ஒரு வரலாற்றுக் கவிதை
1970ஆம் ஆண்டு சென்னை வானொலிக்கு பெரியார் ஒரு பேட்டி அளித்தார். பெரியாரின் பல்வேறு வரலாற்றுத் தடங்களை விரிவாக பெரியாரே பதிவு செய்த முக்கியத்துவமான பேட்டி அது. பேட்டி கண்ட செய்தியாளர் மாறன். பெரியாருடன் வைக்கம் போராட்டம், கதர் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களில் உடன் பயணித்தவரும், காங்கிரஸ்காரரும் பெரியாரின் உற்ற நண்பருமான கோவை அய்யாமுத்து, பெரியாரின் பேட்டியை குரல் வழியாக வானொலியில் கேட்டவுடன், உணர்வுக் குள்ளாகி உடனே எழுதிய கவிதை இது.
வானொலி தன்னில் மாறன்
வழுத்திய கேள்விக் கெல்லாம்
வான்மழைபோன்று தாங்கள்
வழங்கிய சொற்கள் கேட்டு
நானும் என்மனையாள் தானும்
நன்மனம் நிறைவுற் றோமே!
நீங்கிலா நினைவு பூட்டு
நித்தமும் நினைப்ப தோடு
ஓங்குமுன் புகழைக் கேட்டு
உள்ளமும் மகிழ்வுற் றோமே!
எண்ணிய கருத்தைத் தாங்கள்
எவரெல்லாம் எதிர்த்த போதும்
திண்ணிய மாகச் சொல்லும்
திறத்தினை எண்ணி எண்ணிச்
சிறியனேன் இறும்பூ தெய்தித்
திளைத்திடல் இன்றும் உண்டே!
உத்தமி நாகம் மாவும்
உயிருடன் இருந்த காலை
எத்தனை நாட்கள் அங்கு
இன்னமுது உண்டோம் நாங்கள்.
அத்தனே! அந்த நாட்கள்
அருந்தவப் பேறாம் அன்றோ!
இத்தரை மீதில் சாதி
இழிபடும் சமயம் சாமி
முத்திரை கிழிக்கும் போரில்
முற்றி லும்மோடு நின்றேன்
எத்தனை துன்ப மேற்று
இடர்ப்பட நேரிட் டாலும்
சுத்த தன் மானம் காக்கத்
தொடர்ந்துயிர் ஈவே னய்யா!
………………… …………………. …………………….
……………….. …………………… …………………….
பன்னெடுங் காலம் தங்கள்
பகுத்தறிவு வியக்கம் வாழ்ந்து
நன்னெறி சூழ்ந்து மக்கள்
நலமுடன் வாழ்க! வாழ்க!
நிமிர்வோம் செப் 2018 இதழ்