கலைஞரின்‘பராசக்தி’உருவாக்கிய புயல்2 தணிக்கைக் குழுவினர் மீது சீறிப் பாய்ந்த பார்ப்பனர்கள்!

பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங்கத்திடம் குவிந்தன. பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவும், தாக்கு தலுக்கு இலக்கானது.

கடித முகப்பில் (letter Head) ) ‘கொச்சி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்:

‘எனது தட்டச்சு எழுத்தருக்குக்கூடத் தகவல்கள் கசிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக நான் என் கைப்படவே எழுதுகிறேன். கடந்த சில நாட்களாகக் கோயம்புத்தூர் ‘டைமண்ட்” திரையரங்கில் பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடம் மில் கூலிகள் சூழ்ந்துள்ள ஒரு முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. அரசாங்கம் அத்திரைப்படத்தைத் தடை செய்யவிருப்பதாக அறிகின்றேன். இன்னும் சிலர் என்னிடம் இது நல்ல திரைப்படம் என்று கூறினர். அதனால் நேற்று (29.10.1952), அப்படத்தைப் பார்க்கும் அபாக்கியத்திற்கு ஆளானேன்.

எனக்கு இது, இந்து மதத்தை, அதன் பூஜைகளை, கோவில்களைக் கேலி செய்து, வறுமைத் துன்பத்தால் எத்தனை கொலைகள் செய்தாலும் குற்றமில்லை குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் அவர்களைக் கொல்வது நியாயமானது. இன்றைய சமூகக் கட்டமைப்பு ஏழைகளுக்குக் கொடுமையானது, ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் படும் துன்பங்கள் பற்றி அரசாங்கம் அக்கறையற்றதாக இருக்கின்றது என்பன போன்ற கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்பும் திரைப்படமாகத் தெரிகிறது. தன் தங்கையின் கற்புக்குப் பங்கம் ஏற்படும் வண்ணம் அண்ணன் செய்யும் அத்துமீறிய செயல்… மனதைச் சோர்வுகொள்ளச் செய்கின்றது. பொதுமக்கள் பார்வைக்குத் திரையிடத் தகுதியற்றதும் அருவருப்புத்தன்மை கொண்டதும் ஆகும் இத்திரைப்படம். இத்திரைப்படம் மக்கள் மனதில் விதைத்து வரும் நச்சுத்தன்மை தொடர வேண்டுமா என்பது பற்றி, அரசாங்கம் திரைப்டத்தைப் பரிசீலித்து முடிவுக்கு வரவேண்டுமென எண்ணுகின்றேன்.”

பராசக்தி படத்திற்கான தனது எதிர்ப்பு பொதுநலம் கருதியது என்று லோனப்பன், ராஜகோபாலாச்சாரிக்கு உத்தரவாதம் அளிக் கின்றார். ‘இந்தக் கடிதம் எழுதுவதன் நோக்கம் பொதுநலன் கருதியே. ஏனென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர்களுடனோ, கோயம்புத்தூர் டைமண்ட் திரையரங்க உரிமை யாளருடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.”

பரம்பி லோனப்பன், பராசக்தியில் கண்ட கம்யூனிஸ சித்தாந்தம் இன்று நமக்கு ஆச்சரிய மளிப்பதாக இருக்கலாம். ஆனால், நாற்பதுகளின் பிற்பகுதி மற்றும் ஐம்பதுகளின் தொடக்ககாலத் தமிழக அரசியல் சூழ்நிலைகளில் இது சாத்தியமே. 1948 முதல் 1951 வரையிலான கால கட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அக்கட்சித் தொண்டர்கள் சிறையில் வாடிக்கொண்டோ அல்லது தலைமறைவாகவோ செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தனர். தி.க.வும், தி.மு.கவும் அவர்களுக்காக வாதாடினர். காங்கிரஸ் அரசைக் கம்யூனிஸ்ட்கள் மீதான தடையை நீக்கும்படியான கோரிக்கையை வலியுறுத்துவதில் கலைஞர் கருணாநிதி முன்னணிப் பங்காற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கவாதியான வி.பி.சிந்தன், இதனைக் கீழ்க்கண்டவாறு நினைக்கின்றார்: ‘கம்யூனிஸ்ட்கள் மீதான சிறைக்கொடுமைகள் பற்றித் தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி பேசியதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவரது உணர்வுபூர்வமான பேச்சால் தூண்டப்பட்டுச் சில இளைஞர்கள் ஒரு காவல்நிலையத்தைத் தாக்கினர். . “ மேலும் 1950 முதல் அண்ணா (சி.என். அண்ணாதுரை), தி.மு.க. உண்மையிலேயே கம்யூனிச சித்தாந்தத்தை அரசியல் அடிப்படையாகக் கொண்ட கட்சி எனத் திரும்பத் திரும்ப கூறி வந்தார்.

