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 25%இருக்கும் தலித் மக்கள் ‘தலித்’ என்ற ஒற்றை அடை யாளத்தின் கீழ் ஒன்றிணைந்தால் மட்டுமே மாபெரும் அரசியல் சக்தியாக உருவாகமுடியும். இன்றுவரை அது சாத்தியப்படவில்லை. ஜனநாயகத்தில் இந்த ஒருங்கிணைப்பு மிக முக்கியம். ஜனநாயகத்தின் சிறப்பும் குறையும் அது தான். எத்தனை நியாயமான குரலாக இருந்தாலும் அது பெரும்பான்மையான மக்களின் குரலாகஇல்லாதவரைக்கும்அதுகேட்கப்படாத குரலே. கையால் மலம் அள்ளுபவர்களின் இந்த நியாயமான போராட்டத்தை பெரும்பான்மை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சேர்ப்பது மிக அவசியமாகிறது. அதுவும் ஒரு போராட்ட அணுகுமுறையே. பாஷா சிங்கின் இந்த நூல் அதற்கான ஒரு முயற்சிதான்.
இந்த நூலின் இரண்டாம் பகுதியான ‘அதிகாரத்தின்வா யிலைத் தட்டுதல்’என்றபகுதி இந்திய ஜனநாயகத்தில் நீதிமன்றமும், அரசியலும், அரசாங்க நிர்வாகமும் நடைமுறையில் எப்படி இயங்குகிறது என்பதற்கு ஒரு கையேடாகவே இருக்கிறது. இது ஒரு சிக்கலான வலை. இதன் அடிப்படைகளை புரிந்துக் கொண்டா லொழிய இங்கு சட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கும் என்பதை பாஷா சிங் இந்த ‘மலத்தை கையால் அள்ளுதல்’ தடை சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கலை விவரித்திருக்கும் விதத்திலிருந்து நன்கு உணரமுடிகிறது. சோர்வைத் தரக்கூடிய ஒரு நீண்ட பயணம் இது.
ஆனால் அதே நேரம் இது நாராயணம் மாக்களின் இருப்பை, சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.. ஆதலால் சோர்வென்பதற்கு இடமே இல்லை. இந்த புத்தகத்தின்நோக்கம்’கையால்மலம்அள்ளுதல்’ என்ற இழிவை பற்றிய சிந்தனையைப் பரவலாக பொதுவெளிக்குள் கொண்டு வருவது என்றளவில் கட்டாயம் வெற்றிபெற்றிருக்கிறது.
மேலும் படிப்பவர்களின் மனசாட்சியோடு உரையாடி அவர்களை இந்த இழி நிலைக்கு பொறுப்பாக்கி வெட்கி தலைகுனிய வைக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தில் நான் எதிர்ப்பார்த்து காணக் கிடைக்காதது ‘கையால் மலம் அள்ளுதல்’ என்ற இழிவின் வரலாறு. கால வரிசைப்படுத்தப்பட்ட கழிப்பறையின் வரலாறு இந்த இழிவைப் பற்றிய புரிதலுக்கு ஒரு முக்கிய அடிப்படையாக இருந்திருக்கும்.
எப்படி, எந்த காலகட்டத்தில் இது சில குறிப்பிட்ட சாதிகளின் வாழ்வாதார தொழிலாக மாறியது, அவர்களின் அதற்கு முந்திய நிலை என்ன என்ற வரலாற்று செய்திகள் இன்னும் ஒரு கூரிய சித்திரத்தை தந்திருக்கும். எந்த ஒரு தற்கால பிரச்சினையையும் அதன் வரலாற்று பின் புலத்தில் வைத்து பார்க்கவேண்டும்.
அதுவே அந்த பிரச்சசினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக அமையும். மஞ்சளும் மழையும் கவித்துவமானஉணர்வுகளைமட்டுமல்லகுமட்ட லையும் வெறுப்பையும் கூடத் தரலாம் என்று உணர வைத்த எண்ணற்ற நாராயணம்மாக்களின் கைப்பற்றி கண்ணீர் மல்கி நிற்கின்றேன்.
நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்