மசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா? – ஏ.ஜி. நூராணி
காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட் டத்துக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சி குடியரசுத் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறது. பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்ற காவி அமைப்புகள் காந்தியைத் தங்களின் ஆதரவாளராகக் காட்டுவதற்கு நிகழ்த்திய மோசடிகளை அம்பலப் படுத்துகிறது, இந்தக் கட்டுரை.
காந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங்பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக் கொள்ள காந்திஜியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமான நடைமுறை. பிரிட்டனில் செயல்படும் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்னைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கும் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார் . இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1937 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ள தாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார். காந்திஜியின் கருத்துக்கள் சங்பரிவாரின் கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் (ஆர்கனைசர் செப்.23, 1990).
இரண்டு மாதங்கள் கழித்து பா.ஜ.க.வும் இதே முறையில் செயல்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் லால் கிருஷ்ண சர்மா கடிதம் எழுதினார். இராமஜென்ம பூமி பற்றி காந்தியின் கருத்துக்கள் 27.7.37 தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையில் (நவஜீவன் பத்திரிகையில் அல்ல) வெளிவந்ததாகக் குறிப்பிட்டு அக்கட்டுரையி லிருந்து இரண்டு பத்திகளை மேற்கோள் காட்டியிருந்தார். இச்செய்தி 1990ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் வெளி வந்தது. குறிப்பிடப்பட்ட ஹரிஜன் சேவக், இந்தி வார இதழைத் தாமே படித்துப் பார்த்ததாகவும் கிஷன்லால் சர்மா குறிப்பிட்டிருந்தார்.
இச்செய்தி பொய்யானது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையின் புலனாய்வுப் பிரிவு செய்தி வெளியிட்டது. காந்திஜி அப்படிப்பட்ட கட்டுரை எதனையும் எழுதவில்லை. இதுபற்றி சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் வினாக்களை தொடுத்தபோது விஸ்வாஸ் என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த கட்டுரையி லிருந்து இதனைத் தான் தெரிந்து கொண்டதாக அவர் பதில் அளித்தார். பின்னர் வேறுவிதமாகப் பேச ஆரம்பித்தார். தான் கூறிய செய்தி சரியா தவறா என்று ஆய்வு செய்யும் பொறுப்பு பிரதமருடையது என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் செய்தி ஆதாரபூர்வமற்றது என்றால் பிரதமர் மறுப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“கட்டுரை வெளிவந்ததாகச் சொல்லப் படும் ஹரிஜன் சேவக் அல்லது நவஜீவன் பத்திரிகையின் பிரதி ஒன்றை அளிக்குமாறு பா.ஜ.க. மத்திய அலுவலகத்துக்கு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் குறிப்பிட்ட பத்திரிகைகளின் பிரதிகளை அதனால் அளிக்க முடியவில்லை” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை அம்பலப்படுத்தியது (டிசம்பர் 4, 1990).
பாபர் மசூதி பிரச்னையில் சங்பரிவாரின் நிலைக்கு காந்தியின் ஆதரவு இருந்தது என்ற செய்தி பொய்யானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் மீண்டும் ஒருமுறை காந்தியை மேற்கோள் காட்டி பிரதமருக்கு சர்மா கடிதம் எழுதினார். காந்தி பல்வேறு சமயங்களில் எழுதியவை பல நூல் தொகுதிகளாக வெளி யிடப்பட்டிருந்தது. அவற்றில் 26ஆவது தொகுதியின் 65ஆவது பக்கத்தை மேற்கோள் காட்டியிருந்தார். யங் இந்தியா பத்திரிகையின் வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு காந்தி அனுப்பியிருந்த பதிலில், “ஒரு மசூதி முறையான அங்கீகாரம் பெறப்படாமலோ அல்லது வலுக்கட்டாயமான முறையிலோ கட்டப்பட் டிருந்தால் அதனைப் புனிதமானது என்று நான் கருத மாட்டேன்” என்று குறிப்பிட்டதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. 1925ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘யங் இந்தியா’ இதழிலும், 1950ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘சேவக்’ இதழிலும் காந்திஜியின் பதில் பிரசுரிக்கப்பட் டிருந்ததாக சர்மாவின் கடிதம் தெரிவித்தது.