 

 

லோனப்பன் போல் பலரும் பராசக்தியை எதிர்த்தனர். எஸ்.சின்னச்சாமி என்பவர், உப்பு மற்றும் எண்ணெய் வியாபாரி. 1952ஆம் வருடத்தில் தந்திக் குறியீட்டெண் (டெலகிராபிக் அடையாள எண்) வைத்துக்கொள்ளும் அளவிற்கான பெரிய வியாபாரம் அவருடையது. அரசுக்கு எழுதிய கடிதத்தில், அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். ‘சேலத்தில் இப்போது பராசக்தி என்னும் சினிமாப் படம் நடைபெறுகிறது. இது தமிழ்ப்படம். இதில் பெண்களின் மனப்பான்மை, பண்பாடு இவைகள் மிகக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன மற்றும் ஆத்திகத்தை அறவே மறுத்து நாத்திகப் பிரச்சார ஆவேச அடை மொழிக் குவியல்கள் நிறைந்துள்ளன. இன்னும் கட்டுக்கோப்பான கம்யூனிச முழக்கங்கள் அடங்கி யுள்ளன. ஒரு குறிப்பிட்ட கட்சியின் விளம்பர சாதனமாக்கப்பட்டுள்ளது.” மேலும் அவர், பொதுமக்கள் பார்க்கும்படி இப்படத்திற்கு எப்படித் தணிக்கைக்குழு அனுமதி தந்தது என ஆச்சரியப்படுகின்றார். இதேபோல் இன்னொரு வியாபாரி: ‘காமதேனு உரம்” என்னும் கம்பெனியின் அதிபர் மற்றும் ‘சென்னை மாகாண அரசாங்கத்தின் கெமிக்கல் உர வினியோகம் செய்யும் பி.எஸ்.சுப்பராமன், ராஜகோபாலாச்சாரிக்குக் கடிதமொன்றை அனுப்பினார். அக்கடித்தில், ‘இந்தத் திரைப்படத்தின் மூலமாக மதம், விக்ரக வழிபாடு, அரசாங்கம் மற்றும் சமூகத்தின்மீது நேரடியாக வைக்கப்படும் விஷம் போன்ற பரப்புரைகள் வெறும் பொழுதுபோக்கு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட முடியாதது என்பது உறுதி. தேச அபிமானம் கொண்ட குடிமகன் என்ற முறையில், இன்னும் ஒருநாள் கூடுதலாக இத்திரைப்படத்தைக் காட்சிப்படுத்த அனுமதித்தால் உங்கள் அரசாங்கம் அதன் அடிப்படைக் கடமையிலிருந்து தவறியதாகவே கருதுவேன் எனப்போகின்றது அக்கடிதம். புதிதாக உருவாகியிருக்கும் தி.மு.க.விற்குச் சிறு இடம்கூட அனுமதிக்க மறுக்கும் அவரது கறாரான தேசாபிமானம், அன்றைய பிரதமருடனான அவரது பரிட்சயத்தை வெளி காட்டித் தொடர்கின்றது கடிதம். ‘ராஜாஜி அவர்களே சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் சமூக மாற்றத்திற்கான இயக்கமாக வேடமிட்டு அலையும் அந்தக் குறிப்பிட்ட இயக்கத்தின் உள்ளடக்கம் பற்றிய முழுமையான விபரங்கள் தங்களுக்குத் தரப்படவில்லை. நீங்கள் வேறொரு தலைமுறையைச் சேர்ந்தவர், இந்த ‘இயக்கம்” இளம்தமிழர்களின் மனத்திலும், இதயத்திலும் ஊட்டியிருக்கும் ஆழமான வெறுப்பை நீங்கள் அறியமாட்டீர்கள். எனக்கு முழுமையாகத் தெரியும். .. இந்தப் பராசக்தி திரைப்படம் அவ்வியக்கத்தின் தயாரிப்பாகும்” என்று குறிப்பிட்டார். சுஜீத்தோடைச் சேர்ந்த துணி வியாபாரி, கே.ஆர்.துரைசாமியும் இதேபோல் கவலையடைகின்றார். அவரது கவலை, இப்படம் படிப்பறிவில்லாத வெகுமக்களின்மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புப் பற்றி: ‘இப்படத்தைப் பார்க்கும், படிக்க முடியாத, செய்தித்தாள்களைப் புரிந்து கொள்மு டியாத பாமர மக்களின் மனதில் உத்தரவாதமாக நாத்திகம் இடம்பிடித்துவிடும்.”

