அறிவியலுக்கு வாருங்கள்! – பெ. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு
மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல்.
இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.!
– செயின் எக்ஸ்கியூபெரி
மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்..
குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் !
சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம்.
பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் …
பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்!
தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்…
முறைகெட்ட முறைமாமன்களுக்கும்…
உறவு விட்டுப் போகுமோயென…
விறகுபோல் அள்ளித்தந்து,
சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் !
சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை!
மணம் எது?
மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே!
நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே !
கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே!
அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.!
கலப்பு விஞ்ஞான விதி.
கலப்பு இயற்கை நியதி.
கலப்பே வளர்ச்சியின் தோற்றுவாய்.
கசடுகளே! என்று உணர்வீர் இதை?
திருகி எரிந்த கழுத்துகளும்..குடல் உறுவப்பட்ட வயிறுகளும்…
வெட்டப்பட்ட உடலின் உறுப்புகளும்…
சாம்பலாக்கப்பட்ட உயிர்களும் உச்சரிக்கும் ஒரே வார்த்தை எது தெரியுமா?
ஜாதி ஒழிக! மதங்கள் அழிக! என்பதைத்தான்!
நீ வெட்ட… வெட்ட அக்குரலின் சப்தம் ஆயிரமாயிரமாய் விருத்தியடைந்து…
உன் ஜாதியையும், மதத்தையும், உன்னையும் நிச்சயம் பொசுக்கும் ஓர் நாள்!
– பெ. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு
நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்