(‘தி ஸ்டேட்ஸ்மேன்’, டிச.6, 1950) இதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்டதைப் பின்னர் விவாதிக்கிறோம். சர்மா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அளித்த உறுதிமொழியை நினைவு கூர்வது நல்லது. “எனது கட்சியோ அல்லது நானோ எந்த மசூதியையும் இடிப்பதை ஆதரிக்கவில்லை. அதனால்தான் பாபர் மசூதிக் கட்டிடத்தை கௌரவமான முறையில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி ஆலோசனை தெரிவித் துள்ளார்” என்று சர்மா பிரதமரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் கடிதம் எழுதிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அத்வானியின் முன்னிலையில் அவரது ஒப்புதலுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
காந்தியின் எழுத்துக்கள் இடம் பெற்ற 90 தொகுதிகளையும் ஆய்வு செய்த அஜய் மற்றும் சகுந்தலா சிங் இருவரும் இப்படிப்பட்ட கடிதம் எதுவும் அத்தொகுதிகளில் இடம் பெறவில்லை என்பதைக் கண்டனர். இது பற்றி சர்மாவோ அல்லது காந்தியின் சீடர்கள் எவராவதோ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் (மெயின் ஸ்ட்ரீம், ஜனவரி 12, 1991). ‘மெயின் ஸ்ட்ரீம்’ பத்திரிகையின் அதே இதழில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியன்று காந்திஜி பேசிய பேச்சை மேற்கோள் காட்டி விஷ்ணுநாகர் என்பவர் எழுதிய கட்டுரையும் வெளி வந்திருந்தது. மசூதிகளைக் கைப்பற்றுவது பற்றியும், அவற்றைக் கோயில்களாக மாற்று வதைப் பற்றியும் குறிப்பிட்ட காந்திஜி, பின்வருமாறு கூறியுள்ளார். “ஒரு மசூதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவது இந்து மதத்திற்கும் சீக்கிய மதத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தும். மசூதிகளுக்குள் வைக்கப்பட்ட கடவுள் சிலைகளை அப்புறப்படுத்துவது இந்துக்களின் கடமையாகும். மசூதிகளுக்குள் சிலைகளை வைப்பதன் மூலம் மசூதிகளின் புனிதத்தைக் கெடுப்பதுடன் சிலைகளையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்” என்று அக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட் டிருந்தது.
சர்மாவின் கூற்றுகள் உண்மை யானவையா என்று ஆய்வு செய்த இரண்டு எழுத்தாளர்களும் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதழ், டிச.9, 1990)யில் வந்த இரண்டு கட்டுரைகளைக் காணத் தவறிவிட்டனர். ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ வெளியிட்ட அந்த இரு கட்டுரைகளும், காந்தியைப் பற்றி சங்பரிவாரங்கள் பரப்பிய தவறான தகவல்களை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருந்தது. ‘நவஜீவன்’ பத்திரிகையில் (ஜூலை 27, 1937) வெளிவந்ததாகக் கூறி, ஒரு கட்டுரையை ஷரத் மேற்கோள் காட்டியிருந்தார். சர்மா அதே தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையில் காந்திஜியின் கட்டுரை வந்ததாகக் கூறியிருந்தார். அந்தத் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ பத்திரிகையே வெளியிடப்படவில்லை என்று கூறிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அந்தத் தேதிக்கு நெருக்கமான நிலையில் ஜூலை 24 மற்றும் ஜூலை 21 தேதியிட்ட இதழ்கள்தான் பிரசுரிக்கப்பட் டிருந்தன என்று நிலைநாட்டியிருந்தனர். ‘நவஜீவன்’ பத்திரிகை இதழ்கள் வெளிவருவது 1932ஆம் ஆண்டிலேயே நின்று போய்விட்டது. எனவே தான் சர்மா தனது நிலையை நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளவாறு மாற்றிக் கொண்டார். அவர் பின்னர் மற்றொரு மேற் கோளையும் காட்டி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
