எச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா? – -நா.முத்துநிலவன்

தலையை எடுத்த தறுதலையே!

தாழ்ந்து கிடந்த தலைமுறை

தலையெ டுக்கச் செய்தவரின்

தலையை எடுப்ப தாரடா?!

சிலையை உடைத்து போட்டுவிட்டால்

சிந்தை உடைந்து போகுமோ?!

அலையை உடைக்கப் பார்க்கிறாய்

அறிவில் லாத மூடனே!

எச்சிலையே! எச் சிலையை

நீஉடைத்தாய் தெரியுமா?

இச்சகத்துள் ளோரெலாம்

எதிர்த்து நின்ற போதிலும்

அச்ச மில்லை என்றெதிர்த்த

அவரை உடைக்க முடியுமா?

எச்சில் துப்பும் நாய்களால்

இமயச் சிகரம் சரியுமா?

எந்தத் தலையை நீஉடைத்தாய்

எண்ணிப் பார்க்கத் தெரியுமா?

அந்தத் தலையின் சிந்தனையின்

ஆழம் உனக்குப் புரியுமா?

நொந்து கிடந்த மக்களுக்கு

சொந்த வரலாற்றினை

முந்தித் தந்து மான உணர்வை

மூட்டிச் சென்ற நெருப்படா!

உரிமை உடமை பொதுமையாக

உழைத்த பெரியார் அவர்!

வறுமை யாக அடிமையாக

வருணமாகி வீழ்ந்தவரை

உரிமைப் போரில் வந்து சேர

உணர வைத்த பெருமைக்கு

உரியார், அவர் தான்பெரியார்!

உணர் வறியா மூடனே!

மாறி மாறி வேட மிட்டும்

மறத்தமிழர் நாட்டினை

வாரிச் சுருட்ட வழிகளின்றி

வத்தி வைக்கத் திரிகிறாய்!

சீறிப் பாயும் சிங்கத்தையே

சீண்டிப் பார்க்கும் நரிகளே!

காறி உமிழ்ந்து விரட்டி யடிக்கும்

காலம் வெகு தூரமில்லை!

 

நா.முத்துநிலவன்

 

நிமிர்வோம் மார்ச் 2018 இதழ்

You may also like...