மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள்ப் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: (4.1.2018 இதழ் தொடர்ச்சி)

“கரூர் மாவட்டம் வாங்கலில் 14.12.2016 அன்று மாலை ‘புதிய மணல்குவாரி அமைக்கக் கூடாது, ஏன்?’ என்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்து, வாங்கலில் இருந்து கரூர் நோக்கி 3 குழந்தைகள் உள்பட 6 பேருடன் வந்து கொண்டு இருக்கும்போது எங்கள் காருக்கு முன்புறம் ஒரு மணல் லாரியை செல்ல வைத்தும், எங்கள் காரை சுற்றி 6 பைக்குகளில் வந்த 12 பேர் பைப்பை கீழே போட்டு காரை சுற்றி வளைத்து நிறுத்தி, காரினுள் இருந்த என்னை கார் கதவை உடைத்து வெளியே இருந்து இழுத்து அடித்தும், என் குரல்வளையை நசுக்கியும், என்னுடன் இருந்தவர்களையும் தாக்கினர். காரில் இருந்த குழந்தைகளின் அலறலால் ஊர் மக்கள் கூடவே என்னை விட்டுவிட்டு தப்பி ஓடினர். சம்பவம் நடைபெற்ற உடனேயே கரூர் மாவட்ட நிர்வாக செயல்துறை நடுவரும், கரூர் மாவட்ட ஆட்சித் தலை வருமான கு. கோவிந்தராஜ், இ.ஆ.ப. அவர்களிடம் நேரில் சென்று மனு கொடுத்தேன். சட்ட விரோத மணல் கொள்ளையர்களின் தூண்டுதலில் அவர் களின் அடியாட்களால் என்னை கொலை செய்ய முயன்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாங்கல் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

26.10.2016 அன்று கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து எங்களது செயல்பாட்டால் சட்டவிரோத மணல் அள்ளுவது நெருக்கடிக்கு உள்ளாகி வந்ததால், சட்ட விரோத மணல்குவாரியை அரவக்குறிச்சி டி.எஸ்.பி. கலைச் செல்வன், வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் செட்ரிக் மேனுவல் ஆகியோருடன் பார்வையிடச் சென்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய பொதுவுடமைக் கட்சி (சி.பி.ஐ.), தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோருடன் நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி ஆற்றில் மணல் அள்ளிய இடம் வரை சென்றபோது சட்டவிரோத மணல் கொள்ளையர்களில் ஈடுபட்டவர்களின் அடியாட்கள் எங்களை கற்களை வீசித் தாக்கினர். காவல்துறையினரின் காவலோடு நாங்கள் இருந்த இடத்தை நோக்கி திரும்பியபோது ‘முகிலனைக் கொல்லுங்கடா’ என்று என்னை நோக்கி சரமாரியாகக் கற்களை எறிந்தனர். என்னை பாதுகாக்க என்னை நோக்கி வந்த கல்லைத் தமிழ்கவி என்பவர் பாய்ந்துச் சென்று தடுக்க அவரது உடல் கடுமையாகப் பாதிப்படைந்தது. இதுவும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

கடந்த இரு மாதங்களாக தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் நடைபெற்று வரும் சட்டவிரோத நிலத்தடி நீர் கொள்ளையை எதிர்த்துப் போராடும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வசிக்கும் அமைப்பாக இருந்து செயல்பட்டு வரு கிறோம். கடந்த 13.8.2017 ஞாயிறு அன்று சட்ட விரோதமாக நிலத்தடி நீரைக் கொள்ளையடித்து செல்லும் 30க்கும் மேற்பட்ட லாரிகளைத் தூத்துக்குடியில் மறித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து கைதானோம். 21.8.2017 அன்று சட்டவிரோத நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுக்காத தினசரி 10 கோடி லிட்டர் தண்ணீர் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட் னஉற ஆலைகளுக்கு எடுப்பதைத் தடுத்து நிறுத்தாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகையிட்டு தூத்துக்குடியில் கைதானோம். 15.9.2017 வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு அரசு ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) வீரப்பனையும், தூத்துக்குடி சார் ஆட்சியாளரையும் நேரில் சந்தித்து நிலத்தடி நீர் கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக் குறித்துப் பேசி வந்தேன். இதனால் சட்ட விரோதமான நிலத்தடி நீரை எடுத்து பலனடை யும் பலமும் என்மீது கோபத்துடன் உள்ளனர்.

18.9.2017 திங்கள் அன்று நிலத்தடி நீர் கொள்ளையை தடுத்து நிறுத்தாததால் ஆடு, மாடுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை அறிவித்து இருந்தோம். ஸ்ரீவை குண்டத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்த எங்களை போராட்டக் குழுவினர் வரவேற்று அழைத்துச் செல்லும்போது ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து என்னையும், அணுசக்தி எதிரான மக்கள் இயக்கம் சுப. உதயகுமார், எஸ்.டி.பி.அய். கட்சி தமிழகத் தலைவர் தெஹலான் பாகவி உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் ஏ.எல். திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். 18.9.2017 திங்கள் மாலை 18.15 (6.15) மணிக்கு எங்கள் அனைவரையும் விடுதலை செய்தனர்.