1950ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியிட்ட ‘ஹரிஜன் சேவக்’ இதழில் ‘ஜோடிக்கப்பட்ட கடிதமும் கட்டுரையும்’ என்ற தலைப்பில் ஜீவன்ஜி தேசாய் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையைத்தான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் மறுபிரசுரமாக வெளியிட்டிருந்தது. ‘இராம ஜென்ம பூமி எதிர்ப்பாளர்களின் கருப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் ராம்கோபால் பாண்டே (ஷரத்) புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். ராமஜென்ம பூமி சேவா சமிதி அந்த நூலைப் பிரசுரித்தது. அந்தப் புத்தகத்தில் தாம் 1937ஆம் ஆண்டு மே 15ஆம் தேதியன்று காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதற்கு காந்திஜியின் தனிச் செயலாளரான மகாதேவ் தேசாய் வார்தாவிலிருந்து மே 20ஆம் தேதி பதில் எழுதியதாகவும் அந்த நூலில் குறிப்பிட் டிருந்தார். பாண்டேயின் கடிதம் குறித்து தமது கருத்துக்களை நவஜீவன் இந்தி மொழி இதழிலோ அல்லது ஹரிஜன இதழிலோ காந்திஜி விளக்குவார் என்று மகாதேவ் தேசாய் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் பாண்டே தமது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஜூலை 27 (1937) ‘நவஜீவன்’ இதழில் காந்திஜியின் கட்டுரை வந்ததாகக் கூறி அதனை முழுமையாகத் தமது நூலில் பாண்டே வெளியிட்டிருந்தார்.
மகாதேவ் தேசாயின் கடிதமும், காந்திஜி நவஜீவன் பத்திரிகையில் எழுதியதாக மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களும் போலியானவை என்று ஜீவன்ஜி தேசாய் கருத்துத் தெரிவித்தார். 1937ஆம் ஆண்டில் இந்தி மொழியில் ‘நவஜீவன்’ பத்திரிகை எதுவும் வெளியிடப்படவில்லை. ‘நவஜீவன்’ பத்திரிகை யின் இந்தி பதிப்பாக ‘ஹரிஜன் சேவக்’ தான் வெளியிடப்பட்டு வந்தது. ஹரிஜன் சேவக் மற்றும் ஹரிஜன் (ஆங்கிலம்) பத்திரிகைகள் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் தாம் பரிசீலனை செய்ததாகவும் காந்திஜி எழுதிய தாகக் கூறப்பட்ட கட்டுரை ஜோடிக்கப்பட்டது என்றும் இல்லாத ஒன்று என்ற முடிவுக்கும் தாம் வந்ததாக ஜீவன்ஜி தேசாய் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான மற்ற விவரங்களும் இந்த முடிவை உறுதிப்படுத்தின. 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி வாக்கில் காந்திஜியோ, மகாதேவ் தேசாயோ வார்தாவில் இருக்கவில்லை. அவர்கள் அப்போது குஜராத்தில் இருந்தனர்.
காந்திஜியின் நெருங்கிய கூட்டாளியான கே.ஜி.மஷ்ருவாலா என்பவர் எழுதி 1950 ஆகஸ்டு 19ஆம் தேதியிட்ட ஹரிஜன் மற்றும் ஹரிஜன் சேவக் இதழ்களில் வெளிவந்த கட்டுரை ஒன்றையும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி பிரசுரித் திருந்தது. ‘அயோத்தி முஸ்லிம்கள்’ என்பது அக்கட்டுரையின் தலைப்பு. 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று பாபர் மசூதி கைப்பற்றப்பட்டது குறித்து, அதே காலத்தில் எழுதப்பட்டிருந்த அதிகாரப்பூர்வமான கட்டுரை அது. அட்சய பிரம்மச்சாரி என்பவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மசூதி கைப்பற்றப்பட்ட விதம் குறித்து சங்பரிவார் பரப்பி வரும் பொய்களை அம்பலப்படுத்தும் வகையில் அக்கட்டுரை அமைந்துள்ளது. காந்திஜி எழுதியதாகக் கட்டுரை விவகாரத்தில் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான பொய்களைக் கூறும் அளவுக்கு பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் தரம் தாழ்ந்த வகையில் செயல்பட்டனர் என்பது இக்கட்டுரைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்று வரை அவர்கள் மன்னிப்பு எதனையும் கோரவில்லை.