 

பராசக்தி படத்திற்கு எதிரான பெரும் பான்மையான கடிதங்கள், இந்தியத் தேசியக் காங்கிரஸின் தொண்டர்கள் மற்றும் அனுதாபி களிடமிருந்தே வந்தன. ‘சூளை சேவா சங்கம்” என்ற காங்கிரஸ் பின்னணி கொண்ட அமைப்பின் துணைத்தலைவர் பி.இ.முருகேசன், ‘பாரத தேவி” என்ற தேசியத் தமிழ் நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு, பராசக்தி பற்றிய ஒரு கண்டனக் கடிதத்தை எழுதினார். ‘பாரததேவி”யின் நிர்வாக இயக்குநர் எம்.பக்தவத்சலம்: ‘பாரததேவி” அக்கடித்தை ‘ரகசியம்” என்ற குறிப்பிட்டுச் சென்னை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தது. தேசியவாதிகளின் அடையாளமு ழக்கமான‘வந்தே மாதரம்”‘ஜெய்ஹிந்த்”என்பவற்றுடன் தொடங்கும் இக்கடிதம், ராஜகோபாலாச்சாரி அரசின் பெருமைகளைப் பத்தி பத்தியாகப் புகழ்ந்துவிட்டு, அவரது ஆட்சி தெய்வகடாட்சம் பெற்றது என்கின்றது. ‘திராவிட நாடு பிரச்சினையை வலுப்படுத்துவதற்காகவும், காங்கிரஸ்அரசுக்கும், அன்னை பராசக்திக்கும் எதிரான கருத்துக்களைக் கூறுவதற்காகவும், பராசக்தி படத்தைத் தாக்குகின்றது. ‘பராசக்தி” என்ற திரைப்படத்தைப் புரட்சி செய்கிற மக்கள் பார்ப்பார்களானால், புரட்சி செய்கிற நிலைக்கு வந்துவிடுவார்களென எச்சரிக்கின்றேன். இந்தப் பராசக்தி படத்தை நாட்டிலே நடமாடவிட்டுக்கொண்டே போனால், புரட்சிகர இரத்த ஆறு ஓடும்படியான நிலைக்கு வந்துவிடும் என நினைக்கிறேன்.” என்கின்றது கடிதம். இத்திரைப்படத்தை உருவாக்கிய பகுத்தறிவுவாதிகள் உயிர் வாழவே தகுதியற்றவர்கள் என்று எழுதிய அவர், மேலும் எழுதுகின்றார்: ‘இந்தச் சூழ்ச்சியான பராசக்தி கதை எழுதிய பகுத்தறிவாளர்களைப் பலியாக்கிவிட வேண்டியதுதான்.” ராஜகோபாலாச்சாரிக்குத் திரைப்படத்தைத் தடைசெய்ய ஒரு மாதகால அவகாசம் கொடுக்கும் அவர், தவறினால் ராஜ கோபாலாச்சாரியின் இல்லத்தின் முன் காந்திய வழியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் எச்சரிக்கின்றார்.