அங்கிருந்தவர்களுடன் பேசிவிட்டு ஸ்ரீவை குண்டத்தில் இருந்து இரவு 19.00 (7.00) மணிக்கு விடைபெற்றுக் கொண்டு எனது நண்பர் உடன்குடி குணசீலன் வேலன் அவர்களுடன் இருச் சக்கர வாகனத்தில் ஆழ்வார் திருநகரி  நோக்கிப் புறப்பட் டேன். ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் தென்பகுதியில் கரையில் சிமெண்ட் தடுப்புச் சுவர் முடிந்த பகுதியில் எனது நண்பர் குணசீலன் வேலன் அவசர தேவைக்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்து அவருடன் கீழே இறங்கி நின்றிருந்த என் அருகே திடீரென ஒரு ஜீப் போன்ற நான்கு சக்கர வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து ஒரு பெண் உள்பட நால்வர் சிவில் உடையில் இறங்கி ஆறு பேரும் சேர்ந்து என்னை நிமிர விடாமல் தரதர என இழுத்தனர். என்னைச் சுற்றி வளைத்துப் பிடித்து தூக்கி நான்கு சக்கர வண்டியில் ஏற்றினர். காப்பாற்றுங்கள் என சத்தமிட்டும் கடுமையாக எதிர்த்துப் போராடினேன். எனது காலின் சில இடங்களில் அவர்களால் மிதிக்கப்பட்டு காயம் ஏற்பட்டது. என்னைக் காப்பாற்ற முயற்சித்த எனது நண்பர் குணசீலன் வேலனை தள்ளிவிட்டே என்னை வண்டியில் ஏற்றினர்.

என்னைப் பிடித்து தூக்கிச் சென்றவர்கள் வாகனத்தை தென்திருப்போரை வழியாக தூத்துக்குடி செல்லாமல் வழி தவறி காயாமொழியை நோக்கி ஓட்டிச் சென்றுவிட்டனர். காயா மொழியில் இருந்து மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, திசையன்விளை வழியாக என்னை கூடன்குளம் காவல்நிலையம் கொண்டு வந்தனர். கூடன்குளம் காவல்நிலையம் என்னைக் கொண்டு வந்த பிறகே, வெள்ளை வேன் கடத்தல் போல் என்னை சிவில் உடையில் தூக்கி கடத்தி வந்தவர்கள் காவல்துறையினர் என அறிய முடிந்தது.

நான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, சட்டவிரோதமாகச்  செயல்படும் பல்வேறு தொழிற் சாலைகளுக்கு, பல்வேறு கனிமக் கொள்ளைக்கு, நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து செயல் படும் ஸ்டெர்லைட், தாரங்கதாரா (டி.சி.டபுள்யூ), ஆலைகளுக்கு எதிராகவும், உடன்குடி பகுதி சுற்றுச் சூழலினை அழித்து வந்த பி.எஸ்.வி. மீன் அரவை ஆலையை எதிர்த்தும் போராடி வருபவன். ஸ்ரீவை குண்டம் அணைப் பகுதியில் தூர்வாருகிறோம் என ஆற்று மணல் கொள்ளையடிப்போரை எதிர்த்து விடுதலைப் போராட்ட வீரரும், பொது வுடமை இயக்க தலைவருமான அய்யா நல்லக் கண்ணுவுடன் இணைந்து செயல்பட்டு வருபவன். படுக்கப்பத்து பகுதியில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளிய லாரிகளை திருச்செந்தூர் கோட்டாட்சியர் பிடித்து சான்றுடனும் காவல்துறை யிடம், வட்டாட்சி யரிடமும் ஒப்படைத்தும் வழக்குப் போடாமல் வைத்திருந்ததைக் கண்டித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்து வழக்குப் போட வைத்தவன்.

தாமிரபரணிஆற்றில் பெப்சி, கோக் ஆலை களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை எதிர்த்து பல்வேறு ஆவணங்களைத் திரட்டியும், அதை எதிர்த்துப் போராடும் அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருபவன். நாங்குநேரி பகுதியில் சட்ட விரோதமாக அனுமதி கொடுக்கப்பட்ட கிரானைட் குவாரியை வெளியே எதிர்த்துப் போராடி வருபவன். நெல்லை மாவட்டத்தில் கிரானைட் குவாரியை  எதிர்த்துப் போராடி வருபவன். நெல்லை மாவட்டத்தில் மிகப் பெரிய தொழிற்சாலையாக உள்ள ‘தி இந்தியா சிமெண்ட்’ ஆலை முறைகேடான முறையில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அரியலூர் பெரிய திருகோணம் பகுதியில் அமைய இருப்பதை மக்களைத் திரட்டி எதிர்த்து வருபவன். உடன்குடி மணிநகர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. ஆய்வுப் பணியை மக்களைத் திரட்டி தடுத்து நிறுத்த துணை நின்றவன்.