அவதூறு பிரச்சாரம்
1980ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று பா.ஜ.க. தனது முதல் மாநாட்டை நடத்தியது. அப்போது ‘காந்தியன் சோஷலிசத்’ தில் தனது நம்பிக்கையையும் அது வெளி யிட்டது. ஐந்து குறிக்கோள்களில் காந்தியன் சோஷலிசத்தை அது குறிப்பிட்டிருந்தது. அப்போது மரியாதைக்குரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்குக் கடும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருந்தது. 1985ஆம் ஆண்டு அக்டோபரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு ‘காந்தியன் சோஷலிசம்’ என்ற கொள்கையைக் கைவிட்டது. ஆனால் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு பா.ஜ.க.வின் தேசியக் குழு மீண்டும் அக்கொள்கையை இணைத்துக் கொண்டது. பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததற்கு அடுத்த ஆண்டில் இது நடைபெற்றது.
காந்திஜிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையே ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவை சரி செய்ய இயலாத அளவுக்கு இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி, வன்முறையைப் பயன்படுத்துவது பற்றி, முஸ்லிம்களைப் பற்றி இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் கலப்புக் கலாச்சாரம் பற்றி காந்திஜிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. டெல்லியில் நிலவும் கலாச்சாரம் இந்துக்கள் – முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் சொந்தமானவை. தனித்தனியாக எங்களுக்கு மட்டுமே என்று இரு தரப்பினருமே சொந்தம் கொண்டாட முடியாது என்று 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி காந்திஜி குறிப்பிட் டிருந்தார். (காந்தி நூல் தொகுதி 98:77) கலப்புக் கலாச்சாரம் என்றெல்லாம் பேசுவது அபாயகரமானது என்று 1969ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனசங்கம் கூறியது. 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஆக்ராவில் நடைபெற்ற பா.ஜ.க.வின் மாநாட்டில் கலப்புக் கலாச்சாரத்தைத் தாக்கி அத்வானி பேசினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்ட நேரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக அத்வானி, கிரிஸ்டபல் ஜாஃப்ரலட் என்ற நிருபரிடம் தெரிவித்திருந்தார். 1943ஆம் ஆண்டில் காந்திஜி உண்ணாவிரத மிருந்தபோது வைஸ்ராயின் செயற்குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் (என்.பி.சர்க்கார், எம்.எஸ்.ஆனே, ஹோமிமோடி) ராஜினாமா செய்தனர். இந்து மகாசபையின் ஆதரவாளர்கள் வைஸ்ராயின் கவுன்சிலில் சேர்ந்து கொண்டனர். இந்து மகாசபை ஆதரவாளரான எம்.எஸ்.ஆனே பின்னர் இலங்கைக்கான தூதர் பதவியைப் பெற்றார்.
