சாதி, மதம் அற்றவர்” சான்றிதழ்: சரியா, தவறா?

சாதி, மதம் அற்றவர்” சான்றிதழ்: சரியா, தவறா?
தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ரஜினிகாந்த் நேற்று முன்தினம் முகநூல் பதிவுகளில் அனைத்துத் தரப்பினராலும் பாரட்டப்பட்டார்.

“சாதி, மதம் அற்றவர்” என வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கிய திருப்பத்தூர் வழக்கறிஞர் ம.ஆ. சிநேகாவுக்கு நேற்றைய பதிவுகளில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

“சாதி, மதம் அற்றவர்” என்ற சான்றிதழ் பெறுவது பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

.

தீண்டாமை வேறு, சாதி வேறு

இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைச் சந்தித்துப் பேசினோம். இது குறித்து அவருடைய கருத்துக்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்:

தீண்டாமை என்பது வேறு, சாதி என்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசியலமைப்பில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற விதிகளைச் சேர்த்து, அதைச் சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தும் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஹெச்.வி.முகர்ஜி அவர்களும் கொஞ்சம் வேறுபடுகிறார்கள்.

தீண்டாமை என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இருவரும் உடன்படுகிறார்கள். அதே நேரத்தில், சாதி ஒழிப்பு என்று வந்தால், அந்தச் சாதியைக் காரணம் காட்டியே நாட்டில் பல நூறு ஆண்டுகளாகப் பின்தங்கிய நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் வைக்கப்பட்டிருக்கும் பல கோடி மக்களின் மேம்பாடு தடுக்கப்படும் என்று அம்பேத்கர் கருதுகிறார்.

பள்ளியில் சேர்க்கும்போது குழந்தையின் சாதி என்ன என்று கேட்கிறார்கள், நான் எதைக் குறிப்பிடட்டும் என்று பல தோழர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள். அவர்களிடம் சாதியை அவசியம் குறிப்பிடுங்கள் என்றுதான் சொல்வேன். என்னைக் கேட்டால் சாதிச் சான்றிதழ் வாங்கி வைப்பதிலும் அதன் மூலம் இழந்த உரிமைகளைப் பெறுவதிலும் தவறில்லை.

ஆனால், சாதியக் கண்ணோட்டத்தில் ஒருவரைப் பார்ப்பதும், அவர்களிடம் பழகுவதும், அவர்களை அதன் அடிப்படையில் நடத்துவதும்தான் தவறு. எனவே அதைக் கண்டிக்கிறோம்.

இட ஒதுக்கீட்டில் வேலைக்குப் போகத் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் அதறகான சான்றிதழை வைக்காமல் விண்ணப்பம் செய்தாலே போதும். அந்த விண்ணப்பம் நேராகப் பொதுப் பிரிவுக்குச் சென்றுவிடும். இதற்காக நான் சாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை. “சாதி, மதம் அற்றவர்” என்ற சான்றிதழில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பாண்டிச்சேரியில் உள்ள நண்பர் ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். என்னுடைய சாதிய ஒதுக்கீட்டில் நான் கல்வியும் கற்றுவிட்டேன். வேலையும் வாங்கிவிட்டேன். இனிமேல் என்னுடைய குடும்பத்துக்கு மீண்டும் இட ஒதுக்கீடு மூலமாகச் சலுகைகள் பெறுவது என்பது என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமையைத் தட்டிப் பறிப்பது போன்றதாகும் எனக் கருதினார். தன்னுடைய மகன், மகளுக்கு வேலைக்காக விண்ணப்பம் செய்யும்போது அவனுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை கொடுக்க வேண்டாம், பொது ஒதுக்கீட்டில்தான் அவனுடைய மனுவை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போதைய நிலையில் இதுதான் சரியான முறை என நினைக்கிறேன்.

– மின்னம்பலம் செய்தியாளர்

You may also like...