இப்படி பல்வேறு மக்களைப் பாதிக்கும் ஆலைகளை எதிர்த்துப் போராடுவதால் எனது உயிருக்கு தினமும் பலரால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

என்னைத் தூக்கி கடத்தி வந்தவர்கள் சில மணி நேரத்தில் கூடன்குளம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு வந்த பிறகுதான் தெரிந்தது என்னை தூக்கி கடத்தி வந்தவர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் என்று. கூடன்குளத்தில் வைத்துத்தான் வள்ளியூர் வாரண்டுக்காக என்னைத் தூக்கி வந்ததாகத் தெரிவித்தார்கள். ஆனால் கூடன்குளம் காவல்நிலை யத்திலும் கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்ட போதும் ‘நீதியரசர் டி..கே.பாசுவின், கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல் உத்தரவைப்’ பின்பற்றவில்லை.

என்னிடம் எந்த கையெழுத்தும் வாங்காமல் சுமார் இரவு 10 மணியளவில் என்னை கூடன்குளம் உதவி காவல் ஆய்வவாளர் உள்பட 5 பேர் அரசு காவல் வாகனத்தில் அல்லாமல் ஒரு தனியார் காரில் ஏற்றிச் சென்றனர். முதலில் கூடன்குளம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் என்னை அமர வைத்துவிட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் எங்கேயோ புறப்பட்டு சென்று வந்தார்.

இரவு சுமார் 11 மணியளவில் தனியார் காரில் என்னை அழைத்துக் கொண்டு புறப்பட்டு நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வள்ளியூர் நீதிமன்றம் வந்தனர். அங்கு 4 காவல்துறை வாகனத்தில் காவல்துறையினர் காத்திருந்தனர்.

வள்ளியூர் நீதிபதியிடம் நான், “காவல்துறையினர் என்னைப் பிடித்து இழுத்து தூக்கி சட்டவிரோதமாக கடத்திக்கொண்டு வரப்பட்டதையும், நீதியரசர் டி.கே.பாசு அவர்கள் கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல் உத்தரவை எதையும் பின்பற்றவில்லை” எனவும் தெரிவித்திருந்தேன். வள்ளியூர் நீதிபதி, நான் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டார். பதிவு ஏதும் செய்யவில்லை. பிறகு கூடன்குளம் உதவி ஆய்வாளரைப் பார்த்து, “முறையாக கைது குறிப்பாணையுடன் இதுவரை கொண்டு வாருங்கள். இவரது நண்பருக்கு கைது செய்யப்பட்டது பற்றி தகவல் தெரிவியுங்கள்” எனக் கூறி அனுப்பி வைத்தார்.

பின்பு என்னை வள்ளியூர் காவல் நிலையத்தி லிருந்து நான்குநேரியில் உள்ள வள்ளியூர் நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். வள்ளியூர் நீதிபதி அவர்களிடம் நான், “கைது குறிப்பாணையில் ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து என்னை கைது செய்த நேரம் தவறாக காட்டப்பட்டுள்ளதை நீதிபதி பதிவு செய்ய வேண்டும் எனக் கூறினேன். அவரும் பதிவு செய்து கொள்வதாக கூறினார். மேலும் கூடன்குளம் மருத்துவமனையில் இருந்தபோது எனது காலில் அடிப்பட்டு இருந்தது தெரியவில்லை. இப்போது தான் வலிக்கிறது எனப் பார்க்கும்போது காவல்துறை யினர் என்னைப் பிடித்து, இழுத்து தூக்கி வந்தபோது, அவர்கள் காலால் எனது காலை மிதித்ததால், 2 கால்களும் சரிந்ததால் ஏற்பட்ட காயம் தெரிகிறது என தெரிவித்தேன். அவர் சிறைக்குக் கூட்டிச் செல்லும் முன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்பு கூட்டிச் செல்லுங்கள்” என்றார்.  வள்ளியூர் நீதிபதியிடம் நான், ‘சிறையில் காலையில் மருத்துவரைப் பார்ப்பேன். அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தேன்.

நாங்குநேரியில் உள்ள வள்ளியூர் நீதிபதி வீட்டில் இருந்து புறப்பட்டு 19.9.2017 அதிகாலை சுமார் 3 மணியளவில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நான் ஒப்படைக்கப்பட்டேன்.

என்னை வாரண்ட் எதுவும் காட்டாமல் இலங்கை வெள்ளை வேன் கடத்தல்போல் என்னை தூக்கி கடத்தி வந்ததும் கைது செய்யும்போது நீதியரசர் டி.கே.பாசு, வழிகாட்டல உத்தரவு எதையும் மதித்து நடக்காமல் செயல்பட்டும், என்னை கொலை செய்ய கடத்துகிறார்களோ என்ற கடும் மனஉளைச்சலை மனப் பாதிப்பை எனக்கும், என்னை சார்ந்தவர் களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த ஆறு காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமாய் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் என்னை சட்டவிரோதமாக கடத்தி வந்த காவல்துறையினரின் அலைபேசியை பறிமுதல் செய்தும், அவர்கள் அலைபேசி பதிவில் உள்ள பேச்சை வைத்து அவர்களது நோக்கம் என்னை கடத்தி என்ன செய்வது யாருக்காக இதை செய்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். எனது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

(நிறைவு)

பெரியார் முழக்கம் 18012018 இதழ்

You may also like...