அச்சகம் மற்றும் திரையரங்க உரிமையாளரும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருமான ஜி.உமாபதி, சென்னை ஏழுகிணறு பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தி, புராணங்களையும் இதிகாசங்களையும் கிண்டல் செய்யும் பராசக்தியை தடை செய்யக் கோரினார், சென்னை மாகாண அரசாங்கத்தின் மீதும் தரக்குறைவான விமர்சனத்தை வைக்கின்றது என ஒரு மனுவை அனுப்பினார். அறுபத்திரண்டு பேர் ஆங்கிலத்தில் கையப்பமிட்டிருந்த அந்த மனுவில் ஐந்துபேர் மட்டுமே தமிழில் கையப்பமிட்டிருந்தனர்.

காந்திஜி தேசிய வாலிபர் சங்கம். ராஜாஜி கலைக்கழகம், வ.உ.சி முன்னேற்றக் கழகம், நேதாஜி வாலிபர் சங்கம் மற்றும் நாமக்கல் கவிஞர் மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அதில் கையப்பமிட்டிருந்தனர்.” மதுரை சிட்டி சினிமாதிரையரங்கம்.1953ஆம்ஆண்டுபிப்ரவரி பதினான்காம் தேதி முதல் பராசக்தியைத் திரையிடக்கூடாது என மத்திய அரசு நேஷனல் பிக்சர்ஸ§க்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறும் துண்டறிக்கை ஒன்றை மதுரை தேசிய சேவா சங்கத்தின் செயலாளர்கள் வெளியிட்டிருப்பதை அரசுக்குத் தெரிவித்தனர். பிப்ரவரி பதினான்காம் தேதிக்குள் படத்தைப் பார்த்துவிடுமாறு அவர்கள் பார்வையாளர்களை வேண்டிய துண்டறிக்கையையும் இணைத்திருந்தனர்.

கூடுதலாக, தெளிவான அரசியல் அடை யாளங்கள் புலப்படாத பலதரப் பட்டவர் களிடமிருந்து பராசக்தி பற்றிய மனுக்கள் வந்திருந்தன. இராஜபாளையம் நகரிலிருந்து, பெரும்பாலும் தமிழில், அதிலும் கோணல் மானலாக325பேர் கையப்பமிட்ட மனுஒன்று பராசக்தியால் உருவாகக்கூடிய அச்சுறுத்தலான அரசியல் சூழலை விவரித்தது: ‘பராசக்தி ஒரு விபரீதமான படம். அது தேச நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. சென்னை மாகாணத்தின் நடப்பு நிலவரத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் இந்தச் சினிமா புரட்சியை ஏற்படுத்தக்கூடியது. ஒவ்வொரு காட்சியும், வசனமும் அரசாங்கத்தையும், கடவுளையும், “பிராமணர்களையும்”, உங்களையும் பற்றிய தாக்குதலாலும், நிந்தனையாலும் திணிக்கப் பட்டுள்ளன. ‘மனுதாரர்கள் படத்தைஒருவாரம் அல்லது பத்து நாள்களுக்குள் தடைசெய்துவிட வேண்டுமெனும் கோரிக்கையையும் வைத்தனர். பலவேளைகளில் மனுதாரர்களின் மதம் சார்ந்த சகிப்புத்தன்மையின்மையை இம்மனுக்கள் வெளிக்கொண்டு வந்தன.

