வாசகர்களிடமிருந்து…
வளர்ச்சித் திட்டமா? அழிவுத் திட்டமா?
அணுக்கழிவுகளை ஒரு இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற சுந்தரராஜன் உரையைப் படித்தபோது அதிர்ந்து போனேன். வளர்ச்சிக்கான திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் உயிர் வாழ்க்கையே வளர்ச்சிக்கு விலையாகக் கேட்கும் திட்டங்களை எப்படி ஏற்க முடியும்? தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தினாலும் 13 உயிர்களை துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி கொடுத்ததினாலும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. இப்போது பசுமைத் தீர்ப்பாயத்தின் வழியாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் தூத்துக்குடியில் நுழைய ஸ்டெர்லைட் நிறுவனம் முயற்சிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும் வரதட்சணை ஒழிப்புச் சட்டத்திலும் ஓட்டையைப் போட்டு சட்டத்தின் வலிமையை சிதைக்கும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் பதவி ஓய்வு பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே நடுவண் ஆட்சியால் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் வேதாந்தா நிறுவனம் தனக்கு சாதகமான உத்தரவுகளைப் பெறத் தொடங்கி விட்டது.
லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அனில் அகர்வால் வேதாந்தக் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தபோது லண்டனில் எதிர்ப்புப் போராட்டம் சுற்றுச் சூழல் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செய்தியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (அக்.1, 2018) அன்று வெளியிட்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, போராட்டத்தில் முழக்கமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசே இந்தப் போராட்டங்களையோ, கண்டனக் கூட்டங்களையோ அனுமதிப்பதில்லை. ஆனால் லண்டன் நகரில் போராட்டம் நடக்கிறது. வேதாந்த குழுமம் லண்டனில் நடத்தும் தொழிற்சாலைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு, மனித உரிமை மீறல், நிதி ஒழுங்கீனம் உள்ளிட்ட குற்றங்களை இழைத்திருப்பதை போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டி, லண்டன் மாநகராட்சி, ஏன் இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். லண்டன் பங்கு சந்தைக்கான பட்டியலிலிருந்து வேதாந்தா குழுமம் நீக்கி வைக்கப்பட்டிருப்பது கூடுதல் செய்தியாகும். வேதாந்தா குழுமத்தில் முறைகேடு, சுற்றுச் சூழல் பாதிப்புகளை உருவாக்கும் திட்டங்களை விளக்கி ஒரு ஆய்வு நூலும் ‘வேதாந்தா பில்லியன்ஸ்’ என்ற பெயரில் லண்டனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வெளி யிட்டிருப்பதை அந்த ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியிருக்கிறது.
அழிவை உருவாக்கும் ஆபத்தான திட்டங்கள் குறித்து உலகம் முழுதும் மக்கள் விழித்துக் கொண்டு போராடத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. ‘நிமிர்வோம்’ இத்தகைய சிறப்பான கட்டுரைகளை வெளியிட் வருகிறது!
கு. மணிகண்டன், திருப்போரூர்
ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம்
அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்து கார்கி கட்டுரை பல விரிவான செய்திகளைத் தந்திருக்கிறது. பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யப் கோரும் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேரள அரசை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.சும் மிரட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, கேரளாவில் நிகழ்ந்த வெள்ளச் சேதத்துக்கு பெண்களை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கேரள அரசு எடுத்த முடிவே காரணம் என்றார்.
ஆனால், கேரளாவின் பா.ஜ.க. நாளிதழான ‘ஜென்ம பூமி’ ஏட்டில் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட சிந்தனைக் குழுவான ‘பாரதிய விச்சாரகேந்திரம்’ என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆர்.சஞ்சய்யன், சபரிமலையில் பெண்களை அனுமதித்துள்ளதை வரவேற்று கட்டுரை எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே கேரள அரசு அமுல்படுத்த வேண்டும். இது இந்து தர்மத்தை வளர்க்கும் தீர்ப்பு என்று எழுதியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். ஏன் இரட்டை வேடம் போடுகிறது?
க. அரங்கராசன், சென்னை-28
நிமிர்வோம் செப் 2018 இதழ்