வாசகர் கடிதம்
கவிஞர் வைரமுத்து “Indian Movement some aspects of dissent, protest & reform” என்ற அரிய ஆய்வு நூலில் இருந்து, ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகளை வைத்து, அவருக்கு எதிராக பல அருவருக்கத்தக்க செயல்களை சங் பரிவார் அமைப்புகள் செய்தன. தமிழ்நாட்டின் கருத்துரிமை மரபுக்கு சவால் விடும் விதமாக எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசினார். இதற்கு எதிர்வினையாக, சென்னை மாவட்ட திவிக, ஆண்டாளை பற்றிய கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கத்தில், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் சென்னை மாவட்ட செயலாளரும், சீரிய சிந்தனையாளருமான தோழர் வாலாஜா வல்லவன், ஆண்டாளை குறித்து பேசினர். அவர் பேசியவை கட்டுரையாக “நிமிர்வோம்” இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தேவரடியார் மரபு எப்போது உருவானது? அதில் சோழர் ஆட்சியின் பங்கு என்ன? உடன்கட்டை ஏறுதல் தமிழ்நாட்டில் இருந்ததா? நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் என்ன சொல்லியிருக்கிறார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பல அரிய வரலாற்று கருத்துகள் கட்டுரையில் இடம்பெற்றிருந்தன…
நீதி நூல்களையும் புராண இதிகாசங்களையும் ஒப்பிட்டு, பெரியார், விடுதலையில் 1956இல் எழுதிய சில கருத்துகள் பிப்ரவரி 2018ஆம் மாத இதழில் காணக் கிடைத்தன . பெரியாரின் இலக்கியப்பார்வை எவ்வளவு தனித்துவமானது என்பதை அவருடைய கருத்துகளின் வாயிலாக அறியமுடிகிறது.
கலைஞர் கட்டிய தமிழ்நாடு சட்டசபை கட்டிடத்துக்கு “ஓமந்தூரார் மாளிகை” என்று பெயரிட்டதற்கு, தமிழ்தேசியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு தமிழனின் பெயரை கூட மாளிகைக்கு வைக்கமுடியாத அளவுக்கு திராவிட அரசியல், நம்மை அடிமைப்படுத்துவதாக பிரச்சாரம் செய்தனர். ஓமந்தூராரைப்பற்றி பெரிதாக எந்த தகவலுமே எனக்கு தெரியாத காரணத்தினால் நானும், “அவர் என்ன செய்துவிட்டார் என்று அவர் பெயரை வைத்திருக்கிறார்கள்? அண்ணா, காமராஜர் ஆகியோரது பெயர்களை வைத்திருக்கலாமே?! என்றே நினைத்திருந்தேன். ஆனால், நிமிர்வோம் இதழில் ஓமந்தூராரைப்பற்றிய கட்டுரையை படித்தபின், இப்படிப்பட்ட ஒரு நேர்மையான மனிதரை பற்றி இத்தனை நாளாக தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது; மாளிகைக்கு அவர் பெயரை வைத்தது மிகவும் பொருத்தமானது என்றும் உணரச்செய்தது.
ஏவுகணை, செயற்கை அணுக்கள், ஸ்டெம் அணுக்கள் என்று, அசுரவேகத்தில் அறிவியல் வளர்ந்து வரும் வேளையில், இன்னமும் பரிணாம வளர்ச்சி அறிவியலைக் கூட உணர முடியாத மனிதர்கள் இருப்பது வேதனைக்குரியது. அதுவும், அமைச்சராக இருப்பவரே டார்வின் கோட்பாட்டுக்கு எதிராக பேசியிருப்பது ஆச்சரியத்தை அளித்தது. இதற்கு சரியான எதிர்வினையாக மறுப்பு கட்டுரை இருந்தது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படை கருத்துகள், கட்டுரையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன; சிந்திக்கத் தூண்டின.
இந்து ஆலய மீட்பு இயக்கம் என்ற பெயரில், எச். ராஜா போன்ற ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்கள், மீண்டும் கோவில்களை பார்ப்பனர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த வேளையில், தோழர் விடுதலை அரசு இந்து அறநிலையத்துறையைப் பற்றி எழுதிய கட்டுரை, பல வரலாற்று தகவல்களை எடுத்தியம்பியது. இந்து ஆலய மீட்பு இயக்கத்தின் நயவஞ்சகமான நோக்கத்தை புரிந்துகொள்ளவும் பயனுள்ளதாக இருந்தது. கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி கட்டுரை ஆற்றியபோது, சில அரிய நூல்களை மேற்கோள் காட்டினார். இப்படிப்பட்ட அரிய நூல்களை தேடுவது எப்படி? எங்கெல்லாம் கிடைக்கும்? என்பன போன்ற தகவல்களை, புத்தக தேடல், வாசிப்பு பற்றிய கட்டுரையாக நிமிர்வோம் இதழில் வெளியிட்டால் , வாசிப்பு உலகில் பல ஆய்வுகளை மேற்கொள்ள நினைக்கும் இளம்தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றேன். “நிமிர்வோம்” இதழ் சிறக்க வாழ்த்துக்கள்.
எட்வின் பிரபாகரன், மடிப்பாக்கம், சென்னை.
நிமிர்வோம் மார்ச் 2018 இதழ்