பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

கழகம் கருப்புக் கொடி; தோழர்கள் கைதுசேலம் பெரியார் பல்கலைக்கழகம், பா.ஜ.க.வின் மதவாத யாத்திரைக்கு அனுமதித்து, மாணவர்களைப் பயன்படுத்தியதற்கு கழகத் தோழர்கள் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150ஆவது பிறந்தநாள் ரத யாத்திரையை பெரியார் பல்கலைக் கழகம் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, திராவிடர் விடுதலைக் கழம் எதிர்ப்பு தெரிவித்து 10-02-2018 மாலை 3 மணிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட் டத்தில் ஈடுபட்ட  42 தோழர்கள் கைதானார்கள்.

சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150 வது பிறந்து நாள் விழா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிவேதிதை 150 வது ரத யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றி எதிர் வரும் 22-ம் தேதி ரத யாத்திரை முடிவடைகிறது. பா.ஜ.க. பின்னணியோடு இது நடக்கிறது.

இந்த நிலையில் பிப்.10 காலை சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்த ரதமானது, சேலம் மாநகரில் உள்ள சாரதா கல்லூரிக்கு வந்தது. அங்கு  நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரதயாத்திரை மாநில ஒருங்கிணைப் பாளரும், பா.ஜ.க நிர்வாகியுமான வானதி சீனிவாசன் பங்கேற்று உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ரதமானது சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்தது. பெரியார் பல்கலைக் கழக மாணவர்கள் ரத யாத்திரையில் பங்கேற்கப் பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப் பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் பல்கலைக் கழகத்தில் மதவாதத்தைப் பரப்பக் கூடாது என கண்டனம் தெரிவித்தும், திராவிடர் விடுதலை கழகத் தோழர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரத யாத்திரை பெரியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழையும் போது, திராவிடர் விடுதலைக் கழகத்தினர்  கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 42 பேரும் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்துக்கு சேலம் டேவிட் (மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை தாங்கினார். மேட்டூர் கோவிந்தராஜ் (கிழக்கு மாவட்ட செயலாளர்), சக்திவேல் (மேற்கு மாவட்டத் தலைவர்), நங்கவள்ளி கிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர்) உள்ளிட்ட 42 தோழர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே பெரியார் பல்கலையில் பயின்று வரும் மாணவி வளர்மதி கூறும்போது, கட்டாயப்படுத்தி மாணவர்களை வரவழைத்து, இந்துத்துவா கொள்கைகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என்றார். ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய மாணவி வளர்மதியையும் காவல் துறை கைது செய்தது.

பெரியார் முழக்கம் 15022018 இதழ்

You may also like...