மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

“நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?”புத்தகத்தை எழுதிய மாரிதாஸ், சமீபத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட் டிருக்கிறார். வழக்கம்போல ஒரு போர்டில் கசமுசாவென ஏகப்பட்ட வார்த்தைகளை எழுதிவைத்துக்கொண்டு, மாரிதாஸ் உளறும் அந்த வீடியோ ஒரு பொய்களின் குவியல். எட்டு நிமிடங்களுக்கு ஓடும் அந்த வீடியோவில் அவர் எப்படி தகவல்களைத் திரித்துச் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

  1. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 36, 488.

பதில்: தவறு. 2018-19ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 38,646. அந்த நபர் சொல்வதுபோல 36 ஆயிரத்துச் சொச்சமல்ல. ஒரு சிறிய தகவலைக்கூட சரிபார்க்க முடியாமல், இவ்வளவு பெரிய பேச்சு.

  1. தமிழகக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் அளவு வருடத்திற்கு ஏறக்குறைய 55 கோடி ரூபாய்.

பதில்: பொய். தமிழக கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாய், ஆயிரக்கணக்கான கோடிகள். இந்த நபர் சொல்வதைப்போல 55 கோடிகள் அல்ல. இந்தத் தகவலை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்ற ஆதாரத்தைத் தரவேண்டும்.

  1. மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் செலவு போக 50 ரூபாய்.

பதில்: இருப்பதிலேயே மிகக் கேவலமான பொய் இதுதான். தமிழ்நாட்டின் மிகப் பெரிய வருவாய் கிடைக்கும் கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் ஆண்டு வருவாய் சுமார் 49 கோடி ரூபாய். உண்டியலில் இருந்து மட்டும் ஒரு மாதத்திற்கு 80 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இந்தத் கோவிலில் சுமார் 400 ஊழியர்கள் – அர்ச்சகர்கள் – உட்பட பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கான சம்பளமாக மாதத்திற்கு 8.75 லட்ச ரூபாய் கோவில் வருவாயிலிருந்து கொடுக்கப்படுகிறது.

இந்த 49 கோடி ரூபாயில், ஊழியர்கள் சம்பளம் போக, மின்சார கட்டணம் மட்டும் 1.5 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. பராமரிப்புச் செலவு, வழக்கறிஞர் கட்டணம், பிற செலவுகளுக்கு 11 கோடி ரூபாய் செலவாகிறது.

இது தவிர, கோவிலின் சார்பில் யானைகள், ஓட்டகங்கள் வளர்ப்பது போன்றவையும் இருக்கின்றன.  மேலும் 2 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வளவும் செலவழித்த பிறகு வருடத்திற்கு 25 கோடி ரூபாய் மிஞ்சுகிறது. அதாவது மாதத்திற்கு 2 கோடி ரூபாய். இந்தத் தொகை மீனாட்சியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.  கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மீனாட்சியின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.

2010ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மன் கோவிலின் வருடாந்திர வருவாய் 11 கோடி ரூபாய். இப்போது ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகு கோவிலின் வருவாய் 49 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இப்போது மீனாட்சியின் பெயரில் வங்கியில் வைக்கப்பட் டிருக்கும் வைப்புத் தொகை மட்டும் 176 கோடி ரூபாய் இருக்கிறது. மேலே நான் சொன்ன தகவல்களை யார் வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று சரிபார்த்துக்கொள்ள முடியும்.

  1. 1967இல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப் பட்டதாக ஒரு பச்சைப் பொய்யைச் சொல்கிறார் மாரிதாஸ். 67இல் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்கள் எப்படி மேம்பட்டன என்பதற்கு மீனாட்சி அம்மன் கோவில் ஒரு உதாரணம். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறேன்.

1963இல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அந்த கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு போதுமான நிதி கோவிலிடம் இல்லை. இதனால், நிதியுதவி கோரி பல்வேறு கோவில்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பல கோவில்களும் தனி மனிதர்களும் நிதியுதவி செய்தனர். இது ஏதோ மாரிதாஸ் போல போகிறபோக்கில் சொல்லப் படுகிற செய்தியல்ல. அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இப்போதும் கோவிலின் பொற்றாமரைக் குளத்திற்கு அருகில் இருக்கின்றன. எந்தெந்தக் கோவிலிருந்து, யார் யாரிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டன என்ற தகவல் அங்கே கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.