‘நாங்கள் அல்லது எங்கள் தேசியத்தின் அடையாளம்’ என்ற தலைப்பில் கோல்வால்கர் எழுதிய நூலின் 42ஆவது பக்கத்தில் எடுத்துக் காட்டான மனிதர்கள் பட்டியல் ஒன்றை அவர் தொகுத்திருந்தார். அதில் அவர் காந்தியின் பெயரைச் சேர்க்கவில்லை. ‘சிந்தனைக் கொத்து’ என்ற தமது நூலில் காந்திஜியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கருத்துக்களை கோல்வால்கர் விமர்சனம் செய்திருந்தார். அந்நூலின் பத்தாவது அத்தியாயத்தில் ‘பிராந்திய அடிப்படையிலான தேசியம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளதைக் குறிப்பிட லாம். (பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.சும் கலாச்சார தேசியம் பற்றி அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்)
கம்யூனிஸ்டுகளைத் தாக்கி முடித்த பிறகு கோல்வால்கர் தமது கவனத்தைக் காங்கிரஸ் பக்கம் திருப்பினார். “காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாடு பெரும் இழப்பு களையும், சிறுமைப்படுத்தும் விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிட்டது. கடந்த பல ஆண்டுகளாக நம் நாடு சந்தித்து வரும் சோக நிகழ்ச்சிகளுக்கும் தீமைகளுக்கும், தற்போது நம் நாட்டின் தேசிய வாழ்க்கையே அரிக்கப்படும் நிலை தோன்றியதற்கும், காங்கிரஸ் செயல் பாடுகளே காரணம்” (1968ஆம் ஆண்டு பதிப்புப் பக்கம் 149). “தங்களுடைய மக்களின் ஆண்மையை போக்குவதற்கு உறுதி எடுத்துக் கொண்டது போல செயல்படும் தலைவர்களும் இருக்கிறார்கள்” என்று தமது புத்தகத்தில் (பக்.151) கோல்வால்கர் சர்வசாதாரணமாக எழுதியுள்ளார். ‘தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தலைமை’ அது என்றும் காங்கிரசைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு விடுதலை பெற்ற பிறகு காந்திஜி ஆர்.எஸ்.எஸ்.சுடனும் அதன் தலைவரான கோல்வால்கருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கைகள் பற்றி டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவரான அருணா ஆசப் அலி காந்திஜியிடம் புகார் கூறியிருந்தார். (காந்தி நூல் தொகுதி 76 : 401). 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இடையூறு விளை வித்தனர். ஆர்.எஸ்.எஸ். ஒரு பெரிய அமைப்பு என்று அக்காலத்தில் காந்திஜி கூறியிருந்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் இடையூறு விளைவித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்ல என்று மறுத்து ஆர்.எஸ்.எஸ். காந்திஜிக்குக் கடிதம் எழுதியது.
1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்திஜி கோல்வால்கரை சந்தித்தார். செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். பேரணியில் உரையாற்றும்போது காந்திஜி கோல்வால்கரிடம் தாம் பேசியவைகள் பற்றி குறிப்பிட்டார்.
கல்கத்தாவிலும் டெல்லியிலும் தாம் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். பற்றி தமக்குக் கிடைத்த பல புகார்களை கோல்வால்கரிடம் தெரிவித்ததாக காந்திஜி கூறினார். “தமது சங் பரிவார் உறுப்பினர்கள் அனைவரும் சரியான முறையில் நடந்திருப்பார்கள் என்று தம்மால் உறுதி கூற முடியாது என்றாலும் இந்துக் களுக்கும் இந்து மதத்துக்கும் தூய்மையான முறையில் பணிபுரிவதே ஆர்.எஸ்.எஸ்.சின் இலட்சியம் என்று கோல்வால்கர் தமது பதிலில் குறிப்பிட்டார். அவ்வாறு செய்யும் பணிகளால் மற்றவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதே தங்கள் கொள்கை என்றும் கோல்வால்கர் குறிப்பிட்டார். ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நம்பிக்கை இல்லை. தற்காப்புக் கலையைத்தான் அது கற்றுத் தருகிறது. திருப்பித் தாக்குமாறு அது கற்றுத் தரவில்லை” என்று கோல்வால்கர் கூறி
யிருந்தார்.
