”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’
”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”
‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’
திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி 12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது.
பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத்தின் மகளிர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். பேரணியை கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.பேரணியை கழகத்தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
பேரணி முன் வரிசையில் பறைமுழக்கமும்,கழக மகளிரின் நடனத்துடன் சென்றது.குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,போராளிகளின் படங்களை தாங்கிப்பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் பேரணி நடந்தது.சாலையின் இருபுறமும் மக்கள் நடைபெற்ற பேரணியை உன்னிப்பாக கவனித்தனர்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் சிலை,அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.அப்போது அங்கு பெருந்திரளாய் கூடியிருந்த கழகத் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டார்கள். அதனை தொடர்ந்து நடந்த பேரணி மாநாடு நடைபெற்ற இராயபுரம் பகுதியை வந்தடைந்தது.