1967இல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி வந்த பிறகு, கோவில்கள் பராமரிக்கப் படுவது தொடர்ந்து மேம்பட்டது என்பதைத் தான் தற்போது வைப்பு நிதியில் உள்ள 176 கோடி ரூபாய் பணம் காட்டுகிறது. அது மட்டுமல்ல கடந்த நான்கு ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு 150 கோடி ரூபாயைத் தொடும்.

  1. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் 16 வகை முத்து வைர நகைகளைக் கொடுத்தார். அதன் மதிப்பு ஆயிரம் கோடிகளுக்கு மேலாம். அதை திராவிடக் கட்சிகள் திருடிவிட்டன என்கிறார் மாரிதாஸ்.

பதில்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மத்திய தொல்பொருள் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஒரு ஆலயம். இந்தக் கோவில் 1959ல்தான் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் வந்தது. இருந்தாலும் ஏஎஸ்ஐயின் கண்காணிப்பும் இப்போதும் தொடர்கிறது. இந்த நிலையில், 10ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட நகைகள் பத்திரமாக வைக்கப்பட்டு, 1967 தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கொள்ளையடிக்கப்பட்டன என்று பொய் சொல்வதற்கு உண்மையிலேயே ஒரு துணிச்சல் வேண்டும். என்ன மாதிரி நகை,  எத்தனை கிலோ, இப்படி கொடுக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம் என யாரும் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சல்தான் அது.

  1. மதுரை, அழகர் கோவில், திருவில்லிபுத்தூர் கோவில்களுக்கு கிருஷ்ணதேவராயர் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு நகைகளைக் கொடுத்தார். அவற்றைக் காணோம். திருவொற்றியூர் கோவிலில் தங்கக் கதவுகள் இருந்தன. அவற்றைக் காணவில்லை.

பதில்: எல்லாம் போகிறபோக்கில் அடித்து விடுவது. கிருஷ்ண தேவராயர் நகைகளைக் கொடுத்தாரா, அவை இந்து அறநிலையத் துறை யால் கையகப்படுத்தப்பட்டனவா என்றெல்லாம் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியம். திருவொற்றியூரில் இரண்டு பெரிய கோவில்கள் இருக்கின்றன. அதில் எந்தக் கோவிலில் தங்கக் கதவு, எந்தக் காலத்தில் இருந்தது? திருவொற்றி யூரில் இரண்டு பெரிய கோவில்கள் இருக்கின்றன என்பதாவது இந்த நபருக்குத் தெரியுமா?

  1. ஆஸ்திரேலியப் பிரதமர், இந்தியப் பிரதமருக்கு அர்த்த நாரீஸ்வரர் சிலையைப் பரிசளித்தார். அவை நம் கோவில்களிலிருந்து திருடப் பட்டவை.

பதில்: ஏதோ கலைஞர் சிலையைத் திருடி ஆஸ்திரேலியாவில் விற்றதைப் போலவும் நரேந்திர மோதியே அந்தச் சிலைகளை மீட்டுக்கொண்டு வந்ததைப்போல பேசுகிறார் மாரிதாஸ். 2014 செப்டம்பரில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா வுக்குப் போனபோது, அந்நாட்டுப் பிரதமர் இரண்டு சிலைகளை இந்தியப் பிரதமருக்குப் பரிசளித்தார். ஒன்று நடராஜர் சிலை. மற்றொன்று அர்த்தநாரீஸ்வரர் சிலை. நடராஜர் சிலை அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருப்புரந்தன் ஆலயத்திலிருந்து 2006ல் திருடப்பட்டது. அர்த்த நாரீஸ்வரர் சிலை, விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து திருடப்பட்டது.

இந்தச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றன என்று கண்டறிந்தது, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு. அப்போது அதன் தலைவர் ஏடிஜிபி பிரதீப் வி. ஃபிலிப்.

இந்தச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருக் கின்றன என்று தெரிந்தவுடன், அதை மீட்பதற் கான முயற்சிகளை 2014ஆம் ஆண்டின் துவக்கத்தி லிருந்து மேற்கொண்டது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. அதன் உச்ச கட்டமாகத்தான் சிலைகள் திருப்பியளிக்கப் பட்டன. இதற்கான முயற்சிகளை மேற் கொண்டவர்கள் தமிழக அரசும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும். ஏதோ தானும் மோடியும் போய் மீட்டுவந்ததைப் போல பில்டப் கொடுக்கிறார் மாரிதாஸ்.

நாமெல்லாம் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமாம். முதலில் அவர் பொய் இல்லாமல் பேசக் கற்றுக் கொள்ளட்டும்.

– இணையத்திலிருந்து

பெரியார் முழக்கம் 03012019 இதழ்

You may also like...