அதற்கு முன்னர் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும் போது காந்திஜி பின்வருமாறு பேசியிருந்தார். “அந்த அமைப்பின் கரங்களும் (ஆர்.எஸ்.எஸ்.) இரத்தம் தோய்ந்தவைதான் என்று சிலர் தம்மிடம் கூறியதாகவும் ஆனால் அது உண்மையானதல்ல என்று குருஜி உறுதி யளித்ததாகவும்” காந்திஜி கூறினார். அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். பாடுபடுவதாக கோல்வால்கர் கூறினார். மேலும் தம்மைப் பற்றிய கருத்துக்களைப் பொது மக்களுக்குத் தெரிவிக்குமாறு கோல்வால்கர் காந்திஜியைக் கேட்டுக் கொண்டார் (காந்தி நூல் தொகுதி 89:177)
கோல்வால்கர் கூறிய விளக்கங்கள் காந்திஜிக்குத் திருப்தி அளிக்கவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் பேசும் போது (நவ.15), “எல்லாப் பிரச்னைகளையும் தூண்டிவிடுவது ஆர்.எஸ்.எஸ். தான் என்று நான் கேள்விப்படுகிறேன். கொலைவெறித் தாண்டவங்கள் மூலம் இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது” (காந்தி நூல் தொகுதி 90-43) என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த நாள் (நவ. 16) அவர் பேசும்போது, “முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இந்து மகாசபைக்கு உதவி வருகின்றனர்” என்று குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் நடத்தைப் பற்றிய புகார்கள் காந்திஜியிடம் ராஜ்காட்டிலும் அளிக்கப்பட்டன. அவர்கள் முஸ்லிம்களைத் துன்புறுத்தினார்கள் என்பது உண்மையா? இல்லை என்றால் வேறு யார் அப்படிச் செய்தது?” என்று காந்திஜி கேள்வி எழுப்பினார். (காந்தி நூல் தொகுதி 90:144)
ஜனவரி 13ஆம் தேதி முதல் காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்து சில இயக்கங்கள் முஸ்லிம்கள் தொடர்பாகவும் வாக்குறுதிகளை அளித்திருந்தன. அந்த வேண்டுகோளில் ஆர்.எஸ்.எஸ்.சும் கையெழுத்திட்டிருந்தது. வேண்டுகோளைத் தொடர்ந்து காந்திஜி உண்ணாவிரதத்தை ஜனவரி 18ஆம் தேதி முடித்துக் கொண்டார். (காந்தி நூல் தொகதி 90:444) ஆனாலும் காந்திஜிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “மற்ற இடங்களில் தங்கள் வாக்குறுதிகளை மீறி அவர்கள் நடந்தால் அது ஒரு நம்பிக்கை துரோகமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். “இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகள் இந்த நாட்டில் தற்போது பெரிய அளவில் நடப்பதை நான் கவனித்து வருகிறேன்” காந்திஜி தெளிவான முறையில் பதிவு செய்த இந்தக் கருத்துக்களுடன் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளான ஜவகர்லால் நேரு மற்றும் பியாரிலால் அளித்த சான்றிதழ்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும். 1948ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதியன்று நேரு, சர்தார் படேலுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்.
“கோல்வால்கருடன் முதல் சந்திப்புக்குப் பிறகு காந்திஜி கோல்வால்கரைப் பற்றி கூறும் போது அவரது பேச்சுக்கள் அவர் மீது ஓரளவு நல்ல அபிப்ராயங்களை என்னிடம் ஏற்படுத்தின. ஆனாலும் அவரை நான் நம்பவில்லை” என்று தம்மிடம் தெரிவித்ததாக நேரு தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். “இரண்டாவது, மூன்றாவது சந்திப்புக்களுக்குப் பிறகு கோல்வால்கருக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராகவும் கடுமையான முறையில் காந்திஜி கருத்துத் தெரிவித்தார். “அவர்களின் சொற்களை நம்புவது இயலாத காரியம்” என்றும் காந்திஜி குறிப் பிட்டார். “அவர்கள் பேசும்போது மிகவும் நியாயமாகப் பேசுவது போலத் தோன்றும். ஆனால் அவர்கள் பேசியதற்கு நேர் எதிராக எத்தகைய குற்ற உணர்வும் இன்றிச் செயல் படுவார்கள்” என்றும் காந்திஜி குறிப்பிட்டார் என்று தெரிவித்த நேரு, ‘தமது கருத்தும் அதுதான்’ என்று பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். பற்றி பியாரிலால் (காந்தியின் சரித்திரத்தை எழுதியவர்) விரிவாகவே எழுதியுள்ளார். அவருடைய விமர்சனங்கள் பொருத்தமானவையாகவும் இருந்தன.
