திராவிடர் விடுதலைக் கழகம் மாநில செயலவைக் கூட்டம் திருப்பூர் 14102018 தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம்

மாநில செயலவைக் கூட்டம்

திருப்பூர் 14.10.2018

தீர்மானங்கள்

தீர்மானம் 1

பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்புகளை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது.

ஒன்று – சபரிமலை அய்யப்பன் கோயிலில் இடையில் சில ஆண்டுகளாக  “தீட்டாகிறார்கள்” என்று காரணம் கூறி பெண்களை அனுமதிக்க மறுத்து வந்த பாகுபாட்டை உச்சநீதிமன்றம் செல்லாதாக்கியிருக்கிறது.

மற்றொன்று – இந்தியத் தண்டனை சட்டத்தில் 497 வது பிரிவு செல்லாது என்ற தீர்ப்பாகும். ஒரு மனைவி கணவன் சம்மத்துடன் வேறு ஒருவனை உடல்உறவு கொள்ள முடியும். கணவன் சம்மதமின்றி உடல்உறவு கொண்டால் கிரிமினல் குற்றம் என்று கூறுகிறது இப்பிரிவு. ஒரு பெண் -கணவனின் ஏகபோக உடைமையல்ல. பெண்ணுக்கான பாலுறவு சுதந்திரம் கணவனால் மட்டுமே தரப்பட வேண்டும் என்ற இந்த பிரிவை நீக்க வேண்டும் என்று 1971 ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். தொலைநோக்கோடு பெரியார் முன்மொழிந்த தீர்மானம் இப்போது உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது.

மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்ற 377 வது பிரிவு செல்லாது என்ற தீர்ப்பாகும். ஒருவரின் பால் உறவு சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. திருமணம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் நடப்பது தான் என்ற சமூகம் திரித்த வரையரையை இந்த தீர்ப்பு தகர்த்துள்ளது. இத்தீர்ப்பின் வழியாக ஜாதியமைப்பு நிறுவனமான குடும்பம் என்ற அமைப்பின் இறுக்கம் தளர்வதோடு குழந்தைப் பேறு பெண்ணினத்தை அடிமையாக்குகிறது என்ற பெரியாரிய பெண் விடுதலை சிந்தனைக்கு வலிமை சேர்க்கிறது. காலத்தின் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகள் பெண் விடுதலையை உறுதி செய்யும் தீர்ப்புகளாகும்.

பெண்கள் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆண்களின் அதிகார மனோபாவம் ஒரு காரணமாக இருந்தாலும் அந்த ஆதிக்கத்துக்கான கருத்தியலை வழங்குவது மதங்களேயாகும். மதங்கள் பக்தி, சடங்கு, வழிபாடுகள் வழியாக பெண்கள் மீது திணிக்கும் அடிமைப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆண் ஆதிக்க எதிர்ப்பு மட்டுமே முழுமையான பெண்ணுரிமையை வழங்கிடாது என்று இந்த செயலவை சுட்டிக் காட்ட விரும்புகிறது

 

தீர்மானம் 2

தமிழ்நாடு அமைச்சரவை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து ஏழு தமிழர் விடுதலைக்கு பரிந்துரைத்த பிறகும் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்துவது ஆளுநரின் சட்டரீதியான கடமையை மீறுவதாகும். நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக கலைஞர் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரைத்தபோது அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அவருக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையென்றாலும் சட்டரீதியாக ஏற்பு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போதும் இதே போல் 7 தமிழர் விடுதலை செய்ய அமைச்சரவை முடிவெடுத்தபோது ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். 7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் நடுவண் அரசுக்கே உண்டு என்று உச்சநீதிமன்றம் அளித்த அதே தீர்ப்பில் அரசியல் சட்டம் 161 வது பிரிவு மாநில அரசுக்கு வழங்கியுள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரம் அப்படியே நீடிக்கும், அதில் கை வைக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தது. இப்போது 7 பேர் விடுதலையில் முன்னிற்கும் பிரச்சனை சிறைவாசிகளாக இருந்த காலத்தில் அவர்களின் நன்னடத்தையும் அதுகுறித்து இந்த சிறை சீர்திருத்த குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை தவிர அவர்கள் கடந்த காலத்தில் செய்த குற்றங்களின் தன்மைகளை பொறுத்து அல்ல. அதுமட்டுமின்றி இந்த 7 பேரும் ஏற்கனவே தண்டனை குறைப்பிற்கு உள்ளானவர்கள் என்ற நிலையில் சிறைச்சாலை விதிகளின் 341 வது விதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுகிறார்கள். இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் உரிமை இந்த விதி சிறைத்துறை கண்காணிப்பாளருக்கே வழங்குகிறது. ஆக அரசியல் சட்டமும் சிறை விதிகளும் வழங்கியுள்ள இந்த உரிமைகளையும் விதிகளையும் பயன்படுத்தி இந்த 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்களை தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நடத்த முன்வரவேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்திகிறது.

 

தீர்மானம் 3

கோயில் சொத்துக்கள் கொள்ளை போகாமல் அவற்றை ஒழுங்குபடுத்திட இந்தியாவிலேயே நீதிகட்சி ஆட்சி காலத்தில் தான் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோது இந்து அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கடவுள்கள் திருட்டுப் போகும் புகார்கள் ஏராளம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த திருட்டுகளும் மோசடிகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவித்து தனிநபர் வாரியத்தின் கீழ் கொண்டுசெல்லும் முயற்சிகள் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இப்போதும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படாத தில்லை நடராஜன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் நடக்கும் ஊழல்கள் நாடறியும். அதே நேரத்தில் அறநிலையத்துறையின் கீழுள்ள தமிழ்நாட்டில் அதிக வருமானமுள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இப்போது 176 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வங்கியில் வைத்திருக்கும் செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன.

எனவே கோயில்களை அறநிலையத்துறையில் இருந்து விடுவிக்கும் பார்ப்பன சதிவலையில் சிக்கிவிடக் கூடாதென்று இந்த செயலவை தமிழக அரசையும் இனஉணர்வுள்ள இறைஉணர்வாளர்களையும் கேட்டுக்கொள்கிறது.


 

தீர்மானம் 4

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற தமிழகத்தின் விவசாய நிலங்களை நஞ்சாக்கும் ஆபத்தான திட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில் மேலும் மூன்று புதிய ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழக நடுவண்அரசு அனுமதித்திருப்பதையும் திட்டங்கள் குறித்து மக்கள் கருத்துக் கேட்பை தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளதையும் இந்த செயலவை வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 5

ஆளுநர்கள் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அல்ல. அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படவேண்டியவர்கள் என்று தில்லி ஆம் ஆத்மி ஆட்சி தொடர்ந்த வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆட்சியின் நிர்வாக பணிகளில் குறுக்கிடுவதோடு அண்மையில் தண்டனைச் சட்டத்தின் கொடூரமான 124வது பிரிவை நக்கீரன் ஏட்டின் மீது ஏவிவிட முயற்சித்தார். ஆளுநரின் அரசியல்குறுக்கீடு மற்றும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தும் நடவடிக்கைகளை இந்த செயலவை வன்மையாக கண்டிப்பதோடு ஆளுநர் பதவிகளையே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக்கத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்று கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அரசியல்கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் இந்த செயலவை அறைகூவல் விடுக்கிறது.

You may also like...