பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்
உச்சநீதிமன்றப் பட்டியல் இனப் பிரி வினரை தீர்மானிப்பதில் முதன்முறையாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி ஆபத்தான தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாட்டுத் தலை வர்கள் இதை கவனத்தில் கொள்ள வில்லை.
பட்டியல் இனப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான பதவிகளில் பதவி உயர்வு நிலையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு – சமூக நீதிக்கு பெரும் பின்னடைவாகும். செப். 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு – பட்டியல் இனப் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது உண்மைதான்; ஆனால், ‘கிரிமிலேயர்’ எனும் வடிகட்டும் முறையை அதில் புகுத்தி, தீர்ப்பின் நோக்கத்தையே கெடுத்துவிட்டது. அது மட்டுமின்றி, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்குவதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் நாட்டில் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தலைவர்கள்கூட இத்தீர்ப்பை சரியான புரிதலின்றி வரவேற்றுள்ளார்கள். இதில் அடங் கியுள்ள ஆபத்துகளை அவர்கள் உணரவில்லை.
பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு மட்டுமே மத்திய அரசு ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பைப் பின்பற்றி வருகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பவர்கள் 1970ஆம் ஆண்டில் தொடங்கி இந்த ‘கிரிமிலேயர்’ முறையை வற்புறுத்தி வருகிறார்கள். 1992ஆம் ஆண்டு – மண்டல் பரிந்துரைக்கு எதிரான பிரபலமான ‘இந்திரா சகானி – எதிர் இந்திய ஒன்றிய’ வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, பிற்படுத்தப்பட்டோரை வரையறுக்க
11 காரணிகளின் அடிப்படையை வகுத்து கிரிமிலேயரைப் புகுத்தியது. ஆனால் பட்டியல் மற்றும் பழங்குடி இனப் பிரிவுக்கு ‘கிரிமிலேயர்’ பொருந்தாது என்றும் கூறியது. அதே நேரத்தில் இந்தப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கவும் முடியாது என்றும் தீர்ப்பளித்தது. இப்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முதன்முதலாக ‘கிரிமிலேயரை’ உச்சநீதிமன்றம் புகுத்தியுள்ளது. அது மட்டுமன்றி மாநிலங்களுக்கு இதில் முடிவு எடுக்கும் உரிமைகளை வழங்கியிருப்பதால் இடஒதுக்கீடு கொள்கையில் ஆர்வம் இல்லாத ஆட்சிகள், கொள்கைகளை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்தபோது பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் பட்டியல் இனப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிறகு சமாஜ்வாடி கட்சிஆட்சிக்கு வந்தவுடன் அலகாபாத் உயர்நீதிமன்றம் மாயாவதி பிறப்பித்த உத்தரவை நீக்கம் செய்த நிலையில், பதவி உயர்வு வழங்கப்பட்ட பட்டியல் இனப் பிரிவினரின் பதவி உயர்வைப் பறித்து உத்தரவிட்டது. சட்டத்தைத் திருத்தி பதவி உயர்வு வழங்கத் தயாராக இல்லை. கடந்த ஜூலை 23ஆம் தேதி, பீகார் மாநில அரசு பட்டியல் இனப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால் கருநாடக அரசு 4000 பேருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வை வழங்காமல் இழுத்தடித்துக் கொண் டிருக்கிறது.
இப்படி நிலைமை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. மாநில ஆட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும்போது அவர்கள் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதற்கான தரவுகளை சேகரிக்க வேண்டும். அத்துடன் போதுமான பிரதிநிதித்துவம் வேலை வாய்ப்பில் கிடைக்கப் பெறவில்லை என்பதை யும் உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளையும் இப்போது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், உச்சநீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணைய உறுப்பினர்கள், குரூப் ஏ, பி மற்றும் முதல்நிலை, இரண்டாம் நிலை அதிகாரிகள், டாக்டர்கள், பல் டாக்டர்கள், பொறியாளர்கள், சார்ட்டட் அக்கவுண்டன்ட் எனும் தணிக்கை ஆய்வாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஆலோசகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத் தாளர்கள், விளையாட்டுத் துறையினர் ஆகி யோர் குடும்பப் பிள்ளைகள், பட்டியல் இனப் பிரிவுக்குள் வர மாட்டார்கள் என்றும், எனவே பதவி உயர்வுக்கான தகுதியை இழப்பார்கள் என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
இந்தக் காரணிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும்போது ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. “உச்சநீதிமன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ, தலித் நீதிபதிகள் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஜி. பால கிருஷ்ணன் என்ற ஒரு தலித் மட்டுமே இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்ற பிறகு, ஒரு தலித் நீதிபதிகூட உச்சநீதி மன்றத்துக்கு வர முடியவில்லை. 24 உயர்நீதி மன்றங்களில் ஒரு தலித்கூட தலைமை நீதிபதியாக இல்லை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பட்டியல் இனப் பிரிவினர் 25 சதவீதம்; ஆனாலும் தேசிய அளவில் இந்தப் பிரிவைச் சார்ந்தவர்களில் எத்தனைபேர் அய்.ஏ.எஸ்.களாக இருக்கின்றனர்; எத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் அய்.ஏ.எஸ்.களாக இருக்கிறார்கள்?” என்று கேட்கிறார் தலித் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்நாதன்.
