தி.மு.க.வின் தலைவராகியுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்றைய (28.08.2018)வாட்ஸ் அப் செய்தி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பொதுக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சி ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல முயற்சி என்பதை நாம் பாராட்ட வேண்டும்.

“திராவிட இயக்கம் ஒரு கடுமையான நெருக்கடி சூழலில் இப்போது இருந்துகொண்டு இருக்கிறது. கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று டெல்லியில் ஆளுகிற பார்ப்பன-மதவாத சக்திகள், தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை ஒழிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிற நிலையில் ஸ்டாலின் இப்போது தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்”.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தனித்துவமான அடையாளங்கள், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றிலிருந்து அவர் நிச்சயமாக அவர் விலகிச் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை எல்லோரையும் போல நமக்கும் இருக்கிறது. குறிப்பாக சுதந்திர நாள் செய்தியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடுகையில், “இந்தியா என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாடு, அதனைக் காப்பாற்ற வேண்டும், மதச்சார்பின்மையைக் காப்பாற்ற வேண்டும். கூட்டாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்” என்ற மூன்று கருத்துக்களை அவர் கூறியிருப்பது அவரது தெளிவான பார்வையைக் காட்டுவதாகவே நாம் நம்புகிறோம்.

ஏற்கெனவே, காலில் விழுகிற கலாச்சாரங்கள் வேண்டாம், கட்-அவுட் பேனர்கள் வேண்டாம், கூட்டங்களில் துண்டுகளுக்குப் பதிலாக நூல்களை வழங்குங்கள் என்ற திட்டங்களைக் கட்சிக்குள் அறிமுகப்படுத்திய செயல்தலைவர் ஸ்டாலின் இப்போது தலைவராக மாறியிருக்கிற சூழ்நிலையில் கட்சியை நவீன மாற்றங்களோடு, புதிய சிந்தனைகளோடு, திராவிட இயக்க லட்சியங்களோடு, வளர்த்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் சூழ்ந்து நிற்கிற ஆபத்துகளை முறியடிக்கக்கூடிய வலிமையான ஒரே இயக்கமாக இன்றைக்கு இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தருகிறோம் என்று சொல்வது தமிழர் நலனுக்கான ஆதரவாகவே கருதுகிறோம். தமிழர் நலனுக்கான பாதுகாப்பு திமுக அதிகாரத்திற்கு வருவதில்தான் இருக்கிறது என்று நம்புகிறோம்.

அந்தவகையில் ஸ்டாலின் தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர திராவிடர் விடுதலைக் கழகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி….வணக்கம்….

– தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்

திராவிடர் விடுதலைக் கழகம்-

You may also like...