நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்… மனுஷ்யபுத்திரன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
எப்போதும் நிபந்தனையற்று
விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம்
மௌனமாக இருக்க
நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
என் தேசபக்தியை நிரூபிக்க
எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து
காட்டி வந்திருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால்
முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன்
ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே
இருக்க விரும்புகிறேன்
என் நெஞ்சில் நீங்கள்
கடைசியாகப் பாய்ச்சப்போகும்
ஈட்டியின் கூர்மையை
நான் காண விரும்புகிறேன்
உங்களை முகம் சுழிக்க வைக்கும்
அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு
ஒரு இஸ்லாமிய கதகதப்போடு
உங்களை அணைத்து
முகமன்கூற விரும்புகிறேன்
மேலும் ஒரு இஸ்லாமியனாக இருப்பது
தனியனாக இருப்பதல்ல
அது
ஒரு கூட்டு மனம்
ஒரு கூட்டுக் காயம்
ஒரு கூட்டுத்தண்டனை
ஒரு கூட்டுத் தனிமை
அதை இன்றுதான் அறிந்து கொண்டேன்.
நிமிர்வோம் நவம்பர் 2019 மாத இதழ்