தலித் இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல், ஏராளமான பதவிகள் காலியாக கிடக்கும்போது ‘கிரிமிலேயரை’ப் புகுத்த வேண்டிய அவசியம் என்ன? தலித் மக்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேல் நோக்கி வளருவதைத் தடைப்படுத்துவதே கிரிமிலேயர் என்றும் அவர் விளக்குகிறார். பொருளாதார அளவுகோல் மாறுபடக் கூடியது; ஆனால் ‘ஜாதி’ நிலை யானது; 1993ஆம் ஆண்டு – ஆண்டு வருமானம் ஒரு இலட்சத்துக்கு மேலே உள்ளவர்கள். இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற முடியாது என்று நிர்ணயிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் இது 8 இலட்சமாக உயர்த்தப்பட்டது. வர்க்கப் பாகுபாடுகள் வேறு; ஜாதியப் பாகுபாடுகள் வேறு. வர்க்கப் பின்னணி மாறினாலும் ஜாதிய அடையாளம் கட்டமைத்த சமூகத்தின் நிலை மாறாமல் இருக்கிறது. ஜாதி பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. உண்மையில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தலித் மக்கள் மீதுதான் ஜாதிய ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது. ஆணவக் கொலை, உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை, நில உரிமைக்கான போராட்டம், ஜாதி அடிமைத் தொழிலை செய்ய மறுப்பதால் நடக்கும் தாக்குதல் – இப்படி பொருளாதாரத்தில் உயரத் துடிக்கும் தலித் மக்கள் மீதே கூடுதல் தாக்குதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பொருளாதார மேம்பாடு இவர்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்போது கிரிமிலேயர் பேச முடியுமா?
மற்றொரு முக்கிய கருத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். இடஒதுக்கீடு முறைகள் இத்தனை ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப் பட்டு சமூக மேம்பாட்டுக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்ட நிலையிலும் உயர்ஜாதி யினருக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி குறையவே இல்லை என்பதை தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வுகள் உணர்த்துகின்றன. 1999-2000ஆம் ஆண்டில் கிராமங்களில் மாத செலவினங்களில் ஒரு தலித் குடும்பத்துக்கும் உயர்ஜாதி குடும்பத் துக்குமிடையே 38 சதவீத இடைவெளியிருக் கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-12இல் நடத்திய கணக்கெடுப்பில் இந்த இடைவெளியில் ஒரு சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
பழங்குடிப் பிரிவினருக்கும் உயர்ஜாதி யினருக்கும் இந்த இடைவெளி 53 சதவீதமாக இருந்து பிறகு 48 சதவீதம் என்ற அளவில் மட்டுமே குறைந்திருக்கிறது.
முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியும் முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் மண்டல் ஆணையத்தில் முக்கியப் பொறுப்பில் பணி யாற்றியவரும் சமூகநீதி ஆய்வாளருமான பி.எஸ்.கிருஷ்ணன், ‘கிரிமிலேயர்’ என்ற சொல்லாடலே தவறானது என்கிறார். “மண்டல் வழக்கில் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் “சமூக ரீதியாக முன்னேறியவர்” என்றுதான் அடையாளப்படுத்துகிறது. ‘கிரிமிலேயர்’ என்கிற சொல்லை அந்த வழக்கில் உச்சநீதி மன்றம் பயன்படுத்தவில்லை. பிற்படுத்தப்பட்ட வர் பட்டியலில் முன்னேறிய பிரிவினருக்கான அடையாளம் – பொருளாதார அளவுகோல் அல்ல; அதை சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவுமே மதிப்பிட வேண்டும். இதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு. அதே நேரத்தில் பட்டியல் இனப் பிரிவினருக்கான அடையாளம் மிகப் பிற்படுத்தப்பட்ட நிலை அல்ல; வரலாற்று ரீதியாக தீண்டாமைக்கு உட்பட்டவர்கள் என்பதே அவர்களுக்கான அடையாளம். ஒரு தனி மனிதரோ அல்லது அவரது சமூகமோ ‘தீண்டப்படாதவர்கள்’ என்ற சமுதாயக் கண்ணோட்டத்திலிருந்து விலகி நிற்கிறார்களா என்பதுதான் அடிப்பைடயான கேள்வி. சமூக பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதைவிட ‘தீண்டாமை’ என்பது கொடூரமானது” என்று கூறுகிறார் பி.எஸ். கிருஷ்ணன். இதற்கு உதாரணமாக, அவர் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் துணை பிரதமர் நிலைக்கு உயர்ந்தவருமான பாபு ஜெகஜீவன்ராமை சுட்டிக் காட்டுகிறார். அவர் உ.பி. முன்னாள் முதல்வர் வேத பண்டிதர் சம்பூர்ணானந்த் சிலையை திறந்து வைத்தவுடன் கங்கை நீரை ஊற்றி சிலையைப் புனிதப்படுத்தினார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் உயர்ந்த பதவியில் இருந்த ஒருவரையே ‘தீண்டப் படாதவராக’ சமூகம் பார்க்கிறது. பி.எஸ். கிருஷ்ணன் மேலும் கூறுகிறார்: “பட்டியல் மற்றும் பழங்குடி இனப் பிரிவினரைப் பொறுத்த வரையில் முன்னேறிய சமூகத்தினருக்கு சமமாக உயருவதற்கான கொள்கைகளையும் திட்டங் களையும் உருவாக்கி கல்வி, பொருளாதாரம், தொழில் போன்ற துறைகளில் சமத்துவமான நிலையை அடையச் செய்ய வேண்டும். அது வரை சில தனி மனிதர்களை சமூகத்திலிருந்து நீக்கி ‘கிரிமிலேயரை’க் கூறி பிரித்துப் பார்ப்பதும், அவர்கள் ‘தீண்டாமை’ எனும் சமூகப் பார்வையிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. இந்தக் கருத்து உச்சநீதி மன்றத்தில் அழுத்தமாக வாதாடப்பட வில்லை. எதிர்காலத்திலாவது இந்த அடிப் படையான கருத்தை நீதிமன்றத்தின் பார்வைக் குக் கொண்டு செல்ல வேண்டும்” என்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் மத்திய சமூகநலத் துறை அமைச்சருக்கும் பிரதமர் மோடிக்கும் பி.எஸ்.கிருஷ்ணன் கடிதம் எழுதி, அரசியல் சட்டத் திருத்தத்தின் வழியாக இந்த அநீதியை நீக்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் கே.கே. வேணு கோபால், துஷர் மேத்தா, இந்திரா ஜெய்சிங், பி.எஸ். பட்வாலியா, தினேஷ் திரிவேதி, சஞ்சய் ஹெக்டே போன்ற வழக்கறிஞர்கள் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்கள். தலித் வழக்கறிஞர் எவராவது வாதிட்டார்களா? இந்த வழக்கில் ஈடுபடுத்திக் கொண்டார்களா என்ற கேள்விக்கு தனக்கு தெரிந்த வரை எவரும் இல்லை என்கிறார் தலித் சமூக நீதி மய்யத்தைச் சார்ந்த இரமேஷ் நாதன்.
உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு அரசுத் துறைகள் தனியார் மயமாகி வருகின்றன. எனவே ‘தலித்’ பிரிவினருக்கான இடஒதுக்கீடு வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. ஏ, பி மற்றும் சி கிரேடு பதவிகளில் தலித்துகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ‘கிரிமிலேயரை’ திணிப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார் நாதன்.
நியாயமான புறக்கணிக்க முடியாத கேள்வி.
‘பிரன்ட்லைன்’ அக்.26 இதழில் திவ்யா திரிவேதி கட்டுரை. தமிழில் ‘இரா’
நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்