சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா
‘அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு களஞ்சியம்’நூலிலிருந்து
“அண்மையில் எங்கோ ஓர் இடத்தில் பாரத பிரசங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேடம் போடுபவன் துரியோதனனைக் கொல்வதற்காகப் படுகளம் நடந்தது. அன்று ஆறு அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால் செய்யப் பட்டிருந்தது. இதனை பீமவேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனைச் சுதேசமித்திரன் பத்திரிகை படம் பிடித்து பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட கேவலமான பழக்கங் களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும், பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதன் மூலம் அறிவுப் பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிற தென்று குறிப்பிடுகிறோம்.
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நாம் பெரிதும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன்.
இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக் கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப்பட்ட திருமணங் களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம், பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.
அந்தக் காலத்தில் ஊசிமுனையில் நின்றும், ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரதவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.
மக்கள் வாழ வேண்டும். உலகம் உருப்பட வேண்டும். வறுமை ஒழிய வேண்டும். உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது, எந்தப் பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளிடம் வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.
எல்லோரும் தங்கள் சுயநலத்தைத் தானே பெரிதாகக் கருதியிருக்கிறார்கள். எனக்கு இந்திர பதவியைக் கொடு என்றொரு முனிவர் கேட்பார். எனக்குக் காமதேனு வேண்டும், கற்பக விருட்சம் தேவை என்று மற்றொரு தவசி கேட்டிருக்கிறார். மேனகை, இரம்பை, திலோர்த்தமை, ஊர்வசி போன்ற தேவலோகத்து நடனமாதர்களின் சுகத்தை அனுபவிக்க சொர்க்க வாசம் தேவை என்று ஒரு நாயன்மார் கேட்பார்.
வைகுந்த பதவியும், சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடிய பாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றதுதானே. இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்கத்தான் எதையாவது கேட்பார்களே தவிர நமக்காக ஒன்றும் பேச மாட்டார்கள், கேட்க மாட்டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள் அழைக்கவில்லை; அழைப்பதும் இல்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்படாத பாடப்படாத எந்தப் பாடலையும் பாடுவதில்லை; பாடவும் விடுவதில்லை.
நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படும், அக்கறைக் காட்டும் நண்பர்களைத்தான் நாம் அழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களால் தானே நாம் முன்னேற வழிவகைகளைக் காட்ட முடியும், கூற முடியும்!
ஆகவே தேவாரம் பாடவில்லை, திருவாசகம் படிக்கவில்லை, அய்யரைக் கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என்பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
கடைசியாக சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை. அக்கினி வளர்க்கவில்லை. ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறைபடுவதற்கும் அர்த்தம் இல்லையென்று சொல்லி விடுகிறேன்.
திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே? அந்த அக்கினி பகவான் யோக்கியதை என்ன? அருந்ததி என்று ஒரு சினிமாக்கூட வந்ததே, அதைப் பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப் போவது.
ஒரு காலத்தில் சப்தரிசிகள் ஒரு யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் வாங்கிச் சென்ற அக்னிபகவான் அந்த ஏழு இரிஷிபத்தினிகளின் மீதும் காமமுற்றானாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடமே கூறினார். இந்தக் காலத்தில் எப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதனும்கூட கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின் மீது ஆசை வைத்திருப்பதாகக் கூற மாட்டான்.
ஆனால், ஆண்டவனான அக்னி தன் மனைவியிடம், தான் இரிஷிபத்தினியிடம் காமுற்று இருப்பதைக் கூறிய உடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படி கேட்டானாம். அவன் மனைவியும் சப்த இரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியரைப் போலவே உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தடுத்தாளம். ஆனால், ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப்போல மட்டும் உருவம் எடுக்க முடியவில்லை என்றும், அதற்குக் காரணம் அருந்ததி ஆதி திராவிடப் பெண்மணி என்றும் புராணம் கூறுகிறது.
பிறர் மனைவியை காமுறும் தீயகுணம் படைத்த அக்னியையா நம்முடைய திருமணக் காலங்களிலே சாட்சிக்கு அழைப்பது? கூடாது கூடவே கூடாது.
நிமிர்வோம் பிப் 2018 இதழ்