எடுத்துக்காட்டாக, சென்னை மண்ணடி யிலிருந்து லட்சுமணசாமி என்பவர் கீழ்க் கண்டவாறு எழுதினார்: ‘ஹிந்து மதத்தை அழிக்கும்படிக்குப்பலஇடங்களில் காண்பிக்கப் படுகிறது. சினிமா.. கோவிலினுள் ஒரு பெண்ணைக் கற்பழிப்பவன் ஒரு முஸ்லீம். ஒரு முஸ்லீம் சினிமாவில் ஒரு இந்துவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் தருவார்களா. அப்படியே ஒரு பாத்திரத்தில் இந்த ஒருவர் நடித்தாலும் அதைக் காட்சிப்படுத்த முடியுமா. . . தயவுசெய்து உடனே போய் சினிமாவைப் பார்த்து தர்மத்தைக் காக்க நடவடிக்கை எடுக்கவும்.” ஆனால் உண்மை வேறு. சுர்ச்சைக்குரிய பூசாரி கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு முஸ்லீம் அல்ல, அவர் கே.பி. காமாட்சி ஆவார்.

அச்சகம் மற்றும் திரையரங்க உரிமையாளரும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருமான ஜி.உமாபதி, சென்னை ஏழுகிணறு பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தி, புராணங்களையும் இதிகாசங்களையும் கிண்டல் செய்யும் பராசக்தியை தடை செய்யக் கோரினார்

 

பராசக்தி படத்திற்கான எதிர்ப்பு, தேசியப் பத்திரிகைகள் மூலம் வலுப்பெற்றது. நடுத்தர வாசகர்களின் ஆதரவு பெற்ற பிரபலமான ‘தினமணிக் கதிர்” வார இதழ், திரைப் படத்தைத் தாக்குவதில் முன்னணி பங்கு வகித்தது. வழக்கத்திற்கு மாறாக, நெருக்கமாக அச்சிடப்பட்ட, மூன்றுபக்க விமர்சனத்தை தினமணிக் கதிர் வெளியிட்டது. ‘காந்தர்வ மண்டலம்” எனத் தலைப்பிடப்பட்டிருந்த இவ்விமர்சனம், ‘பராசக்தி” அந்தப் பெயர் கொண்ட திரைப்படத்தில் நிந்திக்கப்படுகிறாள்” என்னும் வாசகங்கள் அடங்கிய சிறிய பெட்டிச் செய்தியுடன் தொடங்குகின்றது. ‘படத்தின் முக்கிய லட்சியம் தெய்வநிந்தை செய்வதாகும்.” அத்துடன் சர்க்காரும் சமூகமும் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் தாக்கப்படுகின்றன” என்கின்றது விமர்சனம். மேலும், ‘அவன் பைத்தியக்காரனாக நடித்து வழியில் போகிறவர்களை அடித்துப்பிடித்து மிரட்டி அவரிகளிடமிருப்பதைப் பிடுங்கித் தின்றுவிட்டு, திரும்பத் திரும்பப் பொருளாதாரப் பிரசங்கம், பகுத்தறிவுப் பிரசங்கம், தெய்வ நிந்தனைப் பிரசங்கம் எல்லாம் செய்யக் கிளம்பி விடுகிறான். அந்தக் கதாநாயகன் இப்படிச் செய்வதைப் பார்க்கும்போது, கதையில் மேற்படிக் கொள்கைகளைப் புகுத்தவும், பரப்பவும் முயற்சி செய்கிறவர்களின் வாழ்க்கையையே அவன் சித்தரித்துக் காட்டுகிறானோ என்று தோன்றுகிறது” என்கின்றது விமர்சனம்.

தினமணிக் கதிரின் விமர்சனம், மறைமுகமாக மத உணர்வுகளைத் தூண்டவும் முயற்சித்தது.

 

அது வாசகர்களுக்கு இரண்டு காட்சியமைப்புச் சாத்தியங்களை முன் வைத்தது:

1.திரைப்படத்தில் குணசேகரன், மாணிக்கம்பிள்ளை, கல்யாணி மற்றும்விமலாஆகியோருக்குப்பதிலாகஜோசப், அருளானந்தம், மேரி மற்றும் லில்லி எனும் கிருஸ்தவப் பாத்திரங்கள், ஒரு கிறித்தவப் பாதிரி தேவாலயத்தில் லில்லியைக் கற்பழிக்கிறார்.

