உண்மையின் மீது விழுந்த வெளிச்சம்

நடைமுறையில் இருக்கும் தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்ட படமாக வெளியாகி அனைவரின் பாராட்டுதல்களையும்  வெற்றியையும் பெற்றுள்ளது கோபி நயினார் இயக்கியுள்ள ‘அறம்’ திரைப்படம்.

தமிழ்நாட்டின் வறண்ட நில அமைப்பில் போர்வெல்  தவிர்க்க முடியாதது .அதில் நீர் கிடைக்காத நிலை ஏற்படும்போது அதன் உரிமையாளர் அந்த ஏமாற்றத்தில் -பொருள் இழப்பில் அதை மூடாமல் போய் விடுவது இங்குள்ள வினோதமான உளவியல் ஆகும். சரியான  வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என்பது மற்றுமொரு காரணம்.போர்வெல் போட்டவரின் குழந்தையே அதற்குள் விழுந்த சம்பவம் கூட இங்கு உண்டு ..

அப்படி மூடாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்க முயலும் மக்கள் உணர்வுகளும்  அரசு இயந்திரமும் எப்படி இயங்குகின்றன என்பதே ‘அறம் ‘படத்தின் கதைக்களம். இந்த மையக் கதையினூடாக  உழைக்கும் மக்கள் வாழ்க்கையையும் அவர்களது கனவுகளையும் ஏமாற்றங்களையும் இப்படம் பதிவு செய்துள்ளது. போர்வெல்லுக்குள் விழுந்த சிறுமியைச் சுற்றி யதார்த்தமான காட்சிகளைக் கொண்டு பார்ப்பவரை படம் கட்டிப்போடுகிறது..

விபத்து நேரிடும்போது தலையாரி என்ன செய்வார்? தாசில்தார் என்ன செய்வார்? நமது “புராதன காலத்து” தீயணைப்பு துறை எப்படி செயல்படும் ? மக்கள் உணர்வுகள் பொங்கும்போது செயற்கையாக கலவரத்தை ஏற்படுத்தும் காவல்துறை என எல்லாவற்றையும்  நேர்த்தியாக இயக்குனர் சொல்லியுள்ளார். மக்கள் மீது அக்கறை உள்ள ஆட்சிப் பணியாளர் அர்ப்பணிப்போடு பணியாற்ற முற்படும்போது   அரசியல்வாதிகள் தரும்  நெருக்கடி களையும் படம் அம்பலப் படுத்துகிறது .வல்லரசு என்னும் போலிக்கனவில் இருக்கும் ஒரு நாடு தன் மக்களைக் காப்பாற்ற வெறும் கயிற்றை மட்டும் வைத்திருப்பதை படம் தோல் உரித்துக் காட்டுகிறது.

படத்தின் நிலக்காட்சி – சொல்முறை – பாத்திர அமைப்பு – வசனங்கள் ஆகியவற்றில் இயக்குனர் கோபியின் சுயேட்சையான படைப்பூக்கம் அபாரமாக வெளிப்பட்டுள்ளது என்றாலும் தடுப்பு ஊசி பற்றிய பூடகக் காட்சிகள் விவாதத்திற்கு உரியது.முற்றிலும் சுகாதாரத்தில் மேம்பட்ட சமூக அமைப்பு உருவாகும் போதுதான் தடுப்பூசி பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கவே  இயலும்.

பெயிண்டராக இருக்கும் புலேந்திரன் பாத்திரம் தன்னை கபடி வீரனாக ஆகவிடாத ‘சிஸ்டம் தன் மகன் மீனைப்போன்ற நீச்சல் திறமை உள்ளவனாக இருந்தும் நீச்சல் வீரனாக உன்னால் ஆகமுடியாது ஒழுங்காகப் படி’ என்று சொல்லும் யதார்த்தம் சமூக நீதி  உணர்வு கொண்டவர்கள் நெஞ்சில் சுமை ஏற்றுகிறது. உழைக்கும் மக்களிடத்தில் உள்ள அன்பு -ஒற்றுமை உணர்வு-தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயலும் துணிவு என்று எண்ணற்ற சிறந்த காட்சிகள் மூலம் படம்  முழுமையான மக்கள் சினிமாவாக மலர்ந்துள்ளது .

ஆட்சியராக சிறப்பாக நடித்து படத்தை தயாரித்துள்ள நயன்தாரா, சிறுமியின் பெற்றோராக நடித்த ராமச்சந்திரன், சனு லட்சுமி, மற்ற துணை பாத்திரங்களில் நடித்தோர் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள், கலவரத்தை ஏற்படுத்த கவசம் அணிந்த போலிசின் தலை நீளும் காட்சியில் படத்தொகுப்பாளர் ரூபன் கவனிக்க வைக்கிறார். பாடலாசிரியர் உமாதேவி இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக இயக்குனர் கோபி நயினாருடன் இணைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள்.

பாலஸ்தீன  சுயாதீன சினிமா என்ற ஓன்று உருவாகி பாலஸ்த்தீனம் ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப் படாத நிலையிலும்  உலகப் பட விழாக்களில் கலந்து கொண்டு அம்மக்களின் வலியை – வாழ்வை உலகுக்கு எடுத்து சொல்கிறது. அதற்காக உயிர் துறந்த கலைஞர்கள்கூட அங்கு உண்டாம். தமிழில் அது கனவு நிலை என்றாலும் ‘அறம் ‘போன்ற படங்கள் மேலும் நல்ல படங்களும் கலைஞர்களும்  உருவாக உறுதுணையாக இருக்கும் என்ற வகையில் மேலும் போற்றத்தக்கது ஆதரிக்க வேண்டியது.

– வே. இராமசாமி

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...