வாசகர்களிடமிருந்து…

‘நிமிர்வோம்’ ஜூன் 2018 இதழ் வி.பி.சிங் சிறப்பிதழாகவே வெளி வந்திருப்பது மிகச் சிறப்பு. உ.பி.யில் வடநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், வட நாட்டவருக்கே உரிய வழமையான இந்து வெறி மதவாதம், பழமைவாதம் என்ற சிந்தனையிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு, சமூக நீதி – சமத்துவம் என்று சிந்தித்த வி.பி.சிங், உண்மையிலேயே ஒரு அதிசய மனிதர் தான். தனது பிரதமர் பதவியையே தூக்கி எறிந்து, அவர் பாதுகாத்துத் தந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டில்தான் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியரும் பயன் பெற்று வருகிறார்கள். அந்த நன்றி உணர்ச்சி இல்லாத சமூகத்தில் ‘நிமிர்வோம்’ நன்றி உணர்வுடன் அவருக்கு சிறப்பிதழை வெளியிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும். சொல்லப் போனால் தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க.வுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாத நிலையில் முரசொலி மாறனுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர் அவர். தி.மு.க.கூட அவரை மறந்து விட்டது என்பது ஒரு சோகம் தான்.

– நா. கண்மணி, திருச்சி

ஏ.ஜி.நூராணி எழுதிய ‘மசூதி இடிப்பை’ காந்தி ஆதரித்தார் என்ற கட்டுரை, ஆர்.எஸ்.எஸ்.சின் பொய்ப் பிரச்சாரங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ‘சங் பரிவார்’ எப்போதுமே பொய்களைப் பேசுவதற்கு வெட்கப்படாதவர்கள், காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா கொண்டு வந்த அவசர நிலை காலத்தில் அதை எதிர்த்துப் போராடிய வீரர்களாக இப்போது வீரம் பேசுகிறார்கள். உண்மையில் அன்று சிறையிலடைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரும் தங்கள் விடுதலைக்காக இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள். இதற்கு சாட்சி வேறு யாருமல்ல. இப்போதும் ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளராக பேசிக் கொண்டிருக்கும் சுப்ரமணியசாமியே ஜூன் 13, 2000 அன்று வெளி வந்த ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அவசர நிலையில் சங் பரிவாரங்களின் துரோகத்தை விளக்கி விரிவான கட்டுரை எழுதினார். அதில் அவசர நிலை காலத்தில் துரோகம் செய்த பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ‘அவசர நிலை எதிர்ப்பு நாள்’ கடைபிடிப்பது கேலிக்குரியது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ், இந்திராவிடம் மன்னிப்புக் கேட்டு பல கடிதங்களை எழுதினார். இந்திரா பதிலளிக்கவே இல்லை. மகாராஷ்டிரா சட்டசபை பதிவேடுகளிலேயே இதற்கான ஆதாரங்கள் இப்போதும் இருக்கின்றன. இந்திராவின் 20 அம்சத் திட்டத்தையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக இந்திராவுக்கு கடிதம் எழுதியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்” என்று சுப்பிரமணியசாமி சங். பரிவார் பா.ஜ.க. துரோகங்களை அக்கட்டுரையில் விரிவாகவே பட்டியலிட்டுள்ளார். சங்பரிவார் பொய்யர்களின் கூடாரம்.

– சு. அரங்கராசன், சென்னை-5

‘அடையாளங்களை அழிக்கும் வடமொழி’ என்ற கார்கியின் கட்டுரையில், “மேற்குலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கள் சுய சிந்தனையால் அறிவியல் உலகுக்கு பங்களிப்பு செய்தவர்கள் மிகக் குறைவுதான்” என்ற கருத்து, கசப்பாகத் தோன்றினாலும் அதுதான் உண்மை. “இந்திய விஞ்ஞானிகள்  பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை, ஆன்மிக சக்தி, சாமியார்களின்  அற்புதங்களை நம்புகிறவர்களாகவே இருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் சமூக-கலாச்சார மதச் சார்பின்மை பற்றிய ஆய்வு நிறுவனம் (அய்.எஸ்.எஸ்.சி) வெளியிட்ட கருத்தை கட்டுரையாளர் மிகச் சரியாகவே எடுத்துக் காட்டியிருக்கிறார்.

– ப. தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம்

‘அடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்’ என்ற அறிவியல் கட்டுரை – மிகச் சிறப்பு. நவீன மூடநம்பிக்கைகள் போலி அறிவியலை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை ‘நிமிர்வோம்’ இதழ் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

– க. திலகவதி, குடந்தை

நிமிர்வோம் ஜுலை 2018 மாத இதழ்

You may also like...