ஜான்சனுக்கு பாஸ்வெல் எப்படியோ அதுபோல காந்திஜிக்கு பியாரிலால் தோழராகவும் சீடராகவும் விளங்கினார். டெல்லியில் நடைபெற்ற கொலைகளில் பெரும்பாலானவையிலும் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற கொலைகளிலும் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. (பக்.439) காந்திஜி பேசும்போது அங்கே இருந்த ஒருவர் குறுக்கிட்டு, “ ‘வார்தா’வில் உள்ள அகதிகள் முகாமில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்துள்ளனர். கட்டுப்பாட்டுடனும், துணிவுடனும், கடுமையான முறையிலும் பணியாற்ற முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்” என்று கூறினார். அதற்கு காந்தி பதிலளிக்கும்போது, “இட்லரின் நாஜிக் கட்சி ஊழியர்களும், முசோலினியின் பாசிஸ்ட் அமைப்பு ஊழியர் களும்கூட இதே முறையில் பணிபுரிந்துள்ளனர் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று கூறினார். “சர்வாதிகாரக் கண்ணோட்டமுள்ள ஒரு வகுப்புவாத அமைப்பு” என்று ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்திஜி மதிப்பீடு செய்தார்.
காந்திஜி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு மதன்லாலா பாவா என்பவன் காந்திஜியை நோக்கி எறிந்த குண்டு அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து 20 மீட்டர் தள்ளி வெடித்தது. “பொறுப்பற்ற ஒரு இளைஞனின் சிறுபிள்ளைத் தனமான செயல்” என்று ஒருவர் அதனைப் பற்றி காந்திஜியிடம் கூறினார். காந்திஜி சிரித்துவிட்டு, “முட்டாளே! இதற்கு பின் ஒரு பயங்கரமான விரிவான சதியாலோசனை இருப்பது உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டார். பத்து நாட்களுக்குப் பிறகு சதியாலோசனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மற்றவர்களுடன் இணைந்து நடத்திய சதியாலோசனையின் அடிப்படையில் நாதுராம் கோட்சே காந்திஜியைப் படுகொலை செய்தான். அதுபற்றி பின்னர் வெளிவந்த விவரங்களை பியாரிலால் பதிவு செய்துள்ளார். அவை இன்றும் பொருத்தமானவையாக இருக்கின்றன. அவர் பதிவு செய்தது முழுமையாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“காந்திஜியின் கொலைக்குப் பிறகு சர்தார் படேலுக்கு ஒரு இளைஞனிடமிருந்து கடிதம் வந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பற்றி சரியாகத் தெரியாமல் ஏமாந்து போய் அதில் தான் சேர்ந்ததாக அந்த இளைஞன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். பின்னர் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் தனக்குப் பிடிக்காமல் போனதாகவும் அவன் தெரிவித் திருந்தான். காந்திஜி கொலை செய்யப்பட்ட வெள்ளிக்கிழமையன்று வானொலிப் பெட்டியின் அருகிலேயே இருக்குமாறும் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தனர் என்றும் அந்த இளைஞன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். காந்திஜி படுகொலை பற்றிய செய்தி வெளிவந்தவுடன் டெல்லி உள்பட பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் இனிப்புகள் விநியோகிக்கப் பட்டன. ஒரு மாநில அரசின் போலீஸ் அதிகாரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்களை துக்கத்தின் அடையாளமாகத் தங்கள் அலுவலகங்களை பதிமூன்று நாட்கள் மூடிவிட்டுக் கலைந்து விடுமாறு கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கலைத்துவிட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். அரசாங்க உத்தரவின்படி ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது இந்த விஷயத்தை ஒருவர் கடிதம் மூலம் சர்தார் படேலுக்குத் தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு மோசமாகவும், விரிவாகவும் நாட்டின் நிலைமை நாசமடைந்திருந்தது. உயர்ந்தபட்சத் தியாகத்தின் மூலம்தான் இப்போக்கைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அகற்றவோ முடியும்.”
அதே மோசமான சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. தங்களிடம் இருந்து வீசும் துர்நாற்றத்தைக் குறைத்துக் கொள்ள காந்தியின் பெயர் என்கிற நறுமண நீரை தங்கள் மீது அவர்கள் தெளித்துக் கொள்கின்றனர். எந்த மனிதனை எதிர்த்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அவதூறுப் பிரச்சாரத்தை நடத்தினார்களோ அந்த மனிதனின் பெயரை பயன்படுத்தித் தங்களின் கறைகளை எப்படியாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் சங் பரிவார் கூட்டத்தினர் முயற்சித்து வருகின்றனர்.
நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்