  1. அப்துல் காதர், சையத்ஹீயன் மற்றும் பாத்திமா பீவியை மசூதியில் கற்பழிக்க முயற்சிக்கிறார். இந்தக் கற்பனையான காட்சியமைப்பை விவரித்துவிட்டு விமர்சகர் கேட்கிறார், ‘படம் பிடித்தவர்களைக் கேட்கிறேன் : படம் பிடிக்க ஸ்டுடியோ கொடுத்தவர்களைக் கேட்கிறேன் மேற்கூறிய இரண்டு சம்பவங்கள் ஒரு படத்தில் புகுத்துவதைப் பற்றி அவர்கள் கனவு காணவும் அவர்களுக்குத் தைரியமுண்டா என்று கேட்கிறேன் : புகுத்தியிருந்தால் கலவரங்கள் ஆரம்பித்து இரத்தம் சிந்தியிருக்கும்.”

அதேபோல் துமிலன்  எனும் தமிழ் எழுத்தாளர், தினமணிக்கதிரில் கலைஞர் கருணாநிதியின் எழுத்து மற்றும் மேடைப் பேச்சின் அடையாளமான அடுக்குமொழியைக் ‘கடாமுடா” தமிழ் என்று விமர்சனம் செய்திருந்தார், தினமணிக்கதிரின் தாக்குதலைத் தனது சுயசரிதையில் நினைவு கூறும் கலைஞர் கருணாநிதி கீழ்க்கண்டவாறு எழுதுகின்றார்.

நான்எழுதிய ‘பராசக்தி”படம் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி நூறு நாட்களுக்கு மேல்ஓடிக்கொண்டிருந்தபோது, ‘தினமணிகதிர்” இதழில் ‘பராசக்தி” படத்தின் கருத்துக்களையும், வசனங்களையும் கடுமையாகத் தாக்கி மிக நீண்டதொரு விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. பத்துப் பக்கத்திற்குக் குறையாமல் எழுதப்பட்ட அந்த விமர்சனத்தில் வரிக்கு வரி நான் தாக்கப் பட்டிருந்தேன். என்னையும் ‘பராசக்தி” படத்தையும் கண்டித்து, காங்கிரஸ் கட்சி கண்டனக் கூட்டங்கள் பலவற்றை நடத்தியது. கண்டன விமர்சனம் வந்திருந்த ‘தினமணி கதிரின்” அட்டையில் பராசக்தியைக் கிண்டல் செய்வது போல், ஒரு கேலிச் சித்திரமும்வரையப் பட்டிருந்தது. ஆடை குலைந்த நிலையில் ஒரு பெண்ணின் ஓவியம் வரைந்த விளம்பரம் ! அந்த விளம்பரத்தின் தலைப்பு ‘பரப்பிரம்மம்” என்பதாகும். அதன் கீழே ‘கதை வசவு தயாநிதி” என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுதான் அந்தப் பத்திரிகையின் அட்டைப்படக் கேலிச் சித்திரமாகும். (இப்போதுள்ள நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ‘தினமணி கதிர்” தான். ஆனால் ஆசிரியர் குழு முழுவதும் வேறு!)

அதைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை. என்னைக் கிண்டல் செய்து அவர்கள் போட்டிருந்த அதே ‘பரப்பிரம்மம்” என்ற தலைப்பை வைத்து ஒரு நாடகம் எழுதினேன். முழுக்க முழுக்கக் கட்சிப் பிரச்சாரம் நிறைந்த இந்த நாடகத்தைப் பல ஊர்களில் நடித்துக் காட்டினோம்.”

‘பரப்பிரம்மம்” என்பது பார்ப்பனர்களின் வீட்டில் அநாவசியமாகக் குழம்பும் ஒரு நபரைக் கண்டிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை. ‘வசவு தயாநிதி” என்பது கருணாநிதி என்ற பெயரின் ஒரு மாற்று.

பெரும்பாலான கடிதங்கள், திரைப்படத்தின் மத எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பைத் தாக்கி  வந்தன என்றாலும், ஒரு சில கடிதங்கள் பெண்கள் அத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் பற்றி விவாதங்களை எழுப்பின. இந்த விமர்சனங்கள், பாரம்பரிய கலாச்சாரத்துக்கு எதிராகப் பராசக்தி பெண்களைச் சித்தரித் திருந்ததாகக் கூறின. எடுத்துக்காட்டாக, தினமணிக் கதிரின் விமர்சனம். ‘ஒரு ஸ்திரி தன் கணவன் யாரையோ பலாத் காரம் செய்ய முயன்றதைப் பார்த்தபோது அவள் தானும் ஒரு ஆண்பிள்ளையைப் பலாத்காரம் செய்யப் போவதாகக் கூறி அதற்காக வெளியே செல்லப் போகிறாள்” எனக் குறிப்பிட்டது. அதேபோல் அவ்விமர்சனம், சுய மரியாதைத் திருமணத்தை விமர்சித்து, அதைக் காட்டு மிராண்டித் தனத்தோடு ஒப்பிடுகின்றது. குணசேகரனும், விமலாவும் தாலியைத் தவிர்த்து மாலை மாற்றித் திருமணம் செய்துகொள்ள எடுக்கும் முடிவைக் குறிப்பிடும் விமர்சனம். ‘அந்தப் பூமாலைகள் மாற்றிக்கொள்ளும் சிரமம்தான் எதற்கு? பழைய காலத்தில் குகைகளிலும் காடுகளிலும் வசித்து வந்தவர்கள் மாலையா மாற்றிக்கொண்டிருந்தார்கள்?” என்கிறது. ராஜ கோபாலச்சாரிக்குக் கடிதம் எழுதிய தமிழனும், பெண் கதாபத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்: ‘முதல் பாட்டில் திராவிட நாட்டுப் பெண்கள் அழகிலும், கற்பிலும் குணத்திலும் உலகப் பெண்மணிகளைவிடச் சிறந்தவர் என்று பாடுகிறார்கள். ஆனால் கதாநாயகி கல்யாண மானவுடன் தன் புருஷனுடன் நந்தவனத்தில் தாஸிகளைவிடக் கேவலமான முறையில் ஓடி ஆடி நடனமாடுகிறாள்.” அவர், சுயமரியாதைத் திருமணங்களையும் விட்டுவைக்கவில்லை. ‘கடைசியில் கல்யாணத்தில் தாலி கட்டுவது பழைய மூடநம்பிக்கை, மோதிரம் மாற்றல்தான் சிறந்தது”என்கிறார்கள். இதுவா திராவிடப்பண்பு, மேனாட்டுக் காப்பியன்றோ!“ சுருக்கமாகச் சொல்வதானால், பராசக்தி பெண்கள் பற்றிய பாரம்பரியமான விழுமியங்களைப் பெருமளவில் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், அவை விமர்சகர்களுக்குப் போதுமானதாக இல்லை.

பராசக்தி படத்தின் அநேகமான விமர்சனங்கள், சினிமா தணிக்கைக் குழு உறுப்பினர்களைக் கண்டனம் செய்தன. இராஜபாளையம் நகர மக்களிடமிருந்து வந்த மனு இதுபற்றிக் கூறும்போது, ‘படத்தைப் பார்ப்பதற்கான நேரத்தில் சென்சார் போர்டு உறுப்பினர்கள் தூங்கிவிட்டார்கள் அல்லது தேசத்துக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியதான இப்படத்தைத் திரையிட அனுமதிப்பதற்கு லஞசம் வாங்கினார்களா… படத்தை ஒரு முறை பாருங்கள். உங்ளது சென்சார்பொர்டு உறுப்பினர்கள் திராவிடர் கழகத் தோழர்களா, இல்லையா என்ற தெரியும்” என்றது.

தினமணிக்கதிரும் தணிக்கைக்குழு பற்றி, தன் கதற்றத்தைப் பதிவு செய்தது. ‘படத்தைத் தணிக்கை செய்த சென்ஸார்கள் படத்தில் என்னத்தைப் பார்த்தார்கள்? எந்தப் பெண்மணி எத்தனை முழப் புடவை அல்லது எத்தனை அங்குல ஜாக்கெட் தரித்திருக்கிறார்களென்பதை மட்டுந்தானா திரும்பத்திரும்பப்பார்த்தார்கள்? வேறு ஒன்றும் அவர்கள் கண்ணில் படவில்லையா? காதில் விழவில்லையா? இந்தப் படத்திற்காகக் குருடு, செவிடு பள்ளிக்கூடத்திலிருந்தவர்களையா பொறுக்கியெடுத்து சென்ஸார்களாகப் போட்டார்கள்” என்று அது விமர்சித்தது.

 

பராசக்தி திரைப்படம் எப்படிப் புத்திசாலித் தனமாகத் தந்திர உபாயங்களையும், குறுக்கு வழிகளையும் பயன்படுத்தித்தணிக்கைக் குழுவிற்குத் தப்பியது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். திட்டமிட்டு, கடவுள்களையும், அரசாங்கத்தையும் அவமரியாதை செய்யப் பைத்தியக்காரன் பாத்திரத்தைத் திரைப்படத்தில் தேர்வு செய்து, தணிக்கையிலிருந்து தப்பினர், என்கின்றார். ஒரு விமர்சகர்.

இன்னொரு மனுதாரரான, ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமாகிவிட்ட தமிழன், இரண்டாம் உலகப்போரைப் பின்னணியாகக் கொண்ட கதைத் தேர்வைச் சூழ்ச்சியாகப் பார்க்கிறார்.

 

தினமணிக்கதிரின் விமர்சனம், மறைமுகமாக மத உணர்வுகளைத் தூண்டவும் முயற்சித்தது. அது வாசகர்களுக்கு இரண்டு காட்சியமைப்புச் சாத்தியங்களை முன்வைத்தது

முதலில் இந்தக் கதையில் நடப்பதெல்லாம் 1942 ஆம் வருஷத்தில் நடந்தவை” என்று காட்டப்பெற்றன. ஆனால் பின்னால் வந்த சம்பாஷணைகளும், காட்சி அமைப்புகளும் ஆதி முதல் அந்தம்வரை தற்காலத்தை ஒட்டிய தாகவே இருந்தன. பல இடங்களில் சர்க்காரை வசைமாரி பொழிகிறார்கள். இதை யாராவது கேட்டால், ‘எல்லாம் 1942 ஆம் வருஷத்திய பிரிட்டிஷ் சர்க்காரைத்தானே சொல்லுகிறோம். இக்காலத்துச் சர்க்காரை யார் திட்டுகிறார்கள் என்ற தப்பித்துக் கொள்ளலாமே என்று தான். பரம முட்டாளான எனக்குக்கூட இது தெரிகிறது.

ஏன் புத்திசாலிகளான சென்ஸார் போர்டில் உள்ளவர்களின் மூளைகளுக்கு இது எட்ட வில்லை?” திரைப்படத் தணிக்கைக் குழுவின் அரசியல் சார்புகள் பற்றிய இத்தகைய அனுமானங்கள், முற்றிலும் அடிப்படையற்றவை அன்று: ‘சண்டே அப்சர்வர்” பத்திரிகையின் ஆசிரியரும், திராவிடஅரசியல் ஆதரவாளருமான பி.பாலசுப்ரமணியன் தணிக்கைக்குழுவில் இருந்ததால்தான். பராசக்தி திரைப்படம் தணிக்கையிலிருந்து தப்ப முடிந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.” (அடுத்த இதழில் நிறைவுறும்)

